மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு—பகுதி 15 ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள்

(English version: “The Transformed Life – Live in Harmony With One Another”)
“ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள்; மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள்; உங்களையே புத்திமான்களென்று எண்ணாதிருங்கள்” என்று ரோமர் 12:16 ஆம் வசனம் நமக்கு கட்டளையிடுகிறது.
ஒருவருக்கொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாய் வாழ்வதும், அப்படி வாழ்வதற்கான முட்டுக்கட்டையை அகற்றுவதுமே இங்கு காணப்படும் பொருள். அப்படி வாழ்வதை தடுக்கும் அந்த ஒரு விஷயம் எது? அது மேட்டிமை! நாம் ஏகசிந்தையுள்ளவர்களாக இருக்க வேண்டுமானால், மேட்டிமையான சிந்தனை நம் மனதில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க கூடாது. மாறாக, சிந்தனையில் பணிவு இணக்கமாக வாழ்வதற்கு முக்கியமானதாகும்.
இந்த வசனத்தை நான்கு கட்டளைகளாக பிரிக்கலாம்.
கட்டளை # 1.
“ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள்.” சில ஆங்கில மொழிபெயர்ப்புகள், “ஒருவருக்கொருவர் ஒரே மனப்பான்மையுடன் இருங்கள்” என்று கூறுகின்றன. சிந்தையில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது தான் இங்கு கூறப்படும் கருத்து. நாம் அனைவரும், எல்லாவற்றிலும் ஒரே மாதிரியான கருத்துக்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல; நாம் ரோபோக்களும் அல்ல. கிறிஸ்துவின் மறுரூபமாக்கும் கிரியைகளின் மூலம் நாம் அவரைப் போல் மாறும்போது, பிதாவை மகிமைப்படுத்துவதற்கான பொதுவான இலக்கை நோக்கி ஒன்றிணைவதே இதன் யோசனை. இந்த மனப்பான்மை மிகவும் முக்கியமானது, இந்த கட்டளை புதிய ஏற்பாட்டில் அடிக்கடி சொல்லப்பட்டிருக்கிறது [பிலிப்பியர் 1:27; பிலமோன் 2:1-2; 1 பேதுரு 3:8].
அப்போஸ்தலர் 4:32 ல் கூறப்பட்டுள்ளபடி, ஆதித்திருச்சபை அத்தகைய மனப்பான்மையால் தன்னை அடையாளப்படுத்தியது, “விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது.” பழைய ஏற்பாட்டில், சங்கீதம் 133:1 ல் விசுவாசிகள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற இந்த விருப்பத்தை சங்கீதக்காரன் வெளிப்படுத்துகிறார், “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?”
பின்வரும் விளக்கத்தை சிந்தியுங்கள்:
கலிபோர்னியாவில் ஒரு குறிப்பிட்ட வகையான மரம் தரையில் இருந்து 300 அடி உயரம் வரை வளரும். இந்த மாபெரும் மரங்கள் உயரமாக வளர்ந்தாலும், ஆழமற்ற வேர் அமைப்புகளைக் கொண்டுள்ளவைகள், மேற்பரப்பு அதிகபட்ச ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு அவை எல்லா திசைகளிலும் படர்ந்திருக்கும். அவற்றின் பின்னிப்பிணைந்த வேர்கள் புயல்களுக்கு எதிராக ஒன்றுக்கொன்று ஆதரவாக இருக்கும். அதனால்தான் அவை பொதுவாக குழுவாக வளரும், தனி மரமாக நிற்பதை அரிதாகவே பார்க்கக்கூடும். அப்படி தனியாக இருந்தால், அதிகமான காற்று வீசி அதை எளிதாக சாய்த்துவிடும்!
நம் சபைகளிலும், வீடுகளிலும் தேவன் விரும்பும் சித்திரம் இதுதான். விசுவாசிகள் ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ வேண்டும். இருப்பினும், நடைமுறையில் பெரும்பாலும் இப்படி இருப்பதில்லை. ஏகசிந்தைக்கும், சமாதானத்திற்கும் பதிலாக பிரிவினைகளும், சச்சரவுகளும் உள்ளது. இதற்கு ஒரு முக்கிய காரணம் மேட்டிமையாகும். எனவேதான் பவுல் மற்றொரு கட்டளையை வழங்குகிறார்.
கட்டளை # 2.
