தெய்வ பக்தியுள்ள ஒரு தகப்பனின் சித்திரம்–பகுதி 1

(English Version: “Portrait of a Godly Father – Part 1”)
ஒரு ஆப்பிரிக்க பழமொழி இவ்வாறு கூறுகிறது; “ஒரு தேசத்தின் அழிவு அதன் மக்களின் வீடுகளில் தொடங்குகிறது.” துக்ககரமான விஷயம் என்னவென்றால், உலகம் முழுவதிலும் குடும்பங்கள் இடிந்து விழும் நிலையில் இந்தப் பழமொழியின் உண்மை நம் கண் முன்னே நிறைவேறுவதைக் காண்கிறோம். இந்த உறவு முறிவுக்கான காரணங்களில் ஒன்று தங்கள் “கடமைகளை செய்யாத தகப்பன்மார்கள்” என்றும் விவரிக்கக்கூடும்.
சட்ட அமைப்பின் பார்வையில், ஒரு குற்றவாளியான தகப்பன் தனது கடமையைச் செய்யத் தவறிவிடுகிறார், அதாவது, இந்த விஷயத்தில், பிள்ளைக்கு ஆதரவை நல்கும் முழுப் பொறுப்பையும் தாயிடம் விட்டுவிடுகிறார். எனவே, இந்த கடமை தவறிய தகப்பன்களை மக்கள் பின்பற்றுவதின் மூலம் நீதிமன்றங்கள் தொடர்ந்து இந்த பிரச்சினையை அதிகமாய் சந்திக்கின்றன.
இருப்பினும், நான் குறிப்பிடும் “கடமையை செய்யாத” தகப்பன்மார்கள் தேவனுடைய பார்வையில் ஆவிக்குரிய கடமையைச் செய்யத் தவறிய “ஆவிக்குரிய குற்றவாளிகளாவார்கள்.” இந்த வகையான தகப்பன்மார்கள் உடல், பொருள் மற்றும் கல்வித் தேவைகளை வழங்குவதை மட்டும், தங்கள் “கடமையை” நினைப்பவர்கள். இதன் விளைவாக “ஆவிக்குரிய அனாதைகளின்” எழுச்சி உண்டாகிறது. அதனால்தான் தெய்வ பக்தியுள்ள தகப்பன்களுக்கு, தேவனுடைய பார்வையில் சரியானதைச் செய்ய வேண்டிய அவசியமுள்ளது.
அப்போஸ்தலனாகிய பவுல் எபேசியர் 6:4-ல் அப்படிப்பட்ட தகப்பன்களாக இருக்க விரும்புவோருக்கு உதவியாக சில கருத்துக்களை கூறுகிறார், “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.” பிதாக்களுக்கு இங்கு 2 கட்டளைகள் கொடுக்கப்பட்டுள்ளன; என்ன செய்யக்கூடாது [எதிர்மறை], என்ன செய்ய வேண்டும் [நேர்மறை]. முதல் கட்டளையை இந்த பதிவிலும், இரண்டாவது கட்டளையை அடுத்த பதிவிலும் பார்ப்போம். [குறிப்பு: இந்த கட்டளை அப்பாக்களுக்கு கொடுக்கப்பட்டாலும், பெரும்பாலானவை தாய்மார்களுக்கும் பொருந்தும்!]
தகப்பன்மார்கள் செய்யக்கூடாதவை [எதிர்மறை]
“பிதாக்களே, உங்கள் பிள்ளைகளை கோபப்படுத்தாதீர்கள்.” இந்த வசனத்தில் “பிதாக்கள்” என்று மொழிபெயர்க்கப்பட்ட சொல் முதன்மையாக தகப்பன்மார்களைக் குறிக்கிறது. இருப்பினும், எபிரெயர் 11:23 இல் கூறப்பட்டுள்ளதைப் போல, தகப்பன் மற்றும் தாய் இருவரையும் குறிக்க இது எப்போதாவது பயன்படுத்தப்பட்டு, “பெற்றோர்” [மோசேயின் தகப்பன் மற்றும் தாயைக் குறிப்பதுப்போன்று] என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், இங்கே முதன்மையான கவனம் தந்தைகள் மீது இருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால், சத்தியங்கள் தாய்மார்களுக்கும் பொருந்தும்!
“உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாதீர்கள்” என்று பவுல் தகப்பன்களுக்கு ஒரு நேரடியான கட்டளையை வழங்குகிறார். “கோபப்படுத்துதல்” என்ற வார்த்தையின் அர்த்தம் “அவர்களை மோசமாக்குதல், தூண்டுதல் மற்றும் எரிச்சலூட்டுதல்” என்பதாகும். கலாத்தியர் 3:21 இல் உள்ள இதற்கு இணையான வசனத்தில், பவுல் தகப்பன்மார்களுக்கு இந்த வார்த்தைகளை எழுதினார், “பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்.” வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிள்ளைகளை கோபமடையும், கசப்புணர்வை அடையும், நிலையில் செயல்பட வேண்டாம் என்று பவுல் தகப்பன்மார்களுக்கு கட்டளையிடுகிறார்.
எனவே, தர்க்கரீதியான கேள்வி இதுதான்; தகப்பன்மார்கள் எப்படி பிள்ளைகளை எரிச்சல், கோபம், மற்றும் சோர்வடையச் செய்யக்கூடும்? குறைந்தபட்சம் 7 குறிப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
1. அதிகப்படியான பாதுகாப்பு
பலர் தங்கள் பிள்ளைகளுக்கு எதாவது நேர்ந்துவிடுமோ என்று பயப்படுகிறார்கள், எனவே எப்போதும் அவர்களுக்குப் பின்னால் இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து தங்கள் பிள்ளைகளிடம், “இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே” என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளுடன் தொடர்பு கொள்ளாமல் பாதுகாக்கிறார்கள்.
“ஒரு நிமிடம் நில்லுங்கள், எல்லா எதிர்மறையான தாக்கங்களுக்கும், நான் என் பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டாமா?” என்று நீங்கள் நினைக்கலாம். ஆம், பிள்ளைகளை எச்சரித்து கண்காணிக்க வேண்டும். ஆனால் அதற்கு ஒரு அளவு உள்ளது. ஒரு பிள்ளையானது அதிகப்படியான பாதுகாப்பை பெற்றால், அது ஏமாற்றமடையச் செய்யும். இதன் விளைவாக, அவர்கள் வெறுப்பு மனப்பான்மையை வளர்க்கலாம்.
2. பட்சபாதம்
பட்சபாதம் என்பது ஒரு பிள்ளைக்கு மற்றவர்களை விட ஆதரவாக இருப்பதைக் குறிக்கிறது. உதாரணமாக, ஈசாக்கு யாக்கோபைவிட ஏசாவை விரும்பினான் [ஆதியாகமம் 25:28]; ரெபெக்காள் ஏசாவை விட யாக்கோபை விரும்பினாள் [ஆதி 25:28]; யாக்கோபு தன் மற்ற பிள்ளைகளை விட யோசேப்பை தேர்ந்தெடுத்தான் [ஆதியாகமம் 37:3]. துக்கக்கரமாக, அந்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் பேரழிவை விளைவித்தன.
பல காரணங்களால் பட்சபாதம் பார்க்கப்படுகிறது. ஒருவேளை ஒரு பிள்ளை மற்ற பிள்ளைகளை விட உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறப்படியால் உங்களுக்கு மிகவும் பிடித்து இருக்கலாம். ஒருவேளை அந்த பிள்ளைக்கும் உங்களைப் போன்ற பொழுதுபோக்குகள் இருக்கலாம். அந்த ஒரு பிள்ளை மற்றவர்களை விட புத்திசாலியாக இருக்கலாம். அதனால், அந்த ஒரு பிள்ளையிடம் உங்கள் அன்பை அதிகமாகக் காட்டக்கூடும்.
