விசுவாசிகள் ஓய்வு நாளை ஆசரிக்க வேண்டுமா?

Posted byTamil Editor August 10, 2025 Comments:0

(English Version: “Are Christians Required to Keep the Sabbath”)

சப்பாத்து எனும் ஓய்வு நாளைக் குறித்து, பொதுவாக 3 கருத்துக்கள் உள்ளன.

கருத்து # 1. ஓய்வு நாள் அனுசரிப்புக்காரர்களின் கருத்து. இந்தக் கண்ணோட்டத்தின்படி, விசுவாசிகள் ஓய்வுநாளில், அதாவது சனிக்கிழமைகளில் ஆராதிக்க  வேண்டும்,. 7வது நாள் அனுசரிப்புக்காரர்கள் [செவன்த் டே அட்வென்டிஸ்ட்] பொதுவாக இந்த குழுவை சார்ந்தவர்கள். 

இந்தக் கருத்தை ஏற்கும் மக்களின் கூற்று, சனிக்கிழமை ஓய்வுநாள் என்று சொல்வது சரி, ஆனால் விசுவாசிகள் சனிக்கிழமைகளில் ஆராதிக்க வேண்டும் என்று கூறுவது தவறு.

கருத்து # 2. ஞாயிற்று கிழமை ஓய்வு நாள். இந்தக் கண்ணோட்டத்தின்படி, பழைய ஏற்பாட்டில் சனிக்கிழமை ஓய்வுநாளாக இருந்ததைப் போலவே, ஞாயிற்றுக்கிழமை, கர்த்தருடைய நாள், கிறிஸ்தவர்களுக்கான ஓய்வு நாளாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். கத்தோலிக்கர்களும், பல சீர்த்திருத்த சபைகளும் இந்தக் கருத்தைக் கொண்டுள்ளனர். இந்த கண்ணோட்டம் முக்கியமாக 16 ஆம் நூற்றாண்டில் பியூரிடன்களின் [Puritans] காலம் முதல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமைகளில் தொழுது கொள்வது  சரியானது என்றாலும், ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவர்களின் ஓய்வு நாள் என்று அழைக்கப்படுவது தவறு, ஏனென்றால் பழைய ஏற்பாட்டில் ஆசரிக்கப்பட்ட  சனிக்கிழமை ஓய்வுநாளானது புதிய ஏற்பாட்டில் ஞாயிற்றுகிழமைக்கு மாற்றப்பட்டதாக வேதத்தில் எங்கும் குறிப்புகள் காணப்படவில்லை.

கருத்து # 3. வேத அடிப்படையிலான கண்ணோட்டம். இந்தக் கண்ணோட்டத்தின்படி, சனிக்கிழமை ஓய்வுநாளாக இருப்பினும், புதிய ஏற்பாட்டில் எந்த இடத்திலும் விசுவாசிகள் அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டளையிடப்படவில்லை. பழைய, புதிய ஏற்பாடுகளில் காணப்படும் வேத பதிவை மதிக்கிறவர்களால் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட கட்டளையாக கொடுக்கப்பட்டிருப்பதால் அல்ல, மாறாக, இது புதிய ஏற்பாட்டிலும்,  சபை வரலாற்றிலும் பதிவு செய்யப்பட்ட ஆதித்திருச்சபையின் மாதிரியாக இருப்பதால் கர்த்தருடைய நாளைக் கொண்டாடுகிறோம்.

வேதத்தின் அடிப்படையில் ஒரு விரைவான கண்ணோட்டத்தை ஆராய்வதன் மூலம் இந்த 3வது பார்வைக்கான ஆதரவை இந்த பதிவில் காணலாம். 

பழைய ஏற்பாட்டில் ஓய்வுநாள்.