“மேட்டிமையானவைகளைச் சிந்திக்க வேண்டாம்.” சாராம்சத்தில், “உங்கள் சிந்தனையில் கர்வத்துடன் இருக்காதீர்கள் என்று பவுல் கூறுகிறார். ஏகசிந்தையாக இருக்க வேண்டும் என்றால், மேட்டிமை சிந்தனையை அகற்ற வேண்டும்.” அவர் அப்படி கூறுவது சரிதான். ஏனென்றால், நடத்தையானது சிந்தனையின் விளைவாகும்; மேட்டிமையான சிந்தனை மேட்டிமையான நடத்தைக்கு வழிவகுக்கிறது!
மேட்டிமை எப்போதும் அதன் சுய வழியை விரும்புகிறது. அத்தகைய மனநிலை இருக்கும்போது, எப்போதும் சண்டைகள் இருக்கும் [யாக்கோபு 4:1-3]. “என் சுய வழி” என்ற பிடிவாத மனப்பான்மை இருக்கும் சபையிலோ அல்லது வீட்டிலோ ஏகசிந்தை இருக்க முடியாது. “முதன்மையாக இருக்க விரும்பின” தியோத்திரேப்பு [3 யோவான் 1:9] போன்றவர்கள் இருக்கும் இடத்தில் முரண்பாடுகள் இருக்கும். எனவே, “மேட்டிமையானவைகளை சிந்திக்க வேண்டாம்” என்ற கட்டளையிடப்பட்டுள்ளது.
கட்டளை # 3.
மேட்டிமை என்பது ஒரு குறிப்பிட்ட நபர்களுடன், அவர்களின் அந்தஸ்து, அவர்கள் நமக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்ற அடிப்படையில் தொடர்புகொள்ளும்போது வெளிப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மேட்டிமைமிக்கவர்கள் எல்லோருடனும் சகஜமாகப் பழகாமல் தங்களின் நலன்களை மேம்படுத்தக்கூடிய நபர்களுடன் மட்டுமே பழகுவார்கள். எனவேதான் “தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள்” என்று பவுல் கூறுகிறார்.
இயேசுகிறிஸ்து உயரடுக்கு மக்கள் மத்தியில் நேரத்தை செலவிட விரும்பாமால், ஒதுக்கப்பட்டவர்களுடன் செலவிட்டார். நாமும் அப்படித்தான் இருக்க வேண்டும். பதவி, அதிகாரம் ஆகியவற்றில் உயர்வை பெறுவதற்கு யார் உதவுவார்கள் என்று பார்த்து அவர்களுடன் மட்டும் பழகக்கூடாது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாம் விரும்புகிறவைகளை அடைவதற்கு மக்களைப் பயன்படுத்த கூடாது. மாறாக, ஒதுக்கப்பட்டவர்களுடன் நேரத்தை செலவிட்டு, எல்லா மக்களையும் சமமாகவும், அன்புடனும் நடத்த வேண்டும் [லூக்கா 14:13].
ஆரம்பக் கால சபையில் நடந்த ஒரு சம்பவத்தை ஒரு பிரசங்கியார் இவ்வாறு விவரிக்கிறார்: ஒரு பிரபலமான மனிதர் விசுவாசியான பின்பு, சபையின் ஆராதனைக்கு முதன்முதலாக வந்தார். சபையின் போதகர் ஒரு இடத்தைக் காட்டி, “தயவுசெய்து நீங்கள் அங்கே உட்காருகிறீர்களா?” என்று அவரிடம் சொன்னார். அதற்கு அந்த மனிதர், “என்னால் அங்கே உட்கார முடியாது, ஏனென்றால் அங்கே நான் என் அடிமையின் அருகில் உட்கார வேண்டியிருக்கும் என்று கூறினார்.” “தயவுசெய்து அங்கே உட்காருவீர்களா?” என்று போதகர் மீண்டும் கேட்டார். அதற்கு அந்த மனிதர், “நிச்சயமாக என் அடிமையின் அருகில் உட்கார முடியாது என்று கூறினார்.” “தயவுசெய்து அங்கே உட்காருவீர்களா?” என்று மீண்டும் ஒருமுறை அந்த போதகர் கேட்டார். கடைசியாக அந்த மனிதர், தன் அடிமையின் அருகில் அமர்ந்து, அவனை அணைத்துக்கொண்டார்.
ரோமப் பேரரசில் கிறிஸ்தவம் அதைத்தான் செய்தது. எஜமானனும் அடிமையும் அருகருகே அமர்ந்திருந்த ஒரே இடம் சபை. சபையானது பூமிக்குரிய அனைத்து வேறுபாடுகளும் இல்லாத இடமாக இருக்கிறது, ஏனென்றால், தேவன் மனிதர்களிடையே பாகுபாடுகளைப் பார்ப்பதில்லை.