இதன் விளைவாக, மற்ற பிள்ளைகள் அற்பமான காரணங்களுக்காக தண்டிக்கப்படுகையில், பிடித்தமான பிள்ளையிடம் எதையும் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடலாம். இருப்பினும், பட்சபாதத்தினால் புறக்கணிக்கப்பட்ட பிள்ளையானது, நீண்ட காலத்திற்கு கசப்பு உணர்வோடும், கோபமாகவும், இருக்க வழிவகுக்கிறது.
3. நியாயமற்ற கோரிக்கைகள்
பல பெற்றோர்கள் தாங்கள் சாதிக்க விரும்புவதை அல்லது தாங்களே சாதிக்கத் தவறியதை தங்கள் பிள்ளைகள் சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். வேறுவிதமாகக் கூறுவதென்றால், அவர்கள் பிள்ளைகளின் மூலம் தங்கள் வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள். “டாக்டராக இருங்கள், பொறியியலாளராக இருங்கள், விளையாட்டுகளில் சிறந்து விளங்குங்கள்” என்ற கூறி அவர்களை மிகை சாதனையாளர்களாகத் தள்ளுவது போன்ற நடத்தை பிள்ளைகளை கோபப்படுத்தும்.
பிள்ளைகள் சிறந்து விளங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறா? நம்முடைய நோக்கங்கள் தேவனை மகிமைப்படுத்துவதாக இருந்தால் தவறல்ல, அதுவே அவர்களின் வாழ்க்கைக்காக கர்த்தரை நாடினால் தவறல்ல. இருப்பினும், நியாயமற்ற எதிர்பார்ப்புகள் பிள்ளைகளை சோர்வு மற்றும் கசப்பான நிலைக்கு தள்ளும். பெற்றோர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட்டால் மட்டுமே தங்களை நேசிப்பார்கள் என்ற உணர்வை பிள்ளைகள் தவறுதலாக வளர்த்துக்கொள்ளுவார்கள்
4. அன்பு இல்லாமை
சில தகப்பன்மார்கள் பிள்ளைகளை தங்கள் வாழ்க்கைக்குத் தடையாகப் பார்க்கிறார்கள். “எனது சுதந்திரத்தை நான் விரும்புகிறேன். ஆனால் பிள்ளைகளுடன் இருக்கும்போது அந்த சுதந்திரத்தை இழந்துவிடுகிறேன். என் நேரத்தைக் கொண்டு நான் விரும்பியதைச் செய்ய இயலவில்லை,” என்பதே உணர்வாக இருக்கிறது. எனவே, இங்கு அன்பு புறந்தள்ளப்படுகிறது. மேலும், பிள்ளைகள் தங்கள் தாயை வேலைக்கு செல்வதற்கும், அவளுடைய தொழிலை உருவாக்குதற்கும் இடைஞ்சலாக இருந்தால், அந்த பிள்ளைகள் பொருளாதார வெற்றிக்கும், வாழ்வின் ஸ்திரத்தன்மைக்கும் ஒரு தடையாக பார்க்கப்படுகிறார்கள்.
பல தகப்பன்மார்கள் தங்கள் பிள்ளைகளை நேசிக்கத் தவறிய மற்றொரு வழி என்னவென்றால், அவர்களுடன் தங்கள் நேரத்தை செலவிடத் தவறுவதாகும். ஏன் இப்படி தவறுகிறார்கள்? அவர்கள் தங்கள் பொருள் மீது நாட்டமாக இருப்பதாலும் அல்லது பிற இன்பங்களில் மிகவும் ஆர்வமாக இருப்பதாலும் தான் பிள்ளைகளுடன் செலவிட அவர்களுக்கு நேரமில்லை.
பல ஆண்டுகளாக, தங்கள் தகப்பன்மார்கள் தங்களுக்கு முக்கியத்துவம்; கொடுக்கவில்லை அவருக்கு அவருடைய நாட்டங்களே மிகவும் முக்கியமானது என்பதை பிள்ளைகள் பார்க்கும்போது, அது கசப்புக்கும் வெறுப்புக்கும் மேலும் வழிவகுக்கும்.
