விசுவாசிகள் கர்த்தருடைய நாளை ஆசரிக்க வேண்டுமா?
(English Version: “Are Christians Required to Keep the Lord’s Day?”)
கடந்த பதிவில், “விசுவாசிகள் ஓய்வுநாளை கடைப்பிடிக்க வேண்டுமா?” என்று கேட்கப்பட்டு வேதம் முழுவதிலிருந்தும் பதில் அளிக்கப்பட்டது. புதிய உடன்படிக்கையின் கீழ் வாழும் விசுவாசிகள் வாரத்தின் 7வது நாளான ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை என்ற பதிலோடு அந்த பதிவு முடிந்தது. தர்க்கரீதியாக அத்தகைய முடிவு, கர்த்தருடைய நாள் என்று அழைக்கப்படும் ஞாயிற்றுக்கிழமையுடன் விசுவாசிகளுக்குள்ள உறவைப் பற்றி கேட்கவே ஒருவரை வழிநடத்தும். நாம் அதை கடைப்பிடிக்க வேண்டுமா? அப்படியொரு கட்டளை கொடுக்கபட்டிருக்கிறதா?
இதற்கு சுருக்கமான பதில் இதுதான்: விசுவாசிகள் நியாயப்பிரமாணத்தை அனுசரிக்கும் உணர்வோடு கர்த்தருடைய நாளைக் கடைப்பிடிக்கக் கட்டளையிடப்படவில்லை என்றாலும், வேதத்தில் காணப்படும் ஆதித்திருச்சபையின் எடுத்துக்காட்டுகளையும், சபை வரலாற்றையும் பார்க்கையில் கர்த்தருடைய தினத்தை கர்த்தரிடமும், அவருடைய மக்களிடமும் அன்போடு கடைப்பிடிக்க நமக்கு அழைப்பு விடுக்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கர்த்தருடைய நாளில் விசுவாசிகள் இயந்திரத்தனமாக அவரை தொழுதுக்கொள்வதற்கு சட்டபூர்வமாக கட்டாயப்படுத்தக்கூடாது, மாறாக அது அன்பு அன்பினால் செய்யப்பட வேண்டும்.
இந்த பதிவானது மேலே குறிப்பிட்டுள்ள கண்ணோட்டத்தை ஆதரிக்கிறது.
I. வேதத்திலிருந்து எடுத்துக்காட்டுகள்
வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னுரிமை கொடுப்பதைப் பற்றி வேதத்திலிருந்தே 6 எடுத்துக்காட்டுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன–அது சபை ஆராதனை நாள் என்றும், கர்த்தருடைய நாள் என்றும் அழைக்கப்படுகிறது.
1. கர்த்தராகிய இயேசு ஞாயிறு அன்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்.
மத்தேயு இவ்வாறு கூறுகிறார், “1 ஓய்வு நாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள். 2 அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான். 5 தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். 6 அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்” [மத்தேயு 28:1-2, 5-6]. லூக்கா 24:1-7 இதையே சொல்கிறது. இயேசு ஞாயிற்றுக்கிழமை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். எனவே, இது விசுவாசிகளுக்கு ஒரு சிறப்பு நாள்.
2. உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசு தம் சீடர்களுடன் ஞாயிற்றுக்கிழமையன்று முதல் சந்திப்பு நடத்தினார்
லூக்கா 24:13-15, எம்மாவுக்குச் சென்று கொண்டிருந்த தம்முடைய 2 சீடர்களுடன் இயேசுகிறிஸ்து சந்தித்ததைக் கூறுகிறது, “13அன்றையத்தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டுமைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள். 14போகையில் இந்த வர்த்தமானங்கள் யாவையுங்குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். 15இப்படி அவர்கள் பேசி, சம்பாஷித்துக்கொண்டிருக்கையில், இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்து போனார்.”
இயேசுகிறிஸ்து அவர்களுடன் பேசின பின்னர் அவர்களுடன் சேர்ந்து அப்பம் பிட்கும்போது, அவர்களின் கண்கள் திறக்கப்பட்டன, அவர்கள் இயேசுவை அடையாளம் கண்டுகொண்டார்கள், பிறகு அவர்கள் பேசிய இவ்வாறு பேசினார்கள், “அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா?” [லூக்கா 24:32]. இயேசுகிறிஸ்து இந்த 2 பேருடன் பழைய ஏற்பாட்டில் ஒரு சிறிய வேத ஆய்வு செய்தார், அது ஒரு சிறந்த ஆய்வு!
அந்த ஞாயிற்றுக்கிழமையில் இயேசுகிறிஸ்து இந்த 2 பேருக்கு மட்டுமல்லாமல், 11 அப்போஸ்தலர்களில் பெரும்பான்மையானவர்களுக்கும் தரிசனமானர் என்றும் லூக்கா நமக்குக் கூறுகிறார்: “இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்” [லூக்கா 24:36].
3. திருச்சபை ஞாயிற்றுக்கிழமை உருவானது.
திருச்சபை உருவான நாளில் என்ன நடந்தது என்று அப்போஸ்தலர் 2 ஆம் அதிகாரம் கூறுகிறது. “பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.” [அப்போஸ்தலர் 2:1], வாரத்தின் எந்த நாள் என்பதை முதல் வசனம் நமக்கு எடுத்துக் கூறுகிறது. பெந்தெகொஸ்தே என்பது பஸ்காவிற்கு 50 நாட்களுக்குப் பிறகு வரும் ஒரு பண்டிகை [இது வெள்ளி மாலை முதல் சனிக்கிழமை மாலை வரை]. எனவே, 50 நாட்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமையன்று திருச்சபை உருவானது.
4. ஆதித்திருச்சபை ஞாயிற்றுக்கிழமை ஆராதிப்பதற்கு கூடியது.
அதன் ஆரம்ப நிலைகளில், ஆதித்திருச்சபை ஆராதனைக்காக ஒவ்வொரு நாளும் கூடிவந்தது [அப்போஸ்தலர் 2:46]. இருப்பினும், காலம் செல்லச் செல்ல, அவர்கள் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் கூடிவந்தனர். அப்போஸ்தலர் 20:7 இந்த பதிவை நமக்கு வழங்குகிறது, “வாரத்தின் முதல் நாளில் சீஷர்கள் அப்பம் பிட்கக் கூடிவந்தார்கள்.”
5. ஞாயிற்றுக்கிழமை சபை ஒன்றுகூடியபோது தர்ம பணம் சேகரிக்கப்பட்டது.
எருசலேமில் உள்ள ஏழை விசுவாசிகளுக்கு தர்ம பணம் சேகரிப்பதைப் பற்றி கொரிந்துவில் உள்ள விசுவாசிகளுக்கு பவுல் எழுதுகிறார்: “நான் வந்திருக்கும்போது பணஞ்சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்” [1 கொரிந்தியர் 16:2]. இந்த வசனத்தின்படி சபையானது ஞாயிற்றுக்கிழமை ஒன்று கூடி சேகரித்ததுப்போல் தெரிகிறது.
6. வேதம் ஞாயிற்றுக்கிழமை எழுதி முடிக்கப்பட்டது.
வெளிப்படுத்தின விசேஷம் என்பது வேதத்தின் கடைசி புத்தகம். இந்த புத்தகத்தின் உள்ளடக்கங்கள் 12 அப்போஸ்தலர்களில் ஒருவரான யோவானால், கி.பி 95 ல் எழுதப்பட்டு மற்ற சபைகளுக்கு அனுப்பப்பட்டன. சுவாரஸ்யமாக, கர்த்தராகிய இயேசு ஞாயிற்றுக்கிழமையன்று இந்த வெளிப்பாடுகளை யோவானுக்கு வழங்கினார், இந்த காலத்தில் இந்த நாள் கர்த்தருடைய நாள் என்று அறியப்பட்டது.
வெளிப்படுத்தல் 1:9-11 இவ்வாறு கூறுகிறது, “9உங்கள் சகோதரனும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன்பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும், பத்மு என்னும் தீவிலே இருந்தேன். 10கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன். 11அது: நான் அல்பாவும் ஒமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது.”
எனவே, ஞாயிற்றுக்கிழமையை ஆராதனை நாளாக முதன்மைப்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் காட்டும் 6 உதாரணங்களை வேதத்திலிருந்து பார்த்தோம்.
வேதத்திலுள்ள 6 எடுத்துக்காட்டுகளுக்கு கூடுதலாக ஆதித்திருச்சபையின் தலைவர்களுடைய எழுத்துக்களில் இருந்து, கர்த்தருடைய நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று ஆராதனைகள் நடந்ததற்கான பதிவுகள் நம்மிடம் உள்ளன.
II. சபை வரலாற்றிலிருந்து எடுத்துக்காட்டுகள்
1. ஆதித்திருச்சபைத் தலைவர், ஜஸ்டின் மார்ட்டையர் [Justin Martyr] மேற்கோள்:
“ஞாயிறு என்று அழைக்கப்படும் நாளில், நகரங்களில் அல்லது நாட்டில் வசிக்கும் அனைவரும் ஒரே இடத்தில் கூடி, அப்போஸ்தலர்களின் நினைவுகள் அல்லது தீர்க்கதரிசிகளின் எழுத்துக்களை நேரம் அனுமதிக்கும் வரை படித்தார்கள்…ஞாயிற்றுக்கிழமை என்ற நாளில் நாம் அனைவரும் ஒன்று கூடுகிறோம், ஏனென்றால் தேவன், இருளிலிருந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி, உலகைப் படைத்த முதல் நாள் அது; அதே நாளில் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்” [ஃபர்ஸ்ட் அபாலஜி ஆஃப் ஜஸ்டின், வீக்லி வொர்ஷிப் ஆஃப் கிறிஸ்டியன்ஸ் அதிகாரம். 68, 150 கி. பி].
2. சபை வரலாற்றாசிரியரான பிலிப் ஷாஃப் [Philip Schaff] மேற்கோள்:
“கிறிஸ்துவுடைய உயிர்த்தெழுதலின் நினைவாக கர்த்தருடைய நாள் கொண்டாடப்படுவது சந்தேகத்திற்கு இடமின்றி அப்போஸ்தலருடைய காலத்திலிருந்தே காணப்படுகிறது. இரண்டாம் நூற்றாண்டின் சபைகளில் இந்த அனுசரிப்புக்கு அப்போஸ்தல முன்னுதாரணமே முக்கியமாக கருதப்பட்டது. இதில் கருத்து வேறுபாடு இல்லை. இந்த வழக்கம் பர்னபாஸ், இக்னேஷியஸ் மற்றும் ஜஸ்டின் மார்ட்டையர் போன்ற முந்தைய அப்போஸ்தல எழுத்தாளர்களின் சாட்சியங்களால் உறுதிப்படுத்தப்பட்டது” [கிறிஸ்டியன் சர்ச் ஹிஸ்டரி, தொகுதி 1, பக். 201-22].
ஷாஃப் தொடர்ந்து கூறுகையில் “…எனவே, புதிய ஏற்பாட்டிலிருந்தே, ஞாயிற்றுக்கிழமையானது ஆராதனை நாளாகவும், உயிர்த்தெழுதலின் சிறப்பு நினைவு நாளாகவும் அனுசரிக்கப்பட்டது என்று தோன்றுகிறது, இதன் மூலம் மீட்பின் பணி நிறைவேறியது. இரண்டாம் நூற்றாண்டில் உலகளாவிய மற்றும் முரண்பாடற்ற ஞாயிறு அனுசரிப்பானது அப்போஸ்தல நடைமுறையில் அதன் வேர்களைக் கொண்டிருக்கிறது” [பக். 478-479].
மேற்கூறிய மேற்கோள்களுக்கு கூடுதலாக, யோவானின் சீடரும் அந்தியோகியாவின் பிஷப்புமான இக்னேஷியஸ், இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இவ்வாறு எழுதினார், “கிறிஸ்துவின் ஒவ்வொரு நண்பரும் கர்த்தருடைய நாளை ஒரு பண்டிகையாகவும், உயிர்த்தெழுதலின் நாளை நாட்களின் அரசியாகவும், தலைவனாகவும் கொண்டாடட்டும். வேதத்திலிருந்தும் ஆதித்திருச்சபை தலைவர்களின் எழுத்துக்களிலிருந்தும் நம்மிடம் எடுத்துக்காட்டுகள் இருப்பதால், கர்த்தருடைய நாளில் ஒரு சபையாக ஆராதிப்பதின் முக்கியத்துவத்தை நாம் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.”
இறுதி சிந்தனை.
எபிரெயர் 10:24-25 இவ்வாறு கூறுகிறது, “24மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து: 25சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.” நாம் தவறாமல் ஒன்று கூடாவிட்டால் எப்படி ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தி ஊக்கப்படுத்துவது?
கொலோசெயர் 3:16 இவ்வாறு கூறுகிறது, “கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடுங்கள்.” மறுபடியுமாக, இந்த கட்டளையையும் ஒன்று கூடுவதன் மூலம் மட்டுமே பின்பற்ற முடியும்.
ஆம், ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்று கூடினால் மட்டுமே இந்தக் கட்டளைகளைக் கடைப்பிடிக்க முடியும் என்பதை இந்த வசனங்கள் வெளிப்படையாகக் கூறவில்லை. இருப்பினும், எல்லா நாட்களிலும் நாம் ஒன்றாக கூட முடியாது அல்லவா? ஆகவே, நமக்கு முன் சென்ற விசுவாசிகள் வாரத்தில் ஒரு நாளிலாவது—கர்த்தருடைய நாளிலாவது கூடிவந்ததை நாம் ஏன் பின்பற்றக்கூடாது?
இந்த பதிவைப் படித்து, ஞாயிற்றுக்கிழமை கூடுவதின் அவசியத்தைப் பற்றி வாதிடலாம். இத்தகைய வாதங்களுக்கு எனது பதில் எளிமையானது: ஞாயிற்றுக்கிழமை ஆராதனையை எதிர்ப்பதற்கான உண்மையான காரணம் என்ன? இது மற்ற நடவடிக்கைகளில் தலையிடுவதாலா? உள்ளூர் சபையில் ஒரு அங்கமாக இருக்க தயக்கம் காரணமாகவா? மோசமான அனுபவங்கள் காரணமாகவா? ஆட்சேபனைகளை முன்வைக்கும் முன், ஆட்சேபனை செய்பவர்கள் தங்கள் இருதயங்களை ஆராய்ந்து, தங்கள் நோக்கங்களை வேதத்தின் வெளிச்சத்தில் தாழ்மையுடன் ஆராயும்படி கேட்டுக்கொள்கிறேன்.
விசுவாசிகள் ஒரு தீவில் தனியாக வாழக்கூடாது. விசுவாசிகள் என்று கூறிக்கொள்பவர்கள் தங்கள் உள்ளூர் சபைகளுக்கு குறைந்த முன்னுரிமை கொடுப்பதாகத் தோன்றுகிறது. ஆனால், மற்ற நடவடிக்கைகளுக்கு [சபை சாரா ஊழியங்கள் உட்பட] கொடுக்க நிறைய நேரம் உள்ளது, இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கிரயத்திற்கு கொள்ளப்பட்ட சபைக்கு உயர்ந்த அர்ப்பணிப்பை கொடுக்க நம்மை அழைக்கும் வேதத்திற்கு திரும்பக்கடவோம். [அப்போஸ்தலர் 20:28]!
விசுவாசிகள் கர்த்தருடைய நாளில் ஒன்றாகச் சந்திப்பதைத் தொடர வேண்டும், ஒரு சட்டத்திற்கு கட்டுப்பட்ட ஆவியால் அல்ல, மாறாக கர்த்தர் மீதும், அவருடைய மக்கள் மீதுமான அன்பினால் சந்திக்க வேண்டும். வாரத்தில் ஒரு நாள், 2 மணிநேரம் அல்லது அதற்கும் மேலாக விசுவாசிகளுக்கு இடற்பாடில்லாமல் கூட வேண்டும். இருப்பினும், துக்ககரமாக, பல விசுவாசிகள் கர்த்தருடைய நாளில் சபைக்கு வருவதில் மிகவும் ஒழுங்கற்றவர்களாக இருக்கிறார்கள். இது உண்மையில் வருத்தமே! “சபையில் கலந்துகொள்வதால் எனக்கு என்ன கிடைக்கும்?” என்று விசுவாசிகள் கேட்காமல், “சபையில் கலந்துகொள்வதன் மூலம் நான் என்ன கொடுக்க முடியும்?” என்ன ஒரு மாற்றத்தை கொண்டு வர முடியும்! என்ற இத்தகைய மனப்பான்மை கர்த்தரிடம் அன்பு காட்டுவது மட்டுமன்றி பிறரிடம் அன்பைக் காட்டுவதன் மூலம் ஆசீர்வாதமாக இருக்குமல்லவா?
ஆண்டவர் நாளில் விசுவாசிகள் ஆராதிப்பதைத் தடுக்கும் பிரச்சனைகளைப் பற்றி அடுத்த பதிவும், அதற்குப் பின் வரும் பதிவானது, கர்த்தருடைய நாளில் அவரை எவ்வாறு திறம்பட ஆராதிக்க வேண்டும் என்று திட்டமிடுவதைப் பற்றியும் கையாளும்.