1. சிருஷ்டிப்பு வாரம்

ஆதியாகமம் 2:2 இவ்வாறு கூறுகிறது, “தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளை எல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.” “ஓய்வு” என்ற வார்த்தை “ஷபாத்” என்ற எபிரேய வார்த்தையிலிருந்து வந்தது, அதாவது ஓய்வெடுப்பது அல்லது செயலை நிறுத்துவது என்பது இதன் பொருள். தேவன் ஓய்ந்திருந்தார் என்று மட்டுமே வசனம் கூறுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர் சோர்வாக இருந்ததால் ஓய்வெடுக்கவில்லை. ஏசாயா 40:28 இத்தகைய தவறான கருத்துகளை புறந்தள்ளுகிறது, பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது.” அனைத்து படைப்பு நடவடிக்கைகளும் நிறைவடைந்ததால் தேவன் ஓய்வெடுத்தார். இது முடிவின் விளைவாக வந்த ஓய்வு.

ஆதியாகமத்தில் வேறு எங்கும் தேவனோ அல்லது மனிதர்களோ 7 ஆம் நாளில் ஓய்வெடுத்ததாக குறிப்பிடப்படவில்லை. ஆதாம் முதல் மோசே வரை [ஆதியாகமம் 3 முதல் யாத்திராகமம் 15 வரை], ஓய்வுநாளைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆபேல், ஏனோக், நோவா, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு மற்றும் யோசேப்பு  போன்ற தேவ மனிதர்கள் 7ஆம் நாளில் ஓய்வெடுக்கக் கட்டளைப் பெறவில்லை, மேலும் அவர்கள் 7 ஆம் நாளில் ஓய்வெடுத்ததாக எந்தப் பதிவும் இல்லை. ஆயினும் அவர்கள் அனைவரும் எபிரெயர் 11 ன்படி விசுவாசத்தில் வெற்றி சிறந்தவர்களாகப் பாராட்டப்பட்டனர்!

2. ஓய்வு நாள்

ஆதியாகமம் 2:2 க்குப் பிறகு, ஓய்வுநாளைப் பற்றிய அடுத்த குறிப்பு யாத்திராகமத்தில், கர்த்தர் இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்து, வனாந்தரத்தில் மன்னாவை சேகரித்த பின்னணியில் உள்ளது [யாத்திராகமம் 16:11-15]. ஏழாவது நாளில் சேகரிக்காமல், ஆறு நாட்கள் மட்டுமே சேகரிக்குமாறு அவர்களுக்கு தேவன் கட்டளையிட்டார். யாத்திராகமம் 16:23 இவ்வாறு கூறுகிறது, “அவன் அவர்களை நோக்கி: கர்த்தர் சொன்னது இதுதான்; நாளைக்குக் கர்த்தருக்குரிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச் சுட்டு, வேவிக்கவேண்டியதை வேவித்து, மீதியாயிருக்கிறதையெல்லாம் நாளைமட்டும் உங்களுக்காக வைத்துவையுங்கள்.” இப்படி ஓய்வு நாளைக் குறித்த கட்டளை இஸ்ரவேல் தேசத்திற்கு வழங்கப்பட்டது.  மோசே, தேவனால் வழிநடத்தப்பட்டபடி, பின்னர் அதை 10 கட்டளைகளின் ஒரு பகுதியாக மாற்றினார்.

யாத்திராகமம் 20:8-11 ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக; ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக; ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம். கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.” 

கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் இதுதான்: தேவன் இந்தக் கட்டளையை இஸ்ரவேல் தேசத்திற்கு மட்டுமே கொடுத்தார், வேறு எந்த தேசமும் இதை  கடைப்பிடிக்க வேண்டியதில்லை – ஒரு அந்நியன் இஸ்ரவேலில் வசிக்க வேண்டுமானால், அந்த நபர் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க வேண்டும் [யாத்திராகமம் 20:10]. ஓய்வுநாள் என்பது இஸ்ரவேலருக்கு ஓய்வு மற்றும் புத்துணர்ச்சி நாளாகவும், ஆத்துமாவிற்கு ஆசீர்வாதமாகவும் இருக்கும்படி நிறுவப்பட்டது.

