மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு—பகுதி 10 உபசரிக்க நாடுதல்

Posted byTamil Editor August 6, 2024 Comments:0

(English version: “The Transformed Life – Pursue Hospitality”)

ரோமர் 12:13-ன் இரண்டாம் பகுதி, “அந்நியரை உபசரிக்க நாடுங்கள்” என்று நம்மை அழைக்கிறது. “அந்நியரை உபசரித்தல்” என்ற வார்த்தையானது “அந்நியர்களை அன்புடன் உபசரித்தல்” என்று பொருள்படும் வார்த்தைகளில் இருந்து வந்தது. இவ்வார்த்தகளை ஒன்றாகச் சொன்னால், “அந்நியர்களிடம் அன்பு காட்டுங்கள்” என்று அர்த்தமாகும். “நாடுங்கள்” என்ற வார்த்தையை “ஆவலுடன் பின்தொடர்வது” என்று மொழிபெயர்க்கலாம். இந்த இரண்டு வார்த்தைகளையும் நாம் இணைக்கும்போது, அந்நியர்களிடம் ஆவலுடன் அன்பைக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தை நாம் பெறுகிறோம். இது அவர்களின் தேவைகளை சந்திப்பதின் மூலமும், அவர்களுக்குத் தங்கள் வீட்டின் கதவுகளைத் திறந்து, பாதுகாப்பை வழங்குவதன் மூலமும் அடிக்கடி வெளிப்படுத்தப்படும் அன்பாகும். பவுலின் கூற்றுப்படி, கிறிஸ்துவைப் போல ஆவியானவரால் மறுரூபமாக்கப்படும் விசுவாசியின் வாழ்க்கை முறை இதுவாக இருக்க வேண்டும்.

இதற்கு வேதத்தில் பல உதாரணங்கள் உள்ளன. மனித ரூபத்தில் வந்த தேவதூதர்களை ஆபிரகாம் தன் கூடாரத்திற்குள் வரவழைத்து அவர்களுக்கு உணவு வழங்கினார் [ஆதியாகமம் 18:1-8]. லோத்தும் அவ்வாறே செய்தார் [ஆதியாகமம்19:1-11]. யோபு தனது நண்பர்களிடம் தனது நேர்மைக்காக வாதாடியப்போது, இந்த வார்த்தைகளைக் கூறினார், “பரதேசி வீதியிலே இராத்தங்கினதில்லை; வழிப்போக்கனுக்கு என் வாசல்களைத் திறந்தேன்” [யோபு 31:32].

உபசரிக்க வேண்டும் என்ற கட்டளையானது, தேவனின் மக்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் பிரவேசிக்க ஆயத்தமாகிக்கொண்டிருக்கும்போது, பழைய ஏற்பாட்டிலேயே தேவனால் கொடுக்கப்பட்டது, “நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தபடியால், அந்நியரைச் சிநேகிப்பீர்களாக” [உபாகமம் 10:19]. ஏன்? ஏனெனில் கடவுள் தாமே அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார். [உபாகமம் 10:18].

நாம் புதிய ஏற்பாட்டிற்கு வரும்போது, உபசரித்தலைப் பின்பற்றுவதற்கான கட்டளைகள் மாறாமல் அப்படியே இருப்பதைக் காண்கிறோம். அந்நியர்களிடம் அன்பையும் அக்கறையையும் காட்ட வேண்டும். உண்மையில், சபையில் ஒரு போதகராக அல்லது மூப்பராக இருப்பதற்கு, உபசரிப்பும் ஒரு பண்பாகும். “ஆகையால் கண்காணியானவன்…அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்” [1 தீமோத்தேயு 3:2; தீத்து 1:8]. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது ஒரு போதகரிடமிருந்து தொடங்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்!