5. கடுமையான தண்டனை
சில தகப்பன்மார்கள் தங்கள் பிள்ளைகளை ஒருபோதும் கண்டிப்பதில்லை, சிலர் வேறு எல்லைக்கு சென்று அவர்களை கடுமையாகத் தண்டிக்கிறார்கள். அப்படி கடுமையாகத் தண்டிப்பது வலியை ஏற்படுத்தாமல் காயத்தை ஏற்படுத்துகின்றது. சரியான காரணங்கள் இல்லாமலேயே கோபத்திலும் விரக்தியிலும் சில சமயங்களில் பிள்ளைகளை அடித்து. சிட்சை தரப்படுகிறது.
ஒரு சிறுவன் இவ்வாறாக நினைத்தான், “சில சமயங்களில், தகப்பன் ஏன் என்னைத் தண்டிக்கிறார்? என்று கூட எனக்குத் தெரியாது. ஒருவேளை அவர் கோபமாக இருக்கலாம்.” ஆனாலும் நான் அமைதியாக இருந்து, சில சமயம், அம்மாவிடம் சென்று முறையிடுவேன். ஆனாலும் அவளாலும் ஒன்றும் சொல்ல முடியாது.
காலப்போக்கில், பிள்ளை தனது கடுமையான தண்டனைக்காக தந்தை மீது ஆழ்ந்த வெறுப்பை வளர்த்துக்கொள்ளும். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் வில்லியம் புஷ் பற்றி ஒருமுறை கூறியது எனக்கு நினைவிருக்கிறது, “நான் வளர்ந்து வரும்போது, வாழ்வில் தோல்வியடையும் சுதந்திரம் எனக்கு இருந்தது.” கடுமையான தண்டனைக்கு பயப்படாமல் தோல்வியடையும் சுதந்திரம் தங்களுக்கு இருப்பதாக பிள்ளைகள் உணர வேண்டும்!
6. புண்படுத்தும் பேச்சு
“நீ ஒரு முட்டாள். தகுதியற்றவன். உன்னால் எதையும் சரியாகச் செய்ய இயலாது” போன்ற வார்த்தைகள், பிள்ளைகளை மிகவும் புண்படுத்தும். இப்படி பேசுவது, பிள்ளைகளை ஒருபோதும் திருத்துவதற்கு உதவாது. எபேசியர் 6:4-ன் இரண்டாம் பாதி; பிள்ளைகள் தவறான பாதையில் செல்லும்போது அவர்களைத் திருத்துவதற்கு பெற்றோர்களை அழைக்கிறது. இருப்பினும், இங்கே பிரச்சினை புண்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதேயாகும். ஒரு தகப்பன் கீழ்த்தரமான கருத்துக்களைப் பயன்படுத்தும்போது, பிள்ளைகளுக்குள் கோபமும் வெறுப்பும் உருவாகிறது, இதுவே விரைவில் அல்லது பின்னர், உறவு சரிசெய்ய முடியாத அளவுக்கு கொண்டுச் சென்று விடுகிறது.
எதிர்நிலையும் நல்லதல்ல. உங்கள் பிள்ளைகள் உலகில் சிறந்தவர் என்பது போல், தொடர்ந்து முகஸ்துதி செய்வது அவர்களின் ஈகோவை அதிகரிக்க செய்யும் ஒரு ஆரோக்கியமற்ற வழியாகும். நிச்சயமாக, அவர்கள் நல்லது செய்யும் போது நாம் அவர்களை பாராட்ட வேண்டும், தவறு செய்யும்போது அவர்களைத் திருத்த வேண்டும். எனினும் இதுபோன்ற மதிப்பீடுகளைச் செய்யும்போது நம் வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
7. மற்றவர்களுடன் ஒப்பிடுதல்
மற்றவர்களுடன் ஒப்பிடுவது பிள்ளைகளை காயப்படுத்தும் பொதுவான வழிகளில் ஒன்றாகும். “இன்னார் பிள்ளையை பார்; உன்னால் ஏன் அப்படி இருக்க முடியவில்லை?” என கேட்டு தங்கள் பிள்ளைகளும் அவ்வாறே செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம்—தேவன் அவர்களை அப்படி செய்ய அழைத்திருக்கிறாரோ இல்லையோ மற்றவர்கள் சாதித்தது போல் சாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.
ஒரு தகப்பன் சுமார் 20 வயதிலிருக்கும் தனது மகனிடம், “இருபது வயதில் எத்தனை பேர் சாதித்திருக்கிறார்கள் என்று பார்” என்று கூறினார். மேலும் அவர் தனது 20 வயதில் சில பிரபலமாக இருந்தவர்களோடு ஒப்பிட்டுப் பேசினார். தகப்பனின் அடிக்கடி ஒப்பீடுகளால் மிகவும் சோர்வாக இருந்த மகன், “சரி, நீங்கள் 50 களின் முற்பகுதியில் இருக்கிறீர்கள், உங்கள் வயதில், ஆபிரகாம் லிங்கன் ஜனாதிபதியானார். நீங்கள் ஏன் அப்படிப்பட்ட ஒருவராக இல்லை?” என கேட்டான்
நாம் இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒருவர் தங்கள் பிள்ளைகள் தவறான பாதையில் செல்லும்போது, சரியாகச் செய்யும் மற்ற பிள்ளைகளின் முன்மாதிரி உதாரணத்தின் மூலம் அவர்களை ஊக்கப்படுத்தினால் அது தவறல்ல. ஆனால், இங்கு காணப்படும் பிரச்சினை என்னவென்றால், பொறாமை உணர்வில் இருந்து வரும் ஒப்பீடாகும்.
பெரும்பாலும், இத்தகைய ஒப்பீடுகள் பெற்றோர்கள் மிகவும் போட்டித்தன்மையுடன் இருப்பதன் மூலம் உருவாகின்றன. இதன் விளைவாக, அவர்கள் அதை பிள்ளைகளிடமும் திணிக்கிறார்கள்! மேலும் இதுபோன்ற செயல்கள் பிள்ளைகளை சோர்வடையவும், வெறுப்படையவும் செய்துவிடும். என் பெற்றோர்கள் நானாக இருக்கும் “என்னை”, ஏன் நேசிக்க மாட்டேன் என்கிறார்கள்?” என்ற கேள்வியை எழுப்புவார்கள்.
எனவே, மேற்கூறிய 7 வழிகளில் தகப்பன்மார்கள் [மற்றும் தாய்மார்கள்] பிள்ளைகளை—கசப்பு, கோபம், அதிகப்படியான பாதுகாப்பு, நேசம், நியாயமற்ற கோரிக்கைகள், அன்பின்மை, கடுமையான தண்டனை, புண்படுத்தும் பேச்சு மற்றும் மற்றவர்களுடன் ஒப்பிடுதல் போன்றவற்றால் சோர்வடையச் செய்யலாம்.
இதுபோன்ற காரணங்களில் மேலும் ஒன்றை ஒருவர் சேர்க்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால், பெற்றோராகிய நாம் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இதுதான்: இந்தப் பாவங்களில் ஏதேனும் ஒன்றில் அல்லது எல்லாவற்றிலும் கூட நாம் குற்றவாளிகளாக இருக்கிறோமா? அப்படியானால், நாம் நேர்மையாக கர்த்தரிடம் சென்று அதை நமக்குக் காட்டும்படிக்கு கேட்க வேண்டும், பின்னர் இந்த பாவங்களுக்கு மனந்திரும்பி, மன்னிப்பைப் பெற்று, இந்த பாவங்களை மேற்கொள்ளவும் அவருடைய உதவியை நாட வேண்டும்.
என்ன செய்யக்கூடாது என்று இப்போது பார்த்தோம், அடுத்த பதிவில் தகப்பன்மார்கள் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.