தெய்வ பக்தியுள்ள ஒரு தகப்பனின் சித்திரம்—பகுதி 2

Posted byTamil Editor September 12, 2023 Comments:0

(English Version: “Portrait of a Godly Father – Part 2”)

முந்தைய பதிவில், எபேசியர் 6:4—ன் முதல் பாகமான, பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்த வேண்டாம்” என்ற பவுலின் கட்டளையின் அடிப்படையில் தகப்பன்மார்கள் என்ன செய்யக்கூடாது என்று பார்த்தோம். இந்த பதிவில், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக” என்ற  அதே வசனத்தின் இரண்டாம் பகுதியைப் பார்ப்போம்.

தகப்பன்மார்கள்—என்ன செய்ய வேண்டும்? [நேர்மறை]

பிள்ளைகளிடம் கசப்பு, கோபம், சோர்வு ஆகியவற்றை உண்டாக்குவதற்குப் பதிலாக, அவர்களை வளர்ப்பீர்களாக என்று நேர்மறையாகச் செயல்படும்படி பவுல் தகப்பன்மார்களை அழைக்கிறார். இந்த சொற்றொடர் அவர்களை முதிர்ச்சியடையச் செய்ய உணவளிக்கும் அல்லது ஊட்டமளிக்கும் யோசனையைக் கொண்ட ஒரு வார்த்தையிலிருந்து வந்தது. அது ஒரு தகப்பனின் பொறுப்பாக காணப்படுகிறது. சுவாரஸ்யமாக, இங்கு காணப்படும் இதே வார்த்தையானது எபேசியர் 5:29 இல் போஷித்து” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கிறிஸ்து சபைக்கு உணவளித்து, கவனித்து, போஷிப்பதைப் போலவே, கணவர்களும் தங்கள் மனைவிகளுக்கும் செய்ய வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கணவர்கள் தங்கள் மனைவிகளுக்கு ஆசிரியர்களாக, பயிற்சியாளர்களாக, ஊட்டமளிப்பவர்களாக இருப்பது போன்றே  தங்கள் பிள்ளைகளையும்  முதிர்ச்சியடையச் செய்ய வேண்டும்.

இதில் துக்ககரமான விஷயம் என்னவென்றால், பெரும்பாலான கணவர்கள் செயல்படும் நிலையில் மோசமாகத் தோல்வியடைந்துவிட்டு  அவர்களின் பிள்ளைகளுக்கான  “சிறந்த அப்பாவாக” இருக்க விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் மனைவிகளை, பாலியல் பொருள்களாகவும், சமையல்காரர்களாகவும், பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவும், தங்கள் விதைகளை எடுத்துச் செல்லும் பாத்திரங்களாகவும் கருதுகிறார்கள். இருப்பினும், ஒரு நல்ல தகப்பன்மார்களாக இருக்க விரும்புகிறார்கள்.  நல்ல கணவனாக இருப்பதில் ஒருவர் தோல்வியுற்றால், அவர் நல்ல தந்தையாக இருப்பதில் தோல்வியடைவதே அதிக சாத்தியம்.

எனவே, தங்கள் பிள்ளைகளை முதிர்ச்சியடையச் செய்யும்படி தகப்பன்மார்களுக்கு பவுல் கட்டளையிடுகிறார்.  அது எப்படி என்று 2 வழிகளில் காணலாம்: அவை “சிட்சை” மற்றும் “கர்த்தருடைய போதனையாகும்”. “சிட்சை” என்ற வார்த்தையானது முறையான பயிற்சியின் கருத்தைக் கொண்டுள்ளது. எபிரெயர் 12:5-11 ல் தேவன் நம்மைப் பயிற்றுவித்து சிட்சிச்கும் சூழலில் இது பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. போதனை” என்ற வார்த்தை ஜாக்கிரதையாக இருப்பதையும், எச்சரிக்கையின் கருத்தையும் கொண்டுள்ளது—ஆபத்துகளிலிருந்து விலகி இருக்க மனதில் உணர்வை ஏற்படுத்துகிறது. எச்சரிக்கையின் பின்னணியில் தோன்றும் இதே வார்த்தையானது 1 கொரிந்தியர் 10:11 மற்றும் தீத்து 3:10 இல் பயன்படுத்தப்பட்டுள்ளது.  மேலும், கர்த்தருக்கேற்ற” என்ற சொற்றொடர் தகப்பன்மார்கள் கர்த்தருடைய பிரதிநிதிகளாக செயல்படுவதையும், தங்கள் பிள்ளைகளுக்கு பயிற்சி மற்றும் போதனைகளை வழங்குவதன் மூலம் தேவனுக்கு மகிமையைக் கொண்டுவருவதையும் குறிக்கிறது.