விதவைகள் கூட்டத்தில் சேர்க்கப்பட வேண்டியவர்களைக் குறித்து “பிள்ளைகளை வளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக்கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து, இவ்விதமாய் நற்கிரியைகளைக்குறித்து நற்சாட்சி பெற்றவளுமாயிருந்தால், அப்படிப்பட்ட விதவையையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது [1 தீமோத்தயு 5: 10]. எபிரெய நிருபத்தின் எழுத்தாளர், இந்த வார்த்தைகளால் அந்நியர்களிடம் கூட உபசரிப்பு காட்டும்படி அனைத்து விசுவாசிகளுக்கும் கட்டளையிடுகிறார்: “அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு” [எபிரெயர் 13:2].

மேலும் 1 பேதுரு 4:9ல், உபசரிப்பிற்கான இந்தக் கட்டளை அந்நியர்களை மட்டுமல்லாமல் “முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்” என்று அறிமுகமான விசுவாசிகளையும் உள்ளடக்கியிருக்கிறது. குறிப்பாக பேதுருவின் காலத்தில், இது ஆபத்தான விஷயமாக இருந்திருக்கும். உபத்திரவம் அதிகரித்து வருவதால், மற்ற விசுவாசிகளுக்கு தங்கள் வீடுகளைத் திறப்பவர்கள் தாங்களும் ஆபத்தில் சிக்கிக்கொள்ளக்கூடும். ஆனாலும், உபசரிக்க வேண்டும், அதுவும் “முறுமுறுக்காமல்” இருக்க வேண்டும் என்பதே கட்டளை. உபசரிக்கும்போது குறை கூறுவதும், முறுமுறுப்பதும் இருக்கக்கூடாது.

ஒரு சமயம் தன்னைச் சந்திக்கச் சிலர் வந்திருக்கையில், ஒரு தாய் தன் இளம் மகளை பார்த்து உணவுக்காக ஜெபிக்கும்படி கூறினாள்.  மகள் ஜெபிப்பதற்கு தயங்குவதைப் பார்த்து, “வெட்கப்படாதே. இன்று மதிய உணவு நேரத்தில் நான் எப்படி ஜெபித்தேனோ அப்படியே ஜெபி” என்று கூறினாள்.  உடனே அந்த மகள், “ஆண்டவரே, இவர்கள் ஏன் இன்று இங்கு வந்திருக்கிறார்கள்?” என்று கேட்டாள்.

பிள்ளைகள் தாங்கள் கவனிப்பதை வேகமாகப் பிடித்துக்கொள்கிறார்கள்! நாம் மகிழ்ச்சியான ஆவியுடன் உபசரிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்!

இதன் முக்கிய அம்சம் இதுதான்: உபசரித்தல் என்பது சில விசுவாசிகளுக்கு மட்டும் உடற்பயிற்சி செய்வதற்கான பரிசு அல்ல. எல்லா விசுவாசிகளும் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆர்வமாக பின்பற்றவும், நடைமுறைப்படுத்தவும் கொடுக்கப்பட்ட ஒரு கட்டளையாகும். கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் என்று கூறிக்கொள்ளும் அனைவரும் தொடர்ந்து உபசரித்தலை நாட வேண்டும் என்று புதிய ஏற்பாடு மிகத் தெளிவாகக் கூறுகிறது. ஆரம்பகால திருச்சபை இதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டது. முதல் நூற்றாண்டின் இறுதியில், பயணப்பட்டு வந்த மிஷனரிகளுக்கு விசுவாசிகள் தங்கள் வீடுகளை திறந்து, அவர்களின் ஊழியத்தை ஆதரிப்பது பொதுவாக இருந்தது. அப்போஸ்தலனாகிய யோவான் இந்த வார்த்தைகளின் மூலம் விசுவாசிகளைப் பாராட்டுகிறார், பிரியமானவனே, நீ சகோதரருக்கும் அந்நியருக்கும் செய்கிற யாவற்றையும் உண்மையாய்ச் செய்கிறாய். அவர்கள் உன்னுடைய அன்பைக்குறித்துச் சபைக்குமுன்பாகச் சாட்சி சொன்னார்கள்; தேவனுக்கு முன்பாகப் பாத்திரமானபடி அவர்களை நீ வழிவிட்டனுப்பினால் நலமாயிருக்கும். ஏனெனில் அவர்கள் புறஜாதியாரிடத்தில் ஒன்றும் வாங்காமல் அவருடைய நாமத்தினிமித்தம் புறப்பட்டுப்போனார்கள். ஆகையால் நாம் சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாயிருக்கும்படி அப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக் கொள்ளக் கடனாளிகளாயிருக்கிறோம்” [3 யோவான் 1:5-8].

உபசரித்தல் என்று வரும்போது, அதில் ஒரு ஆபத்து இருக்கிறது. நம் வீடுகளை எல்லோருக்கும் ந திறந்துக்கொடுக்கக் கூடாது.  சில நபர்களை பொருத்தளவில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று வேதம் தெளிவாகக் கூறுகிறது.  இதை நான் 2 வகைகளில் சிந்திக்கிறேன். முதல் வகையினர் கள்ளப் போதகர்கள் [2 யோவான் 1:7-11; தீத்து 3:10-11; 2 தீமோத்தேயு 3:5] மற்றும் இரண்டாவது வகையினர் மனந்திரும்பாத விசுவாசிகள் [1 கொரிந்தியர் 5:11]. எனவே, இந்த கட்டளையை நாம் நடைமுறைப்படுத்தும்போது, ​​இந்த வேதாகமக் கட்டளைகளின்படி நாம் விவேகத்துடன் செயல்பட வேண்டும்.

உபசரித்தலை குறித்து வேதம் என்ன சொல்கிறது என்று ஒரு சிறிய கண்ணோட்டத்தைப் பார்த்த பிறகு, இந்த கட்டளையை நடைமுறையில் எப்படிப் பயன்படுத்தக் கூடும் என்ற 2 அம்சங்களைப்பார்ப்போம்:

1. பல விசுவாசிகள் ஏன் உபசரித்தலை அதிகம் நாடுவதில்லை?

2. விசுவாசிகள் இன்னும் அதிகமாக உபசரித்தலை நாடுவதெப்படி?

1. பல விசுவாசிகள் ஏன் உபசரித்தலை அதிகம் நாடுவதில்லை?

5 காரணங்கள் இதற்கு கொடுக்கப்பட்டுள்ளன.

1. பிரிந்திருக்கும் குடும்பம்.  இதுபோன்ற சந்தர்ப்பங்களில்,உபசரிக்கும்படிக்கு  வீட்டிற்கு அழைத்துவராமல்,  வெளியே உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். அவர்களை வீட்டிற்கு அழைத்து வராமல் நீங்கள் எப்படி ஆசீர்வாதமாக இருக்க முடியும் என்பதைக் காட்ட தேவனிடம் கேளுங்கள். ஒரு தேநீர் கடையில் மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு நீங்கள் எவ்வாறு சேவை செய்யலாம் என்பதைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். இயன்றவரை அவர்களைச் சந்தித்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள்.

2. பயம்.  கூட்டம் அதிகமாக இருந்தால் வெளியில் வருவதற்கு சிலர் பயப்படுவார்கள் அல்லது வெட்கப்படுவார்கள். அவர்கள் இயல்பிலேயே தன்னம்பிக்கை குறைந்தவர்களாக இருப்பார்கள். நீங்கள் அப்படிப்பட்டவர்களில் ஒருவராக இருந்தால், இந்த பிரச்சனையை சமாளிக்க தேவனின் உதவியை நாடுங்கள். ஒருமுறை நீங்கள் மக்களுடன் கலந்து, அவர்கள் தங்கள் இருதயங்களை உங்களிடம் மனந்திறந்து பேசினால், கிறிஸ்துவின் அன்பை அவர்களிடம் காட்டுவது ஒரு அருமையான அனுபவமாக இருக்கும்.

3. பெருமை.  வீடு, பணம், அந்தஸ்தை அடிப்படையாக வைத்து மக்கள் எவ்வாறு கணிப்பார்கள் என்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள், இப்படிப்பட்டவர்களின் வீட்டில் விருந்தினர்கள் அரிதாகவே வருவார்கள். பெரும்பாலும் அது தவிர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது என்றாலும் பிரச்சினை வீட்டின் அளவு இல்லை. உண்மையான அடிப்படைக் காரணம் பெருமை. எனது வீட்டின் அளவு அல்லது தோற்றத்தின் அடிப்படையில் “நான் எப்படி மதிக்கப்படுவேன்” என்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. அதுதான் பிரச்சினை.

பொழுதுப்போக்கிற்கும், உபசரிப்புக்கும் வித்தியாசம் உள்ளது. பெருமை மகிழ்விக்க விரும்புகிறது, பணிவு உபசரிக்க விரும்புகிறது. “உபசரித்தல்” மற்றும் “பொழுதுபோக்கிற்கு” இடையே பின்வரும் வேறுபாடுகளை “ஓபன் ஹார்ட், ஓபன் ஹோம்” [Elgin, Ill.: Cook, 1976] என்ற புத்தகத்தில் அதின் ஆசிரியர் கரேன் மெயின்ஸ் இவ்வாறு கூறுகிறார்:

“எனது வீடு, அழகான அலங்காரம், ருசியான சமையலால் உங்களை ஈர்க்க விரும்புகிறேன்” என்று பொழுதுப்போக்குகிறவர் கூறுகிறார். உபசரித்து, ஊழியம் செய்பவர், “இந்த வீடு என் ஆண்டவரின் பரிசு. அவர் விரும்பியபடி நான் பயன்படுத்துகிறேன்” என்று கூறுகிறார் உபசரிப்பு சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பொழுதுபோக்கு பொருட்களை முன்னிறுத்துகிறது. “நான் வீட்டைக் கட்டி முடித்ததும், வரவேற்பறையை அலங்கரித்து, வீட்டை சுத்தம் செய்துவிட்டு, பிறகு நான் மக்களை அழைக்கத் தொடங்குவேன்” என்று கூறுகிறது.  உபசரிப்பு மக்களுக்கு முதலிடம் தருகிறது. “அலங்காரப் பொருட்கள் இல்லை. ஆனால், நாம் தரையில் அமர்ந்து சாப்பிடுவோம்.  எங்கள் வீடு வசதி குறைவானது, அலங்காரத்தை ஒருபோதும் செய்து முடிக்க முடியாது—நீங்கள் எப்படியும் வாருங்கள். நீங்கள் நண்பர்கள்—எங்களுடன் வீட்டிற்கு வாருங்கள்” என்று அழைக்கிறது.

பொழுதுபோக்குகிறவர்கள் “இந்த வீடு என்னுடையது, என்னுடைய ஆளுமையின் வெளிப்பாடு. தயவுசெய்து பாருங்கள், பாராட்டுங்கள் என்று” பெருமையாக அறிவிக்கிறார்கள். உபசரிப்பவர்கள் என்னுடையதெல்லாம் உங்களுடையவைகள் என்று கூறுகிறார்கள்.

4. முன்கூட்டியே கணிப்பது.  நான் என்னை போன்றவர்களை மட்டுமே அழைக்கிறேன் என கூறுவது மற்றொரு பொதுவான காரணம். உள்ளுக்குள் இனவாத மனப்பான்மை இருப்பதைக் காட்டுகிறது, வேதம் அதைக் கண்டிக்கிறது. உபாகமம் 10:18-20ஐ வாசியுங்கள். கர்த்தருக்குப் பயந்து அந்நியரை விரும்பி வரவேற்க வேண்டும். தேவன் இனவெறி மனப்பான்மையை வெறுக்கிறார், மேலும் அத்தகைய சிந்தனைக்கு அடிபணிவதற்கு எதிராகவும் நாம் போராட வேண்டும். நாம் நம் எதிரிகளுக்கும் அன்பை காட்டி, ஜெபத்தையும், நன்மையையும் செய்ய வேண்டும்!

5.சோம்பல்.  இறுதியான குறிப்பு ஆனால், மதிப்பு குறைந்த குறிப்பல்ல. உபசரிக்கும் வேலையை நாங்கள் வெறுக்கிறோம். ஏனெனில், எனக்கு அதிக வேலை இருக்கிறது. ஓய்வெடுக்கவும் அமைதியாக இருக்கவும் எனக்கு நேரம் தேவைப்படுகிறது. ஒருவேளை அடுத்த வாரம், அல்லது அடுத்த மாதம் பார்த்துக்கொள்ளலாம். இப்படியானால், நாம் நம்மைப் பற்றியும் நம் வசதிகளைப் பற்றியும் மட்டுமே சிந்திக்கிறோம். சிரமப்படுவதை விரும்புவதில்லை. அது கிறிஸ்துவைப் போன்ற சிந்தனை அல்ல. நாம் மனச்சோர்வடைந்தாலும், மற்றவர்களை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்த நேரத்தைச் செலவிடும்போது, நம் இருதயங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொண்டுவருவதற்கு தேவன் ஒரு வழியை உண்டாக்குகிறார் என்பதை நினைவில் கொள்ளத் தவறுகிறோம்.

இதனுடன் இன்னும் பல குறிப்புகள் சேர்க்கப்படலாம் என்று நான் நம்புகிறேன். ஆனால் இவை மிகவும் பொதுவானவை, இவை விசுவாசிகளை உபசரிக்க வேண்டும்  என்ற  கட்டளையை செயல்படுத்துவதிலிருந்து தடுக்கிறது.  தற்போது இதற்கான தீர்வைப் பார்ப்போம். நாம் எப்படி அதிக உபசரிப்பை காட்டலாம்?

2. விசுவாசிகள் இன்னும் அதிகமாக உபசரித்தலை நாடுவதெப்படி?

இதற்கு 5 குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

1.எளிமையை கடைப்பிடித்தல். உபசரிப்பு என்று வரும்போது பெரும்பாலும் நாம் அதை மிகைப்படுத்தி தவறு செய்கிறோம். நான் சொல்வது என்னவென்றால், ஒருவரை உபசரிக்கும்போது அதிக நேரமும், முயற்சியும் எடுக்கப்படுகிறது. மேலும் இது ஒரு மனிதனை எளிதில் சோர்வடையச் செய்யும். இதன் விளைவாக அடிக்கடி உபசரிப்பதிலிருந்து தடுத்துவிடும்.  எனவே, எளிமையாக இருங்கள் என்பதே எனது பரிந்துரை; அந்த வகையில், மக்களை அழைப்பதற்கும் உண்மையில் நேரத்தை செலவிடுவதற்கும் அவர்களின் சுமைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் அதிக வாய்ப்புகள் இருக்கக்கூடும்.

“எங்களிடம் போதுமான இடம் இல்லை, நான் ஒரு நல்ல சமையல்காரன் அல்ல, பழகுவதில் பயங்கரமானவன்.” என்று கூறாதீர்கள். உங்களிடம் உள்ளதைக் கொண்டு சிறந்ததைச் செய்யுங்கள். உங்களுக்குக் கொடுக்கப்பட்டதில் உண்மையாக இருங்கள்! சில சமயங்களில், இது காபி மற்றும் சிற்றுண்டி அளவில் மட்டுமே இருக்கும். இது அதைவிட அதிகமாக இருக்க வேண்டியதில்லை. மற்றவர்களை ஊக்குவிக்க ஒன்றுபடுவதே முக்கியமானது. எளிமையாக இருங்கள்!

2.சீராக வைத்தல். அடிக்கடி இந்த கட்டளையை தொடர்ந்து பயிற்சி செய்வது ஒரு சவாலான காரியமாகும். ஒரு நடைமுறை இலக்கை அமையுங்கள். பிறரை ஊக்குவிக்க குறைந்தது ஒரு குடும்பத்தை 2 வாரங்களுக்கு ஒருமுறை அழையுங்கள். ஒரே நபர்களை மீண்டும் மீண்டும் அழைக்க வேண்டாம். இது மற்றவர்களை அழைக்கும் நேரத் உங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குவதை தடுக்கும். லூக்கா 14:13-14-ல் உள்ள இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு இணங்க நாம் செய்ய வேண்டும். “நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக. அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும்.”

3.கிறிஸ்துவை மையமாக வைத்தல். அவர்கள் விசுவாசிகளாக இருந்தால், ஆவிக்குரிய வாழை்வை ஊக்குவிக்க முயற்சி செய்யுங்கள். சிறிது நேரம் ஜெபியுங்கள். பெரும்பாலும், பல விஷயங்களைப் பற்றி பேசுவதற்கு அதிக நேரம் செலவிடப்படுகிறது. ஆனால், சாப்பிடுவதற்கு முன் மட்டுமே ஜெபம் செய்வதில் நேரம் செலவிடப்படுகிறது. ஜெபத்தில் நேரத்தை செலவிட சில நிமிடங்களை ஒதுக்க முயற்சி செய்யுங்கள், இது மிகவும் ஊக்கமளிக்கும். மேலும், அவர்கள் அவிசுவாசிகளாக இருந்தால், தேவன் வாய்ப்புகளை அளிப்பதால் கிறிஸ்துவைப் பற்றி பேச முயற்சி செய்யுங்கள். ஜெபித்து ஆண்டவர் வாசலை திறக்க அவரிடம் இறைவனிடம் கேளுங்கள்.

4.வாய்ப்புகள் கிடைக்க ஜெபியுங்கள். ஆரம்பகால சபையைப் போலல்லாமல், மக்கள் பொது இடங்களில் தங்குவது தற்போது ஆபத்தானதல்ல, அது மிகவும் பாதுகாப்பானது [பெரும்பாலான இடங்களில்]. எனவே, சில சமயங்களில், அந்நியர்களை அழைப்பது ஒருபுறமிருக்க, ஆட்களைக் கண்டுபிடிப்பது நமக்கு கடினமாக இருக்கலாம். தொடர்ந்து ஜெபம் செய்து, வாய்ப்புகளைத் தேடுங்கள். பொது இடங்களில் நண்பர்களை உருவாக்குங்கள், அது உங்கள் குழந்தைகள் செல்லும் பள்ளி, உங்கள் சுற்றுப்புறம், பணியிடமாக இருக்கலாம். மேலும் அவர்களை உங்கள் வீட்டிற்கு அழையுங்கள். நீங்கள் பேசும்போது, ​​மக்கள் அரவணைத்து தங்கள் பாரங்களைப் பகிர்ந்து கொள்வதைக் காணலாம்.

5.விசுவாசத்தோடு தொடர்ந்து செய்யுங்கள்.  ஒவ்வொரு நாளும், தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய விசுவாசம் அவசியம். உங்கள் உபசரிப்பு தொலைநோக்கு விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று விசுவாசியுங்கள். அனால், அதை நீங்கள் இப்போது உணர முடியாவிட்டாலும், பின்னர் உணருவீர்கள்.

ஒரு வேதாகம கல்லூரி மாணவர் ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் முப்பது மைல்கள் பயணித்து   சபைக்குச் செல்வது வழக்கும், அப்படி செல்லும்போது அவர் அடிக்கடி மற்றவர்களின் வாகனத்தில் ஏறி செல்வார். ஒரு நாள் அவர் நன்றாக உடையணிந்திருப்பதைக் கவனித்த ஒரு இளைஞன், நானும் உங்களோடு சபைக்கு வர முடியுமா? என்று கேட்ட, அவர் “நிச்சயமாக நீங்களும் வாருங்கள்” என்றார்.

அந்த மனிதன் சபைக்கு வந்தான். பின்னர், சபையை சேர்ந்த ஒரு குடும்பம் அவனை மதிய உணவுக்கும், ஐக்கியத்திற்கும் தங்கள் வீட்டிற்கு அழைத்தது. அங்கு இருந்தபோது, அவன் குளித்தான், சில சுத்தமான ஆடைகள் மற்றும் சூடான உணவு அவனுக்கு கொடுக்கப்பட்டது. இளைஞருடனான உரையாடலில், அவன் ஒரு கிறிஸ்தவர் என்பதை அவனுக்கு விருந்துக்கொடுத்தவர்கள் கண்டறிந்தனர், ஆனால் அவன் கர்த்தருடன் ஐக்கியங்கொள்ளாமல் இருந்தான். அவனது வீடு வேறொரு மாநிலத்தில் இருந்தது, அவர் திரும்பி தன் வழியில் கடந்து சென்றான்.  அவனுக்கு மாலையில் பஸ் டிக்கெட் வாங்கிக் கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

ஒரு வாரம் கழித்து, அந்த வேதாகம கல்லூரி மாணவருக்கு அந்த மனிதனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்துடன் ஒரு செய்தித்தாள் இணைக்கப்பட்டிருந்தது, அதில் “மனிதன் கொலைக்காக தன்னைத்தானே மறைத்துக் கொள்கிறான்” என்று தலைப்புச் செய்திகள் எழுதப்பட்டிருந்தது. இந்த இளைஞன் திருட்டும்போது ஒரு சிறுவனைக் கொன்றுவிட்டு சிறிது காலம் மறைவாய் வாழ்ந்து வந்தான். ஆனால், விசுவாசிகளின் கருணையும் உபசரிப்பும் அவனைக் குற்றவாளியாக உணர வைத்தது. அவன் தேவனுடன் ஐக்கியங்கொள்ள விரும்பினான், மேலும் தனது குற்றத்திற்கான சரியான தண்டனை பெறவேண்டும் என்பதை அவன் அறிந்துக்கொண்டான்.

உண்மையாக உபசரித்ததின் மூலம், தேவனின் பார்வையில் சரியானதைச் செய்யும்படி ஒரு மனிதனைத் தூண்டியதையும், அதன்மூலம் அவன் தன் ஆண்டருடன் ஐக்கியங்கொள்ள உதவினதையும் அந்த விசுவாசிகள் அறிந்திருக்கவில்லை. அதனால்தான், விசுவாசத்தில், உபசரித்தலைத் தொடர இந்தக் கட்டளை உட்பட, தேவனுடைய அனைத்துக் கட்டளைகளையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

முடிவாக, உபசரித்தலைப் பயிற்சி செய்வது ஒரு முக்கியமான கட்டளையாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்துவே அதை உண்மையான விசுவாசத்தின் பண்பாக சமப்படுத்திய அளவுக்கு முக்கியமானது [மத்தேயு25:35-46]. இந்த கட்டளையை நடைமுறைப்படுத்த சிறந்த உந்துதலை எப்படி பெறுவது? இயேசுகிறிஸ்து தம் இரத்தத்தை சிலுவையில் சிந்தி, நம்மைப் போன்ற பாவிகளுக்கு பரலோகத்தில் தமது வீட்டை கொடுத்தார். அப்படியிருக்க, இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் நம் வீடுகளை மற்றவர்களுக்கு திறக்க கூடாதா? எல்லாவற்றிற்கும் மேலாக, கிறிஸ்தவமானது “திறந்த கை, திறந்த இருதயம் மற்றும் திறந்த வாசல் ஆகியவற்றின் மதம்” என்று அழைக்கப்படுகிறது. நாம் கிறிஸ்துவைப் போல மறுரூபமாக்கப்படுவதால், இந்த சத்தியங்கள் நம் வாழ்வில் தெளிவாக இருக்க வேண்டும்.

Category
Subscribe
Notify of
guest
0 கருத்துக்கள்
Oldest
Newest
Inline Feedbacks
View all comments