தேவனுக்காக காத்திருத்தல்

(English Version: Waiting on God)
“தேவன் தம்முடைய நோக்கங்களை நமது வாழ்க்கையில் நிறைவேற்றுவதற்காகக் காத்துக்கொண்டிருப்பதே நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாகும்; தேவனுக்கு காத்திருப்பதை விட ஒரு தவறான காரியத்தைச் செய்வதற்கு நாம் காத்திருப்பதில்லை” என்ற வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை!
கிறிஸ்தவ வாழ்க்கையின் உண்மைகளில் ஒன்று யாதெனில், நம்மில் எவருக்கும் காத்திருப்பது இயற்கையான விருப்பமாக இருப்பதில்லை. நாம் எல்லாவற்றையும் பெற விரும்புகிறோம். ஆனால், உடனடியாக அதைப் பெற விரும்புகிறோம்! காத்திருக்கத் தவறியதற்காக வேதனையான விளைவுகளை அடிக்கடி அனுபவித்தாலும், நாம் இன்னமும் அந்த பாவத்தைச் செய்ய முனைகிறோம். அனைத்தையும் அறிந்த தேவன் நம்முடைய இந்தப் போக்கையும் முழுமையாக அறிந்திருக்கிறார். அதனால்தான், நாம் அவருக்காகக் காத்திருக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும், அவசரப்பட கூடாது என்பதை பற்றியும் அவர் தமது வார்த்தையில் அடிக்கடி கூறியிருக்கிறார்.
தேவனுக்கு காத்திருத்தல் என்றால் என்ன?
இது சோம்பேறியாக இருப்பது அல்லது செயலற்று இருப்பது என்று அர்த்தமல்ல. மாறாக, “தேவன் மூலமாக மட்டுமே நமக்கு எல்லாம் கிடைக்கப்பெறும் என்று தீவிரமாக நம்புதல்” என்பது இதன் பொருள். நமது ஞானம், செல்வம், பலம், மனிதர்களுடனான தொடர்புகள் ஆகியவற்றை நம்புவதிலிருந்து தேவனை மட்டுமே நம்புவதற்கு மாறுவதாகும்.
ஒரு சூழ்நிலையை மாற்றுவதற்கு முயற்சிப்பது அல்லது காத்திருப்பது மிக நீண்டது என்று முணுமுணுப்பது சமாதானத்தை இழக்கச் செய்து, மிகுந்த துயரத்தைத் தவிர வேறு எதையும் கொண்டு வராது. ஜார்ஜ் மெக்டொனால்ட் இவ்வாறு சரியாக கூறியிருக்கிறார், “தேவன் இல்லாமல் மனிதன் எதைச் செய்தாலும், அவன் மோசமாகத் தோல்வியடைய வேண்டும் அல்லது இன்னும் மோசமான வெற்றியை பெற வேண்டும்.”
வெய்ன் ஸ்டைல்ஸ் என்பவர் “தேவனுக்காக காத்திருத்தல்” என்ற அவரது சிறந்த புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார்:
நாம் முதலில் மகிழ்ச்சியை விரும்புகிறோம்; ஆனால்; தேவன் பரிசுத்தத்தை விரும்புகிறார். நாம் இன்பத்தை விரும்புகிறோம்; தேவன் தூய்மையை விரும்புகிறார். சிகப்பு சிக்னலில் காத்திருக்க வேண்டிய சூழலில், நாம் அந்த சிக்னலைத் தவிர்த்தால், சில சமயங்களில் விபத்தில் சிக்கக்கூடும். காத்திருப்பது நேரத்தை வீணடிப்பதாகத் தோன்றுவதால், நாம் தேவனுடைய நேரத்திற்கு முன்பாக காரியங்களை நடப்பித்தால், காயப்படுவோம். காத்திருப்பு என்பது சூழ்நிலைகளை மாற்றுவதை விட தேவன் நம்மை மாற்றுகிற ஒரு செயல்முறையாகும்.
ஒருவேளை, கர்த்தருக்காகக் காத்திருப்பதன் விளைவாக நீங்கள் சோர்வாகவும் களைப்பாகவும் காணப்படலாம். “இது எவ்வளவு காலம், ஆண்டவரே?” என்பது உங்கள் நிலையான அழுகையாக இருக்கலாம். நீங்கள் கிட்டத்தட்ட இந்த வாழ்க்கை வேண்டாம் என்ற கைவிடப்பட்ட கட்டத்திலும் இருக்கலாம்! ஏசாயா 64:4-5 ஐ மையமாகக் கொண்டு கர்த்தருக்காகக் காத்திருப்பதன் விளைவாக வரும் ஆசீர்வாதங்களை நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
“4 தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத்தோற்றமுதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை. 5 மகிழ்ச்சியாய் நீதியைச் செய்கிறவர்களையும், உம்முடைய வழிகளில் உம்மை நினைக்கிறவர்களையும் சந்திக்கிறீர்.”