கர்த்தருக்கேற்ற இந்தப் பயிற்சி அல்லது சிட்சை மற்றும் போதனையானது 4 வழிகளில் நிறைவேற்றப்படுகிறது: 1. போதித்தல் 2. சிட்சை 3. அன்பு 4. ஒரு நல்ல உதாரணம். இவை ஒவ்வொன்றையும் சுருக்கமாகப் பார்ப்போம்.

1. போதித்தல்

தகப்பன்மார்கள் ஆசிரியர்களாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உலகம் கூட அங்கீகரிக்கிறது. சீனத் தத்துவஞானி கன்பூசியஸ், “தனது கடமைகளை மகனுக்குக் கற்பிக்காத தந்தை, அவற்றைப் புறக்கணிக்கும் மகனுக்கு சமமான குற்றவாளி” என்று கூறினார். ஆனால் கிறிஸ்தவ தகப்பமன்மார்கள் எதை கற்பிக்க வேண்டும்? என்று  வேதம் கூறும் முக்கிய வேத சத்தியங்களை கீழே காணலாம்.

2 தீமோத்தேயு 3:16-17 “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.”

அனைத்து போதனைகளுக்கும் அடிப்படையான வேத சத்தியங்களைப் போதிக்கும் இந்தக் கருத்து உபாகமம் 6:6-7 ஐ முன்னோக்கி செல்கிறது, “6இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. 7நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேச வேண்டும்.”

தகப்பன்மார்களே [மற்றும் தாய்மார்கள்] தங்கள் பிள்ளைகளுக்கு முதன்மை ஆசிரியர்கள்;  சபை அல்ல, பள்ளிகள் அல்ல, தாத்தா பாட்டிகளல்ல!  இங்கு அழைப்பு தெளிவாக உள்ளது. ஆனால் 6ஆம் வசனத்தில் பெற்றோரிடம் மோசே சொல்வதைக் கவனியுங்கள்: “இந்தக் கட்டளைகள் உங்கள் இருதயங்களில் இருக்க வேண்டும்.” உங்களிடம் இல்லாததை கொடுக்க முடியாது! எனவே, பெற்றோர்கள் முதலில் தாங்கள் வேதத்தைப் படிப்பதில் தீவிரமாக இருக்க வேண்டும்.

பெற்றோர்களே, நாம் வேதத்தில் நேரத்தை செலவிடுகிறோமா?  இதற்கான பதில் ஆம் என்று இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். அப்போதுதான் நம் பிள்ளைகளுக்கு வேத போதனைகளை வழங்க முடியும். வசனம் 7 இல் உள்ள “கருத்தாய்” என்ற வார்த்தை ஒரு கல்லில் உளி மூலம் எழுத்துக்களை பொறிக்கும் செயலைக் குறிக்கிறது.  எனவே இதற்கு கடின உழைப்பு தேவையாக இருக்கிறது. ஆனால் அதுதான் அழைப்பாக காணப்படுகிறது. மேற்கூறிய வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வேதத்தின் போதனைகளை நம் பிள்ளைகள் தங்கள் இருதயங்களில் வைக்க எல்லா நேரங்களிலும் (“வீட்டில் உட்காரும்போது… சாலையில் நடந்து செல்லும்போது… படுத்துக்கொள்ளும்போது… எழுந்திருக்கும்போது”) பாடுபட வேண்டும், அப்படி செய்தால் அது நிரந்தரமானதாக இருக்கும். ஆனால், இது எப்போதும் நாம் வேதத்தை மேற்கோள் காட்ட வேண்டும் என்று அர்த்தப்படுத்துவதில்லை. வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் முடிவெடுப்பதற்கு வேத சத்தியங்கள் முழுமையாகப் பயன்படுகிறது என்பதை நம் பார்க்க பிள்ளைகளுக்கு உதவ வேண்டும் என்பதையே இது அர்த்தப்படுத்துகிறது.