யாத்திராகமம் 31:12-17 ஓய்வுநாளைப் பற்றிய பல சத்தியங்களை நமக்குக் கற்பிக்கிறது. விருத்தசேதனத்தைப் போலவே, ஓய்வுநாளும் தேவனுக்கும் இஸ்ரவேலுக்கும் இடையே ஒரு அடையாளமாக இருந்தது என்று வசனம் 13 கூறுகிறது, “இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்.” ஓய்வு நாளை மீறுவது மரண தண்டனை என்று வசனம் 14 தெளிவுபடுத்துகிறது, “அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்ணக்கடவன்.” “16 இஸ்ரவேலர்கள் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க வேண்டும்…17 அது எனக்கும் இஸ்ரவேலர்களுக்கும் இடையே ஓர் அடையாளமாக இருக்கும்” என்று மோசேயின் சட்டத்தின் கீழ் வாழும் இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே ஓய்வுநாள் கட்டளையிடப்பட்டது என்று வசனங்கள் 12-17 நமக்குக் கற்பிக்கிறது.

தேவன் இஸ்ரவேலர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்ததால் அவர்கள் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உபாகமம் 5:15 கூறுகிறது, “நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணினார் என்றும் நினைப்பாயாக; ஆகையால் ஓய்வுநாளை ஆசரிக்க உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார்.”

ஓய்வுநாளில் இஸ்ரவேலர்கள் செய்வதிலிருந்து தடைசெய்யப்பட்ட சில விஷயங்கள்: நெருப்பைக் கொளுத்துதல் [யாத்திராகமம் 35:3], மன்னா சேகரித்தல் [யாத்திராகமம் 16:23-29], பொருட்களை விற்தல் [நெகேமியா 10:31; 13:15-22], மற்றும் சுமைகளைத் தாங்குதல் [எரேமியா 17:19-27]. இயேசுகிறிஸ்துவின் காலத்திலும் யூதர்கள் ஓய்வுநாளில் ¾ மைலுக்கு மேல் பயணம் செய்யக் கூடாது என்ற தொலைதூர விதியைக் கூட பின்பற்றினர். ஒரு விளக்கவுரையாளரின் கூற்றுப்படி, இந்த தூரம் யாத்திராகமம் 16:29, எண்ணாகமம் 35:5 ஐக் கொண்டு கணக்கிடப்பட்டு, ஒரு நகரத்தின் எல்லைகளை 2,000 முழம் [¾ மைலுக்கு குறைவாக] அளவிடுகிறது. இதனால் ஒருவர் தனது “இடத்தை” [நகரத்தை] விட்டு அதன் வரம்புகளுக்கு அப்பால் செல்ல முடியாது.

3. ஓய்வு ஆண்டும், யூபிலி ஆண்டும்

யாத்திராகமம் 23:10-11-ன்படி, ஒவ்வொரு ஏழாவது வருடமும், நிலம் பயிரிடப்படாமல் இருக்க வேண்டும், ஆறுவருஷம் நீ உன் நிலத்தில் பயிரிட்டு, அதின் பலனைச் சேர்த்துக்கொள். ஏழாம் வருஷத்தில் உன் ஜனத்திலுள்ள எளியவர்கள் புசிக்கவும், மீதியானதை வெளியின் ஜெந்துக்கள் தின்னவும், அந்த நிலம் சும்மா கிடக்க விட்டுவிடுவாயாக; உன் திராட்சத்தோட்டத்தையும் உன் ஒலிவத்தோப்பையும் அப்படியே செய்வாயாக.” லேவியராகமம் 25:1-7ஐயும் பார்க்கவும்.

ஒவ்வொரு 7 வருடங்களுக்கும் பின்னர், ஒவ்வொரு 50 வது வருடமும் நிலம் பயிரிடப்படாமல் இருக்க வேண்டும்: ஐம்பதாம் வருஷத்தைப் பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிகளுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள்; அது உங்களுக்கு யூபிலி வருஷம்; அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன்தன் காணியாட்சிக்கும் தன் தன் குடும்பத்துக்கும் திரும்பிப் போகக்கடவன். அந்த ஐம்பதாம் வருஷம் உங்களுக்கு யூபிலி வருஷமாயிருப்பதாக; அதிலே விதைக்காமலும், தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைகழிக்காமல் விடப்பட்ட திராட்சச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பீர்களாக. அது யூபிலி வருஷம்; அது உங்களுக்குப் பரிசுத்தமாயிருக்கவேண்டும்; அந்த வருஷத்தில் வயல்வெளியில் விளைந்தவைகளை நீங்கள் புசிக்கவேண்டும்” [லேவியராகமம் 25:10-12].

எனவே, சுருக்கமாக, யூதர்கள், மோசேயின் உடன்படிக்கையின் கீழ், வாராந்திர ஓய்வுநாளையும், ஒவ்வொரு 7வது வருடமும், ஒவ்வொரு 50வது வருட யூபிலி ஆண்டையும் கடைப்பிடிக்க வேண்டும்.

ஓய்வு நாளை மீறுவதற்கான தண்டனை.

லேவியராகமம் 26:33-35 ஓய்வுநாட்களைக் கடைப்பிடிக்கத் தவறினால் வரும் தேவனின் நியாயத் தீர்ப்பைப் பற்றி எச்சரிக்கிறது. ஜாதிகளுக்குள்ளே உங்களைச் சிதற அடித்து, உங்கள் பின்னாகப் பட்டயத்தை உருவுவேன்; உங்கள் தேசம் பாழும், உங்கள் பட்டணங்கள் வனாந்தரமுமாகும். நீங்கள் உங்கள் சத்துருக்களின் தேசத்தில் இருக்கும்போது, தேசமானது பாழாய்க்கிடக்கிற நாளெல்லாம் தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும்; அப்பொழுது தேசம் ஓய்வடைந்து, தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும். நீங்கள் அதிலே குடியிருக்கும்போது, அது உங்கள் ஓய்வு வருஷங்களில் ஓய்வடையாதபடியினாலே, அது பாழாய்க்கிடக்கும் நாளெல்லாம் ஓய்வடைந்திருக்கும்.”

 யூதர்கள் தேவனுக்கு எதிராகக் கலகம் செய்து மற்ற பாவங்களுடன் ஓய்வு நாட்களையும் இழிவுபடுத்தினர். எனவே, பாபிலோனின் ராஜாவான நேபுகாத்நேச்சரின் கைகளால் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவந்து தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றினார். 2 நாளாகமம் 36:17, 20-21 ஆதலால் அவர் அவர்கள்மேல் கல்தேயரின் ராஜாவை வரப்பண்ணினார்; அவன் அவர்கள் வாலிபரை அவர்களுடைய பரிசுத்தமான ஆலயத்திலே பட்டயத்தினால் கொன்று, வாலிபரையும் கன்னியாஸ்திரீகளையும் முதியோரையும் விருத்தாப்பியரையும் தப்பவிடவில்லை; எல்லாரையும் தேவன் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார். பட்டயத்திற்குத் தப்பின மீதியானவர்களை அவன் பாபிலோனுக்குச் சிறைபிடித்துப்போனான்; பெர்சியா ராஜ்யபாரம் ஸ்தாபிக்கப்படுமட்டும் அங்கே அவர்கள் அவனுக்கும் அவன் குமாரருக்கும் அடிமைகளாயிருந்தார்கள்.கர்த்தர் எரேமியாவின் வாயினாலே சொன்ன வார்த்தை நிறைவேறும்படிக்கு, தேசம் தன்னுடைய ஓய்வு வருஷங்களை இரம்மியமாய் அநுபவித்துத் தீருமட்டும், அது பாழாய்க்கிடந்த நாளெல்லாம், அதாவது, எழுபது வருஷம்முடியுமட்டும் ஓய்ந்திருந்தது.” [எரேமியா 17:19-27; 25:11 ஐயும் பார்க்கவும்].

துக்ககரமாக, யூதர்கள் சிறையிலிருந்து திரும்பிய பிறகும் பாடத்தைக் கற்றுக்கொள்ளாமல், ஓய்வுநாளில் வாங்குவதும் விற்பதுமாக இருந்தார்கள். நெகேமியாவின் காலத்தில், யூதர்கள் ஓய்வுநாளில் பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் ஈடுபட்டிருந்தனர், இது நெகேமியா அவர்களைக் கண்டிக்க வழிவகுத்தது, 16 மீனையும் சகலவித சரக்குகளையும் கொண்டுவந்து, ஓய்வுநாளிலே யூதா புத்திரருக்கும் எருசலேமில் இருக்கிறவர்களுக்கும் விற்கிற சில தீரியரும் உள்ளே குடியிருந்தார்கள். 17 ஆகையால் நான் யூதாவின் பெரியவர்களைக் கடிந்துகொண்டு: நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிற இந்தப் பொல்லாத செய்கையென்ன? 18 உங்கள் பிதாக்கள் இப்படிச்செய்ததினாலல்லவா, நமது தேவன் நம்மேலும் இந்தநகரத்தின்மேலும் இந்தத்தீங்கையெல்லாம் வரப்பண்ணினார்; நீங்களோவென்றால் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறதினால் இஸ்ரவேலின்மேலிருக்கிற உக்கிரத்தை அதிகரிக்கப்பண்ணுகிறீர்கள் என்று அவர்களுக்குச் சொன்னேன்.” 22ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு வாசல்களைக் காக்க வாருங்களென்று லேவியருக்கும் சொன்னேன்” [நெகேமியா 13:16-18, 22].

எனவே, சிறையிருப்பிலிருந்து திரும்பிய பின்னரும் ஓய்வு நாள் கட்டளை இஸ்ரவேலைரைக் கட்டுப்பட்டுத்தியதைக் காண்கிறோம். பழைய ஏற்பாட்டில் ஓய்வுநாளின் கண்ணோட்டத்தைப் பார்த்தோம், தற்போது புதிய ஏற்பாட்டிற்குச் செல்வோம்.

 புதிய ஏற்பாட்டில் ஓய்வுநாள்.

1. இயேசுகிறிஸ்துவின் போதனை

இயேசுகிறிஸ்துவின் காலத்தில், யூதர்கள் ஓய்வுநாளில் தேவன் கொடுத்த கட்டளைகளை விட அதிகமான விதிமுறைகளைச் சேர்த்தனர். இதன் விளைவாக, அது ஒரு ஆசீர்வாதமாக இல்லாமல் ஒரு பாரமாக மாறிப்போனது. இயேசுகிறிஸ்து தமது ஊழியக் காலத்தில் இந்த போதனைகளை எதிர்கொண்டது மட்டுமல்லாமல் யூத தலைவர்களால் ஓய்வுநாளை மீறுவதாக நினைத்த காரியங்களை செய்து,  அடிக்கடி அவர்களுடன் முரண்பட்டார்-முக்கியமாக, ஓய்வுநாளில் அவர் குணப்படுத்துவது ஒரு வேலையாகக் கருதப்பட்டது. இருப்பினும், ஓய்வுநாளானது, ஒருவருடைய அயல் வீட்டாருக்கு நன்மை செய்வதற்கான ஒரு நாள் என்பதைக் காட்ட இயேசுகிறிஸ்து பலமுறை மக்களைக் குணப்படுத்தினார். 

மத்தேயு 12:9-14 9அவர் அவ்விடம் விட்டுப்போய், அவர்களுடைய ஜெப ஆலயத்தில் பிரவேசித்தார். 10அங்கே சூம்பின கையையுடைய மனுஷன் ஒருவன் இருந்தான். அப்பொழுது, அவர்மேல் குற்றஞ்சாட்டும்படிக்கு: ஓய்வுநாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்கள். 11அதற்கு அவர்: உங்களில் எந்த மனுஷனுக்காகிலும் ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், அதைப் பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ? 12ஆட்டைப்பார்க்கிலும் மனுஷனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்! ஆதலால், ஓய்வுநாளிலே நன்மைசெய்வது நியாயந்தான் என்று சொன்னார். 13பின்பு அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டினான்; அது மறுகையைப்போல் சொஸ்தமாயிற்று. 14அப்பொழுது, பரிசேயர் வெளியேபோய், அவரைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள்.”

மாற்கு 2:23-28 23 பின்பு, அவர் ஓய்வுநாளில் பயிர் வழியே போனார்; அவருடைய சீஷர்கள் கூட நடந்துபோகையில், கதிர்களைக் கொய்யத் தொடங்கினார்கள். 24 பரிசேயர் அவரை நோக்கி: இதோ, ஓய்வுநாளில் செய்யத்தகாததை இவர்கள் ஏன் செய்கிறார்கள் என்றார்கள். 25 அதற்கு அவர்: தாவீதுக்கு உண்டான ஆபத்தில், தானும் தன்னோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது, 26 அவன் அபியத்தார் என்னும் பிரதான ஆசாரியன் காலத்தில் செய்ததை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர்தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தெய்வசமுகத்து அப்பங்களைத் தானும் புசித்துத் தன்னோடிருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்றார். 27 பின்பு அவர்களை நோக்கி: மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது” 28 ஆகையால் மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.”

பிறனை நேசிக்க வேண்டும் என்ற கட்டளை உட்பட தேவனின் கட்டளைகளுக்கு சட்டவாதம் எப்போதும் தீங்கு விளைவிக்கும். அதனால்தான் இயேசுகிறிஸ்து அதை நேருக்கு நேர் எதிர்கொண்டார்! அவர் நமக்கு ஒரு சரியான மாற்றாக இருந்து நியாயப்பிரமாணத்தின் அனைத்து கட்டளைகளையும் பூர்த்தி செய்தார்—இது ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பதையும் குறிக்கிறது. இயேசு கிறிஸ்து அதை தேவ நோக்கமாகக் கொண்ட விதத்தில் செய்தாரேயல்லாமல், பரிசேயர்கள் அதைத் திசைதிருப்பிய விதத்தில் அல்ல.

2. பவுலின் போதனை

அடிக்கடி ஜெப ஆலயத்தில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க பவுல் ஓய்வுநாளைப் பயன்படுத்தினார். அவர் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்ததால் இதைச் செய்தார். யூதர்கள் அந்த நாளில் ஒரே இடத்தில் கூடியிருப்பதை அவர் அறிந்திருந்தப்படியால்,  அது அவருக்கு நற்செய்தியை அறிவிக்க ஒரு தளத்தை அளித்தது. இருப்பினும், நாம் இன்னும் நியாயப்பிரமாணத்தின் கீழ் இருக்கிறோமா என்ற பிரச்சினை எழுந்தபோது, நாம் இனி நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லை, எனவே சட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை என்ற ஒரு தெளிவான பதிலை பவுல் கொடுத்தார்

கலாத்தியர் 5:1 ஆனபடியினாலே, நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்.”

ரோமர் 7:6 “…இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.”

கொலோசெயர் 2:16-17 16ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக. 17அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.”

 கொலோசெயர் 2ல் உள்ள இந்த வசனங்களை விடவும் தெளிவான ஒரு வசனக்குறிப்பை வேறு எங்கும் காணமுடியாது, இது விசுவாசிகள் இனி ஓய்வுநாள் விதிமுறைகளின் கீழ் இல்லை என்று கூறுகிறது. ஓய்வுநாள் உட்பட, மோசேயின் நியாயப்பிரமாணத்தின் அனுசரிப்புகள் வரவிருக்கும் விஷயங்களின் நிழல்கள் மட்டுமேயாகும், அதன் மெய்ப்பொருள் கிறிஸ்து. ஓய்வு நாள் கிறிஸ்துவில் காணப்படும் ஒரு பெரிய யதார்த்தத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது, மெய்ப்பொருளாகிய கிறிஸ்து வந்தவுடன் அது நிறைவேறியது. நாம் இனி நிழல்களில் கவனம் செலுத்த வேண்டியதில்லை—அதாவது ஓய்வுநாள் அல்லது மதத்தின் பிற புனித நாட்கள் மற்றும் உணவைக் குறித்த சட்டங்கள் போன்றவற்றை  கடைப்பிடிக்க வேண்டிய  கட்டாயம் நமக்கு இல்லை.

3. எபிரெய நிருபத்தினுடைய எழுத்தாளரின் போதனை

எபிரெய நிருபத்தின் ஆசிரியரும் பவுல் கூறிய அதே கருத்தைக் கூறுகிறார்.

எபிரெயர் 4:8-11 8 யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால், பின்பு அவர் வேறொரு நாளைக்குறித்துச் சொல்லியிருக்கமாட்டாரே. 9 ஆகையால், தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனிவருகிறதாயிருக்கிறது. 10 ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான். 11 ஆகையால், அந்தத் திருஷ்டாந்தத்தின்படி, ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம்”

 இந்நிருபத்தின் ஆசிரியர் 4:8-12 ல் குறிப்பிடும்  “இளைப்பாறுதல்” என்பது வாராந்திர ஓய்வுநாள் அல்ல, யோசுவா வழங்கிய கானானின் இளைப்பாறுதலல்ல, மாறாக பரம இளைப்பாறுதல் – இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற அனைவருக்கும் அவர் கொடுக்கும் மீட்பாகிய இளைப்பாறுதல். எனவே, அந்த  இளைப்பாறுதலில் நுழைய வேண்டும் என்று கட்டளை பெற்றிருக்கிறோமே தவிர, ஓய்வுநாளில் அல்ல.

எதிர்கால ஆயிர வருட அரசாட்சியில் ஓய்வு நாள். 

வரவிருக்கும் 1000 வருட அரசாட்சியை, இயேசுகிறிஸ்து தம் இரண்டாம் வருகையின் போது [வெளிப்படுத்துதல் 20:4-6] அமைக்கப் போகிறார், அந்நாட்களில் நாம் ஓய்வு நாட்களைக் கடைப்பிடிப்போம். எதிர்கால ஆலயத்தின் பின்னணியில் [இன்னும் கட்டப்படவில்லை], இஸ்ரவேலர்கள் தங்கள் மேசியாவிடம் திரும்பியதன் விளைவாக முழு ஆசீர்வாதங்களை அனுபவிக்கும் போது, இயேசுகிறிஸ்து இவ்வாறு கூறுகிறார்: “தேசத்து ஜனங்களும் ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் அந்த வாசலின் நடையிலே கர்த்தருடைய சந்நிதியில் ஆராதனை செய்யக்கடவர்கள்” [எசேக்கியேல் 46:3].

இருப்பினும், ஆயிர வருட அரசாட்சி இன்னும் நடக்காததாலும், இயேசுகிறிஸ்துவின் முதல் மற்றும் இரண்டாவது வருகைக்கு இடையில் நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாலும், அந்த விஷயத்திற்காக ஓய்வுநாளையோ அல்லது வேறு எந்த புனித நாட்களையோ கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இல்லை.

இறுதி சிந்தனைகள்.

ஓய்வெடுப்பதற்கும் புத்துணர்ச்சி பெறுவதற்கும் ஒரு நாள் இருப்பது நல்லது என்றாலும், பழைய உடன்படிக்கையின் கீழ் இஸ்ரவேலருக்கு மட்டுமே விதிக்கப்பட்ட ஓய்வுநாள் கட்டளையைக் கடைப்பிடிக்க வேண்டிய கடமை நமக்கு இல்லை. விசுவாசிகள் பழைய உடன்படிக்கையின் கீழ் இல்லை. இதன் விளைவாக, நாம் இனி ஓய்வு நாளைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. பழைய உடன்படிக்கையின் கீழ் இருப்பவர்கள் ஓய்வுநாள் சனிக்கிழமையிலிருந்து, மாறவில்லை.

கூடுதலாக, விசுவாசிகளுக்கு கர்த்தருடைய நாளானது, ஓய்வுநாள் என்று வேதத்தில் எங்கும் கூறப்படவில்லை—முற்றிலுமில்லை! அதுவே புதிய ஏற்பாட்டின் தெளிவான போதனையாகும். சில கிறிஸ்தவர்கள் கர்த்தருடைய நாளை, விசுவாசிகளுக்கான ஓய்வு நாள் என்று அழைத்தாலும், அது வேதத்தில் கூறப்படவில்லை என்பதால் நான் அத்தகைய வார்த்தையை பயன்படுத்த விரும்பவில்லை. வேதாகம சிக்கல்களை விளக்கும்போது, வேதத்திலுள்ள துல்லியத்தைத் தொடர்வது எப்போதும் நல்லது.

அடுத்த பதிவில், விசுவாசிகளுக்கும், கர்த்தருடைய நாளுக்கும் உள்ள உறவைப் பார்ப்போம்.

Category

Leave a Comment