விசுவாசிகளின் இருதயம் ஒரு நன்றியுள்ள இருதயம்

Posted byTamil Editor August 1, 2023 Comments:1

(English Version: The Christian heart is a Thankful Heart)

நன்றியுணர்வு என்பது பெரும்பாலும் வழக்கொழிந்த பழக்கம் என்கிற உண்மையானது இந்த வாழ்க்கையின் நிகழ்வின் மூலம் விளக்கப்படுகிறது. எட்வர்ட் ஸ்பென்சர் என்பவர்  இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகிய எவன்ஸ்டனில் இருக்கும்  ஒரு வேதாகம கல்லூரி மாணவர். உயிர்காக்கும் மீட்புக் குழுவிலும்  அவர் இடம்பெற்றிருந்தார். எவன்ஸ்டனுக்கு அருகிலுள்ள மிச்சிகன் ஏரியில்  ஒரு படகு மூழ்கியபோது, மிகவும் குளிர்ந்த நீரில் மறுபடியும் மறுபடியுமாக  சென்று ​​ 17 பயணிகளை எட்வர்ட் காப்பாற்றினார்.  இதில், அவரது உடல்நிலை நிரந்தரமாக பாதிக்கப்பட்டு, சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மரித்தார். அவரது இறுதிச் சடங்கில், அவர் காப்பாற்றியவர்களில் ஒருவர் கூட அவருக்கு நன்றி செலுத்த வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படிப்பட்ட கதையைப் படித்துவிட்டு, “அந்த 17 பேரும் எப்படி இவ்வளவு நன்றி கெட்டவர்களாக இருக்க முடியும்?” என்று நாம் நினைக்கக் கூடும். ஆனால் நித்திய  ஆக்கினையாகிய  மிகப் பெரிய ஆபத்தில் இருந்து விசுவாசிகள் காப்பாற்றப்பட்ட போதிலும் அதே நன்றியுணர்வற்ற பாவத்தில் குற்றவாளிகளாக இருக்கிறார்கள்.

நன்றி செலுத்துதல் என்பது கிறிஸ்தவ வாழ்வில்  எப்பொழுதாவது  நடக்கும் ஒரு பண்பல்ல , மாறாக வழக்கமாக நடக்கும்  ஒரு அம்சம் என்று பல வேதாகம குறிப்புகள் சான்றளிக்கின்றன. இதோ சில உதாரணங்கள்:

அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள். [சங்கீதம் 100:4].

அல்லேலூயா, கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.” [சங்கீதம் 106:1] 

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து [எபேசியர் 5:20]

நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக.” [கொலொசெயர் 2:6]

இந்த வசனங்களின் அடிப்படையில், ஒன்று மட்டும் தெளிவாகிறது: நன்றி செலுத்துதல் என்பது விசுவாசிகளுக்கு, ஒருமுறை மட்டுமே   காண்பிக்கும் செயலாக இருக்க முடியாது. மாறாக, அது நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்! எல்லா நேரங்களிலும் நன்றியுள்ளவர்களாக நாம் நம்மை அடையாளப்படுத்தப்பட வேண்டும்!

நன்றி உணர்வை நாம் ஏன்  வெளிப்படுத்த வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என நினைக்கிறீர்கள்? இதன் முக்கியத்துவம் என்ன? சங்கீதம் 50:23 ஆம் வசனம் இதற்கு ஒரு குறிப்பைக் கொடுக்கிறது என்று நான் நம்புகிறேன்:  ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்.” நாம் நன்றி செலுத்துவது தேவனுக்கு மகிமையை செலுத்துகிறோம். எனவே, இங்கே ஆபத்தில் இருப்பது தேவனின் மகிமை. அது ஒரு சாதாரண பிரச்சினை அல்ல!

இந்தக் கட்டுரையானது 3 விஷயங்களை தொகுத்து வழங்குவதன் மூலம், விசுவாசிகள் எல்லா நேரங்களிலும் நன்றியுடன் இருக்க உதவ முயல்கிறது: (I) நன்றியற்ற இருதயத்தின் ஆபத்துகள், (II) நன்றியுள்ள இருதயத்தை வளர்ப்பதன் நன்மைகள் மற்றும் (III) நன்றியுள்ள இருதயத்தை வளர்ப்பதற்கான ஆலோசனைகள்.

நாம்  தொடர்ந்து செல்வதற்கு முன், நன்றியுணர்வின் அடிப்படை வரையறை இங்கே காணப்படுகிறது: நன்றியுணர்வு என்பது நமது ஆவிக்குரிய மற்றும் சரீர தேவைகளை வழங்கும் சர்வ வல்லமையுள்ள  தேவனை முழுமையாக சார்ந்து இருக்கிறோம் என்ற உண்மையை விருப்பத்துடன் அங்கீகரிப்பதாகும்.

I. நன்றியற்ற இருதயத்தின் ஆபத்துகள்.

நன்றியற்ற இருதயத்துடன் தொடர்புடைய 2 ஆபத்துகளை நாம் பார்க்கலாம்.

ஆபத்து # 1. நன்றியற்ற ஆவி ஒரு அவிசுவாசியின் அடையாளம்.

அவிசுவாசிகளின் வாழ்க்கை முறையை விவரிப்பதில், ரோமர் 1:21ல்  அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்தார்கள்” என்று கூறப்பட்டுள்ளது. பூமிக்குரிய பல ஆசீர்வாதங்களைப் பெற்றிருந்தாலும் [மத் 5:45; அப்போஸ்தலர் 14:15-17], எல்லா ஆசீர்வாதங்களுக்கும் ஆதாரமாக இருக்கும் தேவனுக்கு அவிசுவாசிகள் நன்றி செலுத்தத் தவறிவிடுகிறார்கள். எனவே, யாரேனும் ஒருவர் தன்னை விசுவாசி என்று கூறிக்கொண்டு, நன்றியற்ற ஆவியை உடையவராக இருந்தால், அவர்களை அவிசுவாசிகள் என்றே வேதம் விவரிக்கிறது.

ஆபத்து # 2. வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய  விருப்பத்திற்கு கீழ்ப்படியாததன் வெளியரங்கமான உணர்வாகும். 

1 தெசலோனிக்கேயர் 5:18 ல் “எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது என்று கட்டளையிடப்பட்டுள்ளது. எல்லா சூழ்நிலைகளிலும் நன்றியுள்ள இருதயத்தை தேவன்  தமது பிள்ளைகளிடமிருந்து விரும்புகிறார். சோகமான சூழ்நிலைகளில் கூட, தேவன் முழு ஆளுகையில் இருக்கிறார் என்பதற்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும், மேலும் அவர்  நம்முடைய நன்மைக்காகவும், அவருடைய மகிமைக்காகவும் எல்லாவற்றையும் செய்கிறார் [ரோமர் 8:28-29].

விசுவாசிகளால் பலரால் பல்வேறு வாழ்க்கைச் சூழ்நிலைகளில் தேவனுடைய சித்தத்தைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. ஏனென்றால், அவர்கள் தங்கள் வாழ்க்கையின் அம்சமாகவே எல்லா நேரங்களிலும் நன்றியுடன் இருக்க வேண்டும் என்ற  தேவனுடைய சித்தத்தை தொடர்ந்து புறக்கணிக்கிறார்கள்.  தம்மால் வெளிப்படுத்தப்பட்ட சித்தத்திற்கு தொடர்ந்து கீழ்ப்படியாதவர்களுக்கு தேவன் தமது சித்தத்தை  இன்னும் அதிகமாக  எப்படி வெளிப்படுத்தக் கூடும்?

ஹிட்லரின் காலத்தில் பல யூதர்களை மறைத்து வைத்திருந்த ஜெர்மனியின் புகழ்பெற்ற விசுவாசியான கோரி டென் பூம் அம்மையார்த ஹைடிங் பிளேஸ்” என்ற தனது புத்தகத்தில், எப்போதும் நன்றியுடன் இருக்கக் கற்றுக் கொடுத்த ஒரு சம்பவத்தை விவரிக்கிறார். கோரி அம்மையாரும் அவருடைய சகோதரி பெட்ஸியும்  தாங்கள் இதுவரை கண்டிராத மிக மோசமான ஜெர்மனின்  ராவன்ஸ்ப்ரூக்   என்ற சிறை முகாமுக்கு மாற்றப்பட்டனர். இந்த முகாமிற்குள் நுழைந்தபோது, அது அதிக நெரிசல் மிக்கதாகவும், அங்கு உண்ணித்தொற்று இருப்பதையும் கண்டனர்.  

அன்று காலை, அவர்களின் வேத வாசிப்பு பகுதியாகிய 1 தெசலோனிக்கேயர் , எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கவும், தொடர்ந்து ஜெபிக்கவும், எப்போதும் நன்றியுடன் இருக்கவும் அவர்களுக்கு நினைவூட்டியது. பெட்ஸி தனது சகோதரியாகிய கோரியிடம் தங்களுடைய புதிய குடியிருப்பின் ஒவ்வொரு விவரத்திற்கும் வேதவாசிப்பின் இடையே நிறுத்தி  கர்த்தருக்கு நன்றி கூறினார். கோரி அம்மையார் முதலில் இதற்கு மறுத்தாலும், இறுதியாக பெட்ஸியின் வேண்டுகோளுக்கு அடிபணிந்தார்.

அந்த முகாமில் கழித்த மாதங்களில், காவலர்களின் தலையீடு இல்லாமல் இவ்வளவு வெளிப்படையாக வேத பாடங்களையும், ஜெபக் கூட்டங்களையும் நடத்த முடிந்ததை  கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். சில மாதங்களுக்குப் பிறகு தான், முகாமில் உண்ணித்தொற்று  இருப்பதால் காவலர்கள் அதற்குள் நுழைவில்லை என்று அவர்கள் அறிந்துக்கொண்டனர்.

நாம் மனத்தாழ்மையுடன் அவருடைய வார்த்தைக்கு அடிபணியும்போது, மிகவும் சவாலான சூழ்நிலைகளிலும் தேவன் அவருடைய மகிமை வெளிப்படுவதற்கு எவ்வளவு அற்புதமாக செயல்படுகிறார்!

கர்த்தராகிய இயேசுவும்  தம்முடைய போதனைகளில், தேவனுக்கு நன்றி செலுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பத்து தொழுநோயாளிகளைச் சுத்திகரித்த பிறகு, ஒருவரே திரும்பி வந்து நன்றி செலுத்துவதைப் பார்த்து, ஆண்டவர்  இவ்வாறு கூறுகிறார்: “அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே [லூக்கா 17:17-18]. இதை எளிமையாக் ககூறுவதென்றால், நன்றியற்ற மனப்பான்மை தேவனுக்கு அதிருப்தியைக் கொண்டுவரும் கீழ்ப்படியாமையின் செயலாகும்.

எனவே, நன்றியற்ற இருதயத்தின் ஆபத்துகள் மிகவும் கடுமையானவை என்பதை நீங்கள் பார்க்கலாம்! இது தேவனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் ஒரு செயலாகும். ஏனெனில், இது அவரது வெளிப்படுத்தப்பட்ட சித்தத்தை மீறுகிற செயல். மேலும்,நன்றியற்றவர்களாக இருந்தால், நம்மை குறித்து   நாம் எவ்வாறு சொல்லிக்கொண்டாலும்,  அவருடைய பிள்ளைகள் இல்லை என்ற நமது உண்மை நிலையை எடுத்துக்காட்டுகிறது!

மறுபுறம், ஒரு நன்றியுள்ள ஆவியோடு நம்மை அடையாளப்படுத்தினால் கிடைக்கப்பெறும் நன்மைகள் பல! அவற்றில் 4 பற்றி பார்ப்போம்.

II. நன்றியுள்ள இருதயத்தை வளர்ப்பதன் நன்மைகள்.

நன்மை # 1. பெருமை  குறைந்துதாழ்மை பெருகுகிறது. 

பெருமையானது நன்றியுள்ள இருதயத்தை வளர்ப்பதற்கு முக்கிய முட்டுக்கட்டைகளில் ஒன்றாக இருக்கிறது. வெற்றியில் நாம் பெருமைப்பாராட்டிக்கொள்ளும் போக்கு நம் அனைவரிடமும் காணப்படுகிறது. இருப்பினும், சகல நன்மைகளும்  சர்வ அதிகாரமுள்ள தேவனின் கரத்திலிருந்து வருகின்றன என்பதையும் அவருடைய இரக்கமின்றிஎந்த நன்மையும்  கிடைக்கப்பெறுவதற்கு சாத்தியமில்லை என்பதையும் நன்றியுள்ள இருதயம் அங்கீகரிக்கிறது. 1கொரிந்தியர் 4:7 ஆம் வசனம் நமக்கு இவ்வாறு நினைவூட்டுகிறது, அன்றியும் உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல் ஏன் மேன்மைபாராட்டுகிறாய்?” 

பெரும் மனிதனாக  இருப்பதற்கான கலை” [தி ஆர்ட் ஆஃப் பீயிங் எ பிக் ஷாட்] என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், பிரபல கிறிஸ்தவ தொழிலதிபர் ஹோவர்ட் பட் என்பவர் இவ்வாறு கூறுகிறார்:

என்னுடைய பெருமையே என்னை தேவனை விட்டு தனித்து செயல்பட வைக்கிறது. நான் என் தலைவிதியின் எஜமானன்,  என் சொந்த வாழ்க்கையை நானே நடத்துகிறேன், என் சொந்த  முடிவுகளை நானே தீர்மானிக்கிறேன், தனியாக செயல்பட வேண்டும் என்று நினைப்பது என்னை ஈர்க்கிறது. ஆனால் எனது நேர்மையின்மையே அந்த பெருமை உணர்வின்  அடிப்படையாக இருக்கிறது. என்னால் தனித்து இயங்க முடியாது. நான் மற்றவர்களின் உதவியைப் பெற்றுதான் வாழ வேண்டும், மேலும் இறுதியில் என்னையே நம்ப முடியாது. எனது அடுத்த மூச்சுக்கு நான் தேவனைச் சார்ந்திருக்கிறேன். நான் ஒரு பலவீனமான, வரம்பிற்கு உட்பட்ட மனிதனாக இருந்துக்கொண்டு கடவுளாக நடிப்பது நேர்மையற்ற செயலேயொழிய வேறேதும் கிடையாதுஎனது பெருமையானது என்னையே உருவ வழிபாடு செய்ய வைக்கிறது . அதுவே நரகத்தின் தேசிய மதம்!

அதே சமயம் நன்றி செலுத்துதல், பெருமைக்கான சரியான சிகிச்சையாக இருக்கிறது. நம்மிடம் இருப்பதெல்லாம் கர்த்தருடைய கிருபையின் பலன் என்று ஒப்புக்கொள்வது மனத்தாழ்மையை அதிகரிக்க வழிவகுக்கும்.

நன்மை # 2. முறுமுறுப்பு குறைகிறதுமனதிருப்தி பெருகுகிறது

நம் வாழ்வில் தேவன் செய்ததற்கும், செய்துகொண்டிருக்கும் காரியங்களுக்கும் நாம் தொடர்ந்து நன்றி செலுத்தினால், முறுமுறுப்பு எனும் பாவத்திற்கு பலியாக மாட்டோம். முறுமுறுப்பு என்பது தவறான சூழ்நிலையைப் பற்றிய உண்மையைக் கூறுவதல்ல, மாறாக  அது நம் வாழ்வின் விவகாரங்களில் தேவனுடைய இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கும் ஒரு அணுகுமுறையாகும். இது பின்வரும் விதத்தில் தன்னை வெளிப்படுத்தும் ஒரு மனப்பான்மையாக இருக்கிறது: “தேவன் உண்மையாகவே என்னை நேசிக்கிறார் என்றால், எனக்கு இதை எப்படி அனுமதிக்க முடியும்?” நம் குறையை வாய்மொழியாக வெளிப்படுத்தாவிட்டாலும் [சிலர் உள்முக சிந்தனையாளர்கள்] அதுவும் பாவம்தான். பாவ சுபாவமுள்ள [நம் அனைவரையும் உள்ளடக்கிய] உயிரினங்கள் பாவங்களின் வெளிச்சத்தில்  எப்படி முறுமுறுக்க  முடியும்?

புலம்பல் 3:39 நமக்கு இவ்வாறு நினைவூட்டுகிறது, உயிருள்ள மனுஷன் முறையிடுவானேன்? அவன் தன் பாவத்துக்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?.” நாம் செய்த பாவங்களின் விளைவாக நாம் எந்த நன்மைக்கும் தகுதியற்றவர்கள் என்பதை புரிந்துகொண்டால், நம் வாழ்வில் தேவனுடைய  இரக்கத்தைப் பற்றி நாம் ஆச்சரியப்படுவோம் – எல்லா சூழ்நிலைகளிலும் திருப்தியுடனும் நன்றியுடனும் இருங்கள், கர்த்தர் என் மேய்ப்பராக இருக்கிறார் நான் தாழ்ச்சியடைவதில்லை” [சங். 23:1].

நன்மை # 3. தேவன் மீதான சந்தேகம் குறைகிறதுஅவர் மீது நம்பிக்கை அதிகரிக்கிறது.

எல்லா நேரங்களிலும் தேவனை நம்புவதற்கு ஒரு குறிப்பிடத்தக்க தடையாக இருப்பது நன்றியற்ற ஆவியாகும். இருப்பினும், இந்த பிரச்சனைக்கு நன்றி செலுத்துதல் சரியான தீர்வை வழங்குகிறது. பவுல் தனது சோதனைகள் அனைத்திலும் தேவனை நம்பினார். ஏனென்றால், அவர் தேவனின் கடந்தகால விடுதலைகளை தொடர்ந்து நினைவில் வைத்திருந்தார், இதனால் எதிர்காலத்திற்காகவும் அவர் மீது நம்பிக்கை வைக்க முடிந்தது. அவருடைய வார்த்தைகளைக் கவனியுங்கள்: “நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். 10 அப்படிப்பட்ட மரணத்தினின்றும் [கடந்தகாலத்திலிருந்து ஆபத்திலிருந்து] அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் மீண்டும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் [எதிர்காலம்]என்று அவரை நம்பியிருக்கிறோம்.” [2 கொரிந்தியர் 1:3, 10].

தேவனுடைய கடந்த கால இரக்கங்களைத் தொடர்ந்து சிந்திக்கும் ஒரு நன்றியுள்ள ஆவி, தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளுக்காக அவரைச் சார்ந்திருக்க பலப்படுத்தப்படுகிறது. இது சந்தேகம், விரக்தி மற்றும் குறுக்குவழிகளில் செல்வது ஆகியவற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.

நன்மை # 4. கவலை குறைகிறதுசமாதானம் பெருகுகிறது

எதிர்மறையானவற்றில் ஆரோக்கியமற்ற கவனம் செலுத்துவதும், தேவனின் ஆசீர்வாதங்களுக்காக நன்றி சொல்ல போதுமான நேரத்தை எடுத்துக் கொள்ளாததும் விசுவாச வாழ்க்கையின் குறைபாடுகளில் ஒன்றாகும். அத்தகைய மனப்பான்மை,  நம் இருதயங்களில் கவலையானது ஆட்சி செய்ய சரியான வாய்ப்பை அமைத்துக்கொடுக்கும். இருப்பினும், தேவனுடைய வார்த்தையில் கவலைக்கான தீர்வு உள்ளது: பிலிப்பியர் 4:6-7 இல் காணப்படுவது போல், நன்றியுள்ள இருதயத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

பிலிப்பியர் 4:6ல் தேவன் நமக்கு இவ்வாறு கட்டளையிடுகிறார்: “நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.நம்முடைய ஜெபங்கள் நன்றியுணர்வோடு சேர்ந்து கொள்ளும்போது, நமக்கு அருளப்படும் தேவனுடைய வாக்குத்தத்தம் என்னவென்றால், அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். [பிலிப்பியர் 4 :7]!

நன்றியுள்ள இருதயத்தை வளர்ப்பதால் ஏற்படும் 4 நன்மைகளைப் பார்த்த நாம், இந்த வகையான இருதயத்தை எவ்வாறு வளர்ப்பது என்பதைப் பார்ப்போம்.

III. நன்றியுள்ள இருதயத்தை வளர்ப்பதற்கான பரிந்துரைகள்.

நன்றியுள்ள இருதயத்தை வளர்ப்பதற்கான 2 பரிந்துரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

 பரிந்துரை # 1. சிலுவையை தவறாமல் பிரதிபலிக்கவும்.

இதுவரை வாழ்ந்த கிறிஸ்தவர்களில் சிறந்தவராகிய அப்போஸ்தலனாகிய பவுல், பல துன்பங்களைச் சந்தித்தாலும், அவர்  எப்பொழுதும் நன்றியுள்ளவராக இருப்பதை நாம் கவனிக்கிறோம். அவருடைய ரகசியம் என்ன1 கொரிந்தியர் 2:2 ல் ஒரு பதில் இருப்பதாக நான் நம்புகிறேன், இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்.அதற்காக, பவுல் மற்ற விஷயங்களைப் பற்றி பேசவில்லை என்று அர்த்தமல்ல. அதே நிருபத்தில், அவர் பல்வேறு தலைப்புகளில் பேசியிருக்கிறார். ஆனால் அவரது முக்கிய கவனம் இயேசுவின் மீதும், முக்கியமாக அவருடைய சிலுவை மரணத்தின் மீதும், உயிர்த்தெழுதல் மூலம் அவர் என்ன செய்தார் என்பதின் மீதும் இருந்தது. அந்த சத்தியங்களை தொடர்ந்து சிந்திக்க அவருக்கு நித்திய கண்ணோட்டத்தை அளித்தது. அது அவர் எந்த சோதனையில் இருந்தாலும், நன்றியுணர்வுடன் நிரம்பி வழிய வழிவகுத்தது!

அதைப்போலவே நாமும் இயேசு சிலுவையில் நமக்காக என்ன செய்தார் என்பதை எவ்வளவு அதிகமாக சிந்தித்துப் பார்க்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

பரிந்துரை  # 2. ஜெபத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக நன்றியுணர்வை இணைத்துக்கொள்ளுங்கள்

இதுவே கொலோசெயர் 4:2 ல் தேவன் நமக்குக் கொடுத்த கட்டளை, “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்.வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நம் ஒவ்வொரு ஜெபத்திலும் நன்றி செலுத்துதல் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும்! தேவன் நமக்காகச் செய்த அனைத்திற்கும் நன்றி சொல்ல நாம் நேரத்தை ஒதுக்க வேண்டும்.

நம் பிள்ளைகள் தேவை ஏற்படும் போது மட்டும் நம்மிடம் பேசி, எப்போதாவது மட்டும்   நன்றி என்ற ஒரு வார்த்தை சொல்வதை வழக்கமாக கொண்டிருப்பதை கற்பனை செய்து பாருங்கள்!  அப்படியிருந்தால் நாம் வருத்தப்படமாட்டோமா? எனினும், நம் பரலோகத் தகப்பனிடம் நம்முடைய தேவைகளுக்காக மட்டுமே செல்வதன் மூலம் நாம் அவரை அடிக்கடி எவ்வளவு துக்கப்படுத்துகிறோம், ஆனால் ஒருபோதும் “நன்றி” என்று சொல்ல மறுக்கிறோம். இனியும் நாம் அவரை துக்கப்படுத்தாமல் இருப்போமாக. தேவன் யார் என்பதற்காகவும், அவர் நமக்காக என்ன செய்திருக்கிறார் என்பதற்காகவும் தொடர்ந்து நன்றி செலுத்த முயற்சி செய்வோமாக.

இறுதி சிந்தனைகள் .

தானியேல், வேதத்தில் நன்கு அறியப்பட்டவரும் நேசிக்கப்பட்டவருமான ஒரு கதாபாத்திரம். இளம் வயதிலேயே கர்த்தருக்காக  உறுதியாக நிற்க அவர் எடுத்த தீர்மானம் பலரை ஊக்கப்படுத்தியுள்ளது [தானியேல் 1]. அவர் தனது வயதான காலத்தில் ராஜாவின் சிலைக்கு மட்டும் ஆராதனை செய்ய வேண்டும் அல்லது சிங்கங்களின் குகையில் தூக்கி எறியப்பட்டு மரணத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஒரு முக்கியமான நெருக்கடியை எதிர்கொண்டார். அவரது எதிர்வினை குறிப்பிடத்தக்கதாக இருந்தது. “தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான். [தானியேல் 6:10].

கவனியுங்கள், தானியேல் தேவனுக்கு எதிராக முறுமுறுக்கவில்லை. “இத்தனை வருடங்களாக நான் உமக்கு விசுவாசமாக இருந்தேன், அதற்கு ஈடான பரிசு இது தானா?” என்று அவர்  கேட்கவில்லை. மாறாக, “தான் முன் செய்துவந்தபடியே தேவனுக்கு நன்றி செலுத்துகிறார். செழிப்பான காலங்களில் வழக்கமாக நன்றி செலுத்திய பழக்கமானது, துன்பமான காலங்களிலும் நன்றி செலுத்த அவருக்கு உதவியது. தேவன் அவருடைய ஜெபங்களைக் கேட்டார்—ஏனென்றால் அது நன்றியுள்ள இருதயத்திலிருந்து வந்தது! நாமும் அத்தகைய இருதயத்தைப் பெற முயற்சி செய்வோமாக.

Category
Subscribe
Notify of
guest
1 கருத்து தெரிவிக்கவும்
Oldest
Newest
Inline Feedbacks
View all comments
இம்மானுவேல் ஜேவியர்
இம்மானுவேல் ஜேவியர்
1 year ago

அருமையான பதிவு.சிந்திக்க வைத்த கட்டுரை