அன்றாட வேத போதனை, குடும்ப வேத வாசிப்பு மற்றும் ஜெபத்திற்கான நேரத்திற்கு வெளிப்படையான காலம் நிர்ணயிக்கப்பட வேண்டும். வாழ்க்கையின் எல்லா பகுதிகளுக்கும் வேதம் பொருந்தும் என்பதால், அந்தந்த  காலங்களுக்கேற்ற  போதனை கூறப்பட வேண்டும். அதுதான் இங்கே  கூறப்படும் யோசனையாகும். தேவனுக்குப் பயப்படவும், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும், பாவத்தின் ஆபத்துகளைப் பற்றியும், பாவத்தின் மீதான தேவனின் தீர்ப்பைப் பற்றியும், சிலுவை, மனந்திரும்புதல், மன்னிப்பைப் பற்றியும் மற்றும் பலவற்றைப் பற்றி அவர்களுக்கு நாம் கற்பிக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால்,  இது அவர்களின் இரட்சிப்புக்கான முக்கிய உந்துதலாக இருக்க வேண்டும்.

2 தீமோத்தேயு 3:15 “கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.” 

தீமோத்தேயு சிறு வயதிலிருந்தே அவருடைய தாயார் ஐனிக்கேயாள் மற்றும் பாட்டி லோவிசாள் ஆகியோரால் வேத சத்தியங்களால் கற்பிக்கப்பட்டார், அது இறுதியில் அவரது இரட்சிப்புக்கு வழிவகுத்தது. மேலும் பயன்படுத்தப்பட்ட வழிமுறைகள் இயேசு கிறிஸ்துவை சுட்டிக்காட்டும் வேதாகம வசனங்களாகும். இந்த காரியத்தைப் பற்றி ஜான் பைப்பரின் வார்த்தைகள் மேற்கோள் காட்டத் தக்கவை:

“பெற்றோரே, வெற்றிகரமான பெற்றோராய் இருப்பதை விட இணக்கமான பிள்ளைகளை கொண்டிருப்பது மேலானது. இந்த போதனையானது சுவிசேஷத்தால் சாரமேற்றப்பட்ட வாழ்க்கை முறையாகும். நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டவரும், நம்மை நீதிமானாக்க உயிரோடு எழுப்பப்பட்டவரும், பிதாவின் அன்பைக் காட்டுகிறவருமாகிய  கிறிஸ்துவையும், ஆவியானவருடைய அனுதின உதவியின் உத்திரவாதத்தையும் எடுத்துக் காட்டுங்கள்—இந்த சுவிசேஷமானது கிறிஸ்தவ வாழ்க்கையைத் தொடங்குவதற்கான ஒன்றல்ல மாறாக  அதை வலுப்படுத்துவதற்கும், வடிவமைத்து பராமரிக்கிறதற்குமானது  என்பதை அவர்களுக்குக் காட்டுங்கள். கிறிஸ்து அவர்களின் இருதயங்களை உடைத்து அவர்களின் பொக்கிஷமாக மாறும் வரை உங்கள் பிள்ளைகளுக்காக ஜெபியுங்கள், அவர்களை நேசியுங்கள், அவர்களுக்கு கற்பியுங்கள்.” [உங்கள்  பிரசங்கத்தை இளையவர்கள் அசட்டை பண்ணாதப்படிக்கு எச்சரிக்கையாய் இருங்கள்] 

னவே, நாம் அவர்களுக்கு வேதாகம  சத்தியங்களை கற்பிக்க வேண்டும். அவர்கள் புரிந்துகொள்ளும் வயதுக்கு ஏற்ற மொழிபெயர்ப்பில் ஒரு வேதத்தை  கொடுக்க  வேண்டும். அவர்களால் புரிந்துகொள்ள முடியாத ஒன்றைக் கொடுப்பதில் அர்த்தமில்லை! நாம் அவர்களுடன் படிக்க வேண்டும், அவர்களுக்காகப் படிக்க வேண்டும், அவர்களாகவே படிக்க உதவ வேண்டும்.