எனவே, தாழ்ந்த நிலையில் உள்ளவர்களுடன் பழகுவதற்கு தயாராக இருக்க வேண்டும்.
கட்டளை # 4.
இந்த வசனத்தில், “உங்களையே புத்திமான்களென்று எண்ணாதிருங்கள்” என்ற ஒரு கட்டளையையும் பவுல் கூறுகிறார். உங்களைப் பற்றி உயர்வான கருத்தைக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் பார்வையில் ஞானியாக இருக்காதீர்கள் என்று அவர் வலியுறுத்துகிறார். தி நியூ லிவிங் டிரான்ஸ்லேஷன் என்ற ஆங்கில மொழியாக்கம் இதை இவ்வாறு தொகுக்கிறது: “உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்க வேண்டாம்.” மேட்டிமையான சிந்தையுள்ளவர்கள் அப்படித்தான் நினைப்பார்கள். அவர்கள் தங்களைப் பற்றிய உயர்ந்த பார்வையைக் கொண்டிருப்பார்கள், இது பொருளற்ற வெற்றுப் பெருமைக்கு வழிவகுக்கிறது.
எனவேதான், நம்முடைய சொந்த பார்வையில் ஆணவமாகவோ அல்லது புத்திசாலியாகவோ இருக்கக் கூடாது என்று வேதம் மீண்டும் மீண்டும் நம்மை எச்சரிக்கிறது. நீதிமொழிகள் 3:7, “நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.” நீதிமொழிகள் 26:12, “தன் பார்வைக்கு ஞானியாயிருப்பவனைக் கண்டாயானால், அவனைப்பார்க்கிலும் மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம்.”
திமிர்பிடித்தவர்களிடமும், தங்கள் பார்வையில் புத்திசாலிகளாய் காணப்படுகிறவர்களிடமும் பேசுவது கடினம். அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும்போது, அவர்களின் கோபத்தை எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருப்பது நல்லது. நீங்கள் மேட்டிமை சிந்தையுள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்று அவர்களிடம் சொன்னால், “என்னை பெருமை பிடித்தவன் என்று சொல்வதற்கு உங்களுக்கு எவ்வளவு தைரியம்?” என்று கடுமையாக பதிலடி கொடுப்பார்கள். மறுபுறம், தாழ்மையாக இருப்பவர்களிடம் பாவத்தை சுட்டிக்காட்டும்போது “அவர்கள் சொல்வது சரிதானா?” என்று இடைநிறுத்திக் கேட்பார்கள். “நான் பெருமைக்காரனாக இருக்கிறேன் என்று சொல்லும் அளவிற்கு என்னில் எந்த குறிப்பிட்ட விஷயங்களை நீங்கள் காண்கிறீர்கள்?” என்று கேட்கவும் அவர்கள் தயங்க மாட்டார்கள்.
“ஒரு பிரபல தொழிலதிபராக இருப்பதின் கலை” [The Art of Being a Big Shot] என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை ஹோவர்ட் பட் என்ற பிரபல கிறிஸ்தவ தொழிலதிபர் எழுதியுள்ளார். அவர் சொன்ன பல நுண்ணறிவு விஷயங்களில் இந்த வார்த்தைகளும் அடங்கும்:
“என் பெருமையே தேவனை விட்டு என்னை பிரிக்கிறது; நானே என் தலைவிதியின் எஜமானன்; என் சொந்த வாழ்க்கையை நானே நடத்துகிறேன்; எப்படிச் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் நானே முன்முயற்சி எடுக்கிறேன், தனியாகச் செல்வது என்னை ஈர்க்கிறது. இந்த உணர்வுதான் என்னுடைய நேர்மையின்மையின் அடிப்படையாகும். பதிலாக என்னால் தனியாக இயங்க முடியாது; நான் மற்றவர்களின் உதவியைப் பெற வேண்டும்; இறுதியில் என்னையே என்னால் நம்ப முடியாது. எனது அடுத்த மூச்சுக்கு நான் தேவனைச் சார்ந்திருக்கிறேன்; நான் ஒரு மனிதன், சிறியவன், பலவீனமானவன் மற்றும் வரம்புக்குட்பட்டவன் என்று உணருவதே நேர்மையான செயல். எனவே, தேவனை சாராமல் வாழ்வது சுய மாயை.”
மேட்டிமையானது வெறுக்கப்பட வேண்டிய பண்பு அல்லது பணிவு ஒரு சிறந்த நல்லொழுக்கம் என்பவையெல்லாம் முக்கியமான விஷயம் அல்ல என்று நினைக்கும்போது நமது உள் உளவியல் ஒருமைப்பாடு ஆபத்தில் உள்ளது. நான் கர்வமாக இருக்கும்போது பொய் சொல்கிறேன். நான் மனிதனாக அல்ல தேவனாக நடிக்கிறேன்.
என்னை விக்கிரக ஆராதனை செய்வதே என் மேட்டிமை. அதுவே நரகத்தின் தேசிய மதம்!
எனவேதான் எரேமியா தனது உதவியாளரான பாரூக்கை இந்த உறுதியான வார்த்தைகளால் எச்சரித்தார்: “நீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ? தேடாதே” [எரேமியா 45:5]. பிலிப்பியர் 2:3-4 ஆம் வசனங்கள் இப்படி கூறுவதில் ஆச்சரியமில்லை, “ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.”
அப்படியென்றால், நாம் எப்படி மேட்டிமை சிந்தைக்கொள்ளாமல் ஒற்றுமையாக வாழ முடியும்? அதற்கு 3 பரிந்துரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
(1) நம் இருதயத்தில் உள்ள மேட்டிமையை அறிக்கையிட வேண்டும் [சங்கீதம் 51:4].
(2) மேட்டிமை மற்றும் மனத்தாழ்மை ஆகியவற்றோடு இடைப்படும் வேதவசனங்களை நாம் படிக்க வேண்டும், மேலும் அந்த சத்தியங்களை நம் வாழ்வில் நடைமுறைப்படுத்துவதற்கு கர்த்தரிடம் ஊக்கமாக ஜெபிக்க வேண்டும் [எபேசியர் 6:17-18].
(3) நாம் இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கையை தொடர்ந்து சிந்தித்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டும். இயேசுகிறிஸ்துவின் முன்மாதிரியிலிருந்து தான் மனத்தாழ்மையைக் கற்றுக்கொள்வதற்கான சிறந்த வழி இருக்கிறது. “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” என்று இயேசுகிறிஸ்துவே தம்மைக் குறித்து கூறியிருக்கிறார் [மத்தயு 11:29]. இயேசுகிறிஸ்து தம்மைப் பற்றி நற்செய்தி நூல்களில் “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்” என்று கூறும் ஒரே பதிவு இதுவாகும்!
கர்த்தராகிய இயேசுவின் வாழ்வும், மரணமும் “நம்முடைய எல்லா விதமான பெருமைக்கு கண்டனத்தை தெரிவிக்கிறது.” பின்வரும் அட்டவணை இந்த குறிப்பை விளக்குகிறது.
மேட்டிமை கூறுகிறது: | இயேசுகிறிஸ்துவைப் பற்றி வேதம் கூறுகிறது: |
என் குடும்பப் பின்னணியைப் பார்! | இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? [மத்தேயு 13:55] |
என்னிடம் எவ்வளவு பணம் உள்ளது பார்! | மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை.[லூக்கா9:58] |
என் தோற்றத்தைப் பார்! | விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. [ஏசாயா 53:2] |
என்னோடு தொடர்பில் இருக்கும் முக்கியஸ்தர்களை பார்! | ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன். [லூக்கா7:34] |
என் கீழுள்ள மனிதர்களைப் பார்! | நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப்போல் இருக்கிறேன்.[லூக்கா 22:27] |
எத்தனை பேர் என்ன பாராட்டுகிறார்கள் பார்! | அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவருமாயிருந்தார். [ஏசாயா 53:3] |
நான் எவ்வளவு வலிமையானவன் என்று பார்! | நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை. [யோவான் 5:30] |
என் சுய சித்தத்தைப் பார்! | என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறேன். [யோவான் 5:30] |
நான் எவ்வளவு புத்திசாலி பார்! | நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன். [யோவான் 8:28] |
இயேசுகிறிஸ்துவிடம் இருந்து கற்றுக்கொள்வோம். அவரே நம்முடைய இரட்சகர், நம்முடைய கர்த்தர், சாந்தமும் மனத்தாழ்மையும் கொண்ட நம்முடைய ராஜா, மற்றும் நாம் ஒருவருக்கொருவர் ஏகசிந்தையாக வாழ முற்படும்போது உண்மையான தாழ்மை எப்படி இருக்கும் என்பதற்கு அவரே நம்முடைய உதாரணம்!