தேவன் தமக்காகக் காத்திருப்பவர்களின் சார்பாக [4b] அவர்களுக்கு உதவ வருவதன் மூலம் [5a] செயல்படுகிறார் என்பதை இந்தப் பகுதி தெளிவாகக் கூறுகிறது. எவ்வாறாயினும், தேவன் நம் சார்பாக செயல்பட விரும்பினால், கீழே பட்டியலிடப்பட்டுள்ள 2 குணாதிசயங்கள் நம் வாழ்க்கையை அடையாளப்படுத்த வேண்டும் என்றும் அது கூறுகிறது.
1. தேவனின் குணாதிசயத்தைப் பற்றிய உயர்வான பார்வையை நாம் கொண்டிருக்க வேண்டும் [4a]
2. நாம் ஒரு பரிசுத்தமான வாழ்க்கையைத் தொடர வேண்டும் [5a]
இதில் நமக்கு புதிய கருத்துக்கள் எதுவும் காணப்படாவிட்டாலும், கர்த்தருக்காகக் காத்திருக்க நம்மை ஊக்குவிக்கும் ஒரு நல்ல நினைவூட்டல் இது.
1. தேவனின் குணாதிசயத்தை நாம் உயர்வாகக் கருத வேண்டும் [4a]
ஏசாயா 64:4—ன் முதல் பகுதி என்ன கூறுகிறது என்பதைக் கவனியுங்கள், “தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத்தோற்றமுதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை.” ஏசாயா தேவனைப் பற்றிய உயர்ந்த பார்வையைக் கொண்டிருந்தார். இந்த வசனத்திற்கு முன், ஏசாயா கடந்த காலத்தில் நிகழ்ந்த தேவனின் செயல்களைக் குறிப்பிட்டார், குறிப்பாக மலைகளை நடுங்கச் செய்தார் என்று கூறுகிறார் [ஏசாயா 64:3]. தேவன் பத்து கட்டளைகளைக் கொடுத்தபோது சீனாய் மலை குலுங்கியதை இது குறிக்கிறது. வேதம் கூறும் தேவனை ஏசாயா வல்லமைமிக்க தேவனாகக் காண்கிறார், அவரைப் போல் யாரும் இல்லையென குறிப்பிடுகிறார். இந்த தேவன் தம்முடைய மக்களிடம் அன்பும் இரக்கமும் கொண்டவர் என்பதையும் அவர் அறிந்திருந்தார் [யாத்திராகமம் 34:6]. மேலும், தேவனின் குணாதிசயத்தைப் பற்றிய உயர்ந்த பார்வையை அவர் கொண்டிருந்ததால், தேவன் தமது மக்களை சந்திப்பார் என்று அவர் நம்பினார்.
ஏசாயாவைப் போல் அல்லாமல், சிலுவையின் இந்தப் பக்கத்தில் வாழும் நாமும் அதே போன்று அல்லது அதைவிட அதிக நம்பிக்கையாக இருக்க வேண்டும். இயேசுவின் மூலம், தேவனின் குணாதிசயத்தைப் பற்றிய தெளிவான சித்திரம் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவருடைய குணாதிசயத்தைப் பற்றிய புரிதலானது, தெய்வ நம்பிக்கையுடன் காத்திருக்கும்படி நம்மை ஊக்குவிக்க வேண்டும். எனவே, தேவனின் குணாதிசயங்களை பிரதிபலிப்பதன் மூலம் அவருடைய குணாதிசயத்தைப் பற்றிய உயர்ந்த பார்வையை வளர்ப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தக்கடவோம்.
2. நாம் பரிசுத்தமான வாழ்க்கையைத் தொடர வேண்டும் [5a]
ஏசாயா 64:5—ன் முதல் பகுதி, “மகிழ்ச்சியாய் நீதியைச் செய்கிறவர்களையும், உம்முடைய வழிகளில் உம்மை நினைக்கிறவர்களையும் சந்திக்கிறீர்” என்று கூறுகிறது. “மகிழ்ச்சியுடன் நீதியை செய்கிறவர்கள், [தேவனின்] வழிகளை நினைவில் கொள்பவர்களுக்கு” உதவ தேவன் வருகிறார் என்பதைக் கவனியுங்கள். மகிழ்ச்சியான இருதயத்துடன் பரிசுத்த வாழ்க்கையைத் தொடரும் மக்கள் தேவனின் உதவியைப் பெறுவார்கள். அவருடைய குணாதிசயங்களில் நம்பிக்கையுடன் அவரது கட்டளைகளுக்கு அடிபணிவது அவருக்கு காத்திருப்பதன் ஒரு பகுதியாக கைகோர்த்துச் செல்கின்றன.
ஏசாயாவின் நாளில் வாழ்ந்த மக்கள் தேவனின் விடுதலையை அனுபவிக்காததற்குக் காரணம், அவர்கள் பாவத்தில் வாழ்ந்தார்கள், “நாங்களோ, அவைகளுக்கு விரோதமாக எப்பொழுதும் பாவஞ்செய்தபடியினாலே, தேவரீர் கடுங்கோபங்கொண்டீர்; இன்னமும் தப்பியிருக்கிறோம்!” [ஏசாயா 64:5] கூடுதலாக, அவர்கள் தேவனுடைய நாமத்தை கூப்பிடவுமில்லை [ஏசாயா 64:7]. அவர்களுக்கு ஜெப வாழ்க்கையும் இல்லை. அவர்கள் ஜெபித்து உபவாசம் இருந்தபோதும், அது ஒரு வெளிப்புறச் சடங்காக மட்டுமே இருந்தது. தேவன் அத்தகைய மாய்மாலத்தை நிராகரித்தார் [ஏசாயா 58]. பாவமானது அவர்கள் சார்பாக தேவனை செயல்படவிடாமல் தடுத்தது—“உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது” [ஏசாயா 59:2].
அதே போல நீங்களும் நானும் பாவத்தில் வாழ்ந்தால் தேவன் நம் சார்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்க முடியாது. பாவம் தேவனின் ஆசீர்வாதத்தை எப்போதும் தடுக்கிறது! இருப்பினும், “நாம் பரிசுத்தத்தை நாடினால், அவர் மனமகிழ்ச்சியுடன் நீதிமான்களுக்கு உதவுவார்” என்று நாம் உறுதியாக நம்பலாம். அதனால் தான் நாம் பரிசுத்தத்தைத் தொடர வேண்டியது அவசியமாகிறது.
எனவே, அதை நோக்கித்தான் நாம் செல்கிறோம். நாம் தேவனுக்காகக் காத்திருக்கும்போது அவர் நம் சார்பாகச் செயல்பட வேண்டுமென்றால், அவருடைய குணத்தைப் பற்றிய உயர்வான பார்வையை நாம் கொண்டிருக்க வேண்டும் மற்றும் பரிசுத்தத்தைத் தொடர வேண்டும்.
இறுதி சிந்தனைகள்.
கர்த்தருக்காகக் காத்திருக்கும் போது நாம் அடிக்கடி சோர்வடைகிறோம். நாம் அவரை சந்தேகிக்க ஆரம்பிக்கிறோம். நாம் விரும்பியபடி காரியங்கள் எதுவும் நடக்காததால் கோபமும் எரிச்சலும் அடைகிறோம்! நாம் மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்படவும் கூடும். துன்மார்க்கர் செழிப்பதையும் நீதிமான்கள் துன்பப்படுவதையும் கண்ட ஆசாப் அதைத்தான் செய்தார் [சங்கீதம் 73]. நீதியுள்ள தேவன் இராஜரீகம் செய்கிறார் என்பதை மறந்துவிடுவது எளிது! நாம் மிகவும் சோம்பேறியாக கூட ஆகலாம். “தேவனைச் சேவிப்பதால் என்ன பிரயோஜனம்? அவர் என்னைப் பற்றி கவலைப்படவில்லை, நான் இவ்வளவு காலமாக காத்திருந்தேன், அவர் வரவில்லை, ஏன் அவருக்கு சேவை செய்ய வேண்டும்?” போன்ற எண்ணங்கள் நம்மை கட்டுப்படுத்த ஆரம்பிக்கலாம்.
நாம் அவருக்காகக் காத்திருக்கும் போதும் தேவன் செயல்படுகிறார் என்பதை மறந்து விடுகிறோம். அவர் நம் குணத்தை வடிவழைக்கிறார். நாம் மனந்திரும்பி அவற்றை விட்டு விலகும்படியாக அவர் நம் இருதயத்தின் விக்கிரகங்களை வெளியரங்கப்படுத்துகிறார். அவர் நம்மில் பொறுமை, சகிப்புத்தன்மை, பணிவு மற்றும் இரக்கத்தை வளர்த்து வருகிறார், அதனால் நாம் மற்றவர்களின் வலி மற்றும் போராட்டங்களுக்கு உணர்திறன் உடையவர்களாக அவர்களுக்கு திறம்பட ஊழியம் செய்ய முடிகிறது.
கூடுதலாக, தேவனுக்கு காத்திருக்கும் போது நம் வாழ்வின் மீது அவருடைய இராஜரீகத்தை ஒப்புக்கொள்ள அவர் நமக்குக் கற்பிக்கிறார். அவர் குயவர், நாம் களிமண் என்று நமக்கு எடுத்துரைக்கிறார். அவர் அனைவரையும் ஆள்பவர். அவர் விரும்பியதை, எப்படி விரும்புகிறாரோ அப்படி செய்கிறார். சுய நிகழ்ச்சி நிரலின்படி செய்யுமாறு யாரும் அவரை வற்புறுத்த முடியாது. இந்த சத்தியங்களை நாம் முழு மனதுடன் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
ஜான் பைபர் இவ்வாறு சரியாக கூறியிருக்கிறார், “தமக்காகக் காத்திருப்பவர்களுக்காக தேவன் கிரியைச் செய்வதன் மூலம் தம்மை உயர்த்திக் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.” வாரன் வியர்ஸ்பே, “தேவன் அவசரத்தில் இல்லை” என்ற புத்தகத்தில், “நீங்களும் நானும் செய்யக்கூடிய சிறந்த விஷயம் என்னவென்றால் நம் கைக்கடிகாரங்கள் மற்றும் நாட்காட்டிகளைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, தேவனின் முகத்தை விசுவாசத்துடன் பார்த்து, அவர் வழியில், அவருடைய காலத்தில் செயல்பட அவரை அனுமதிக்க வேண்டும்.”
அடுத்தப்படியாக, காத்திருப்பு என்பது தெய்வபக்தி, முதிர்ச்சி மற்றும் உண்மையான ஆவிக்குரிய வாழ்வின் சிறந்த ஆசிரியராகவும் பயிற்சியாளராகவும் இருக்கலாம். எனவே, நாம் எவ்வளவு காலம் காத்திருந்தோம் என்பதைத் திரும்பிப் பார்க்க வேண்டாம் அல்லது எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று முன்னோக்கிப் பார்க்க வேண்டாம். எரிச்சல், கோபம், ஊக்கம், அல்லது பயம் ஆகியவற்றை அடைய வேண்டாம், அதன் மூலம் நமது சமாதானத்தையும், நம்மைச் சுற்றியுள்ள மக்களின் சமாதானத்தையும் கெடுத்துக் கொள்ள வேண்டாம்-நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கு எதிர்மறையான சாட்சியத்தைக் காட்ட வேண்டாம்.
நமக்குச் சாதகமாக, வேகமாகச் செயல்பட்டால்தான் தேவன் நல்லவரா?
பதில் ‘ஆம்’ என்றால், நாம் தேவனை ஆளுகை செய்பவராக அனுமதிக்காமல், அவர் விரும்பியபடி நம்மை வடிவமைக்க அனுமதிக்காமல், நாம் விரும்புவதைப் பெற தேவனைப் பயன்படுத்துகிறோம் என்பதை இது வெளிப்படுத்துகிறது. இப்படிப்பட்ட பாவ மனப்பான்மைக்கு நாம் வருந்த வேண்டும். அவருக்குப் பிரியமான விதத்தில் காத்திருப்பதற்னு தேவையான பலத்திற்காக அவர் மீது சார்ந்திருப்போம். நாளை தினத்தைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் [மத்தேயு 6:34]. இன்றைக்கு நாம் காத்திருக்க தேவன் பலத்தையும் கிருபையையும் தருகிறார். நாளை வந்தால் அது இன்று என்றே மாறிவிடும், அந்த நாளுக்கு அவருடைய கிருபை போதுமானதாக இருக்கும். ‘இல்லை’ என்ற பதிலில் கூட இன்னமும் தேவன் நம் நன்மைக்காகவும் அவரது இறுதி மகிமைக்காகவும் நம் சார்பாக செயல்படுகிறார் என்று நம்ப கற்றுக்கொள்ளலாம்.
எனவே, வேதம் கூறும் தேவனுக்காக காத்திருக்குமாறு நான் உங்களை ஊக்குவிக்கிறேன். இந்த அற்புதமான “தேவன்” வேறு யாரையும் போலல்லாமல் “தமக்காகக் காத்திருப்பவர்களின் சார்பாகச் செயல்படுகிறார்.” அவர் உண்மையில் “நன்மையைச் சந்தோஷமாகச் செய்கிறவர்களுக்கும், [அவருடைய] வழிகளை நினைவுகூருகிறவர்களுக்கும் உதவி செய்கிறார்.”
Wonderful thoughts