வேத வசனங்களை மனப்பாடம் செய்து தியானிக்க அவர்களுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டும்—வாரத்திற்கு ஒரு வசனம் கூட ஒரு நல்ல தொடக்கமாகும். அந்த வசனத்தின் அர்த்தம் என்ன என்பதை விளக்குமாறு அவர்களிடம் கேட்பது, பிள்ளைகள் வேதத்தை  சுயாதீனமாகப் படிக்க உதவுவதற்கான மற்றொரு வழியாகும். அவர்களின் அன்றாட வாழ்வில் வேதாகம  நியமங்களைப் பயன்படுத்துவதற்கு நாம் அவர்களுக்கு உதவ வேண்டும்.

ஜெபத்தைப் பற்றி அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். தகப்பன்மார்கள் பிள்ளைகளுடன், பிள்ளைகளுக்காக ஜெபிக்கவும், அவர்கள் தாங்களாகவே ஜெபிக்க கற்றுக்கொள்ளவும் உதவ வேண்டும். அவர்கள் தாங்களாகவே தேவனிடம் பேச கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். எல்லாவற்றையும் குறித்து ஜெபிக்க பிள்ளைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும், சிறிய காரியங்கள் உட்பட எதுவாக இருந்தாலும், ஜெபம் இல்லாமல் எதுவும் செய்யக்கூடாது. தேவனின் அனைத்து ஆசீர்வாதங்களுக்காகவும் நன்றி சொல்ல அவர்கள் கற்பிக்கப்பட வேண்டும்! அவர்கள் தங்கள் அறைகளுக்குச் சென்று தேவனிடம் தனிப்பட்ட முறையில் பேச ஊக்குவிக்கப்பட வேண்டும். மிகவும் இளமையாக இருக்கும் போது கூட 5 நிமிடம் ஜெபம் செய்வது நல்ல பழக்கங்களை வளர்க்க உதவுகிறது. தகப்பன்மார்களே, நாம் மண்டியிட்டு கர்த்தரை அடிக்கடி நோக்குவதை அவர்கள் கண்டால், அவர்களும் அவ்வாறே செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள்.

பழிவாங்காமல் இருப்பது பற்றி அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். பல தகப்பன்மார்கள் தங்கள் பிள்ளைகள் மற்ற பிள்ளைகளால் காயப்படுத்துவதாகப் புகார் கூறும்போது, மறுநாள் திரும்பிச் சென்று அவர்களை அடிக்க கற்றுக்கொடுப்படுவதை பார்க்க வருத்தமாக இருக்கிறது. குற்றவாளிக்காக ஜெபிக்கும்படிக்கும்,  தேவைப்பட்டால், ஆசிரியரிடம் சொல்லும்படிக்கும்  பிள்ளையை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, அவர்கள் எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்று கற்பிக்கப்படுகிறார்கள். இது கிறிஸ்தவ உபதேசங்களுக்கு என்ன ஒரு தலைகீழ் மாற்றம்! நம்மை புண்படுத்துபவர்களுக்கு எதிராக நாம் பழிவாங்குவதை அவர்கள் பார்த்துவிட்டால்,  பழிவாங்கக்கூடாது என்ற  நம் போதனைகள் பயனற்றதாகப் போய்விடும். 

உழைப்பின் மதிப்பை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். வேலை செய்வது ஏன் நல்லது என்பதையும், ஒரு நல்லதும் நேர்மையானதுமான உழைப்பை வேதம் எவ்வாறு  கட்டளையிடுகிறது என்பதையும் நாம் விளக்க வேண்டும்.

பணத்தை எவ்வாறு கையாள்வது என்பதை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். செலவை மட்டுமல்ல, பொருட்களின் மதிப்பையும் நாம் கற்பிக்க வேண்டும்—நம் பிள்ளைகள் விரும்புவதையெல்லாம் அடையும் சூழலில் வளராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அவர்களின் செல்வ வளங்களை தேவையிலிருப்பவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், சிறுவயதிலிருந்தே பெருந்தன்மையுடன் இருக்கவும் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.

தகப்பன்மார்களே, இந்த ஆசிரியப் பணியை மிக முக்கியமானதாக எடுத்துக்கொள்ளக்கடவோம்.  காலஞ்சென்ற விசுவாசியான ஜார்ஜ் ஹெர்பர்ட், “ஒரு தந்தை நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு மேல்” என்றார். இது எவ்வளவு உண்மையான வார்த்தைகள்!

எனவே, பக்தியுள்ள  பிள்ளைகளை வளர்ப்பதற்கு தகப்பன்மார்கள் தங்கள் முயற்சிகளில் பயன்படுத்த வேண்டிய முதல் வழி கற்பித்தலாகும்.

2. சிட்சித்தல்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள கற்பித்தல் அம்சம் பின்பற்றப்படாவிட்டால், அந்த கற்பித்தலின் ஒரு பகுதியாகிய சீர்திருத்தும் பயிற்சியை பின்பற்ற வேண்டும். நம் காலத்தில் சிட்சை என்பது ஒரு முக்கியமான விஷயமாக இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன். சிலர் இதில் உடன்படாமல் கூட இருக்கலாம். இருப்பினும், விசுவாசிகளாகிய நாம், “இந்த சிட்சைமுறையைப் பற்றி வேதம் என்ன சொல்கிறது?” என்று பார்க்க வேண்டும். இது நம் உணர்வுகளைப் பற்றியது அல்ல, மாறாக தேவனுடைய வார்த்தை! அதற்குதான் முழுமையான அதிகாரம் உள்ளது.

முதலாவதாக, சரியான பெற்றோராக தேவன் தமது பிள்ளைகளை சிட்சிக்கிறார். எபிரெயர் 12:5-11, பிதாவாகிய தேவன் தம்முடைய பிள்ளைகளாகிய நம்மை “நம்முடைய நன்மைக்காக” [வசனங்கள் 10-11] சிட்சிக்கிறார். தகப்பன்மார்கள் தங்கள் பிள்ளைகளை [12:9] அவர்களின் நன்மைக்காக சிட்சிக்க வேண்டும் என்று இந்தப் பகுதி கூறுகிறது! எனவே, இதுவே நம்  முன்மாதிரி!

ஞானத்தால் நிரம்பிய நீதிமொழிகள் புத்தகம், பெற்றோர்கள் தேவைப்படும்போது தங்கள் பிள்ளைகளை கண்டிக்க பல அழைப்புகளை விடுக்கிறது; அவற்றில்  ஒரு சில அழைப்புகளை காண்போம். 

நீதிமொழிகள் 13:24 “பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.”

நீதிமொழிகள் 19:18 “நம்பிக்கையிருக்குமட்டும் உன் மகனைச் சிட்சைசெய்; ஆனாலும் அவனைக் கொல்ல உன் ஆத்துமாவை எழும்பவொட்டாதே.”

நீதிமொழிகள் 23:13-14 “பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான். நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.”

 எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சிட்சிக்கும்படி தேவன் கட்டளையிடுகிறார் என்பது தெளிவாகிறது. என்றாலும், எந்தப் பெற்றோரும் விரக்தியின் காரணமாக துஷ்பிரயோகம் அல்லது சிட்சிப்பை நாடக்கூடாது. அவர்கள் அதைச் சரியாகச் செய்ய வேண்டும். வேதம் “பிரம்பு” என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது, அது துருப்பிடித்த பழைய உலோகக் குழாயைக் குறிக்கிறதென்று நாம் நினைக்கக்கூடாது!  இது ஒரு மரத் துடுப்பு என்ற யோசனையாக இருக்கலாம், இதை உடலின் பின்பகுதியில் பொருத்தமானப் சிட்சிப்பின் வழிமுறையாகப் பயன்படுத்தப்படலாம்.

இந்த சிட்சையானது துஷ்பிரயோகம் செய்வதற்கு அல்ல, மாறாக ஒரு சிறிய அளவு வலியை ஏற்படுத்துவதற்காக என்பதை மறுபடியும் நினைவில் கொள்ள வேண்டும். அந்த வழியில், கீழ்ப்படியாமைக்கான விளைவுகள் இருப்பதை பிள்ளை புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். நம் பிள்ளைகளை நெறிப்படுத்துவதன் மூலம், மிகப் பெரிய கோட்பாட்டை அவர்களுக்குக் கற்பிக்கிறோம்: பாவம் பின்விளைவுகளைக் கொண்டது—சில நேரங்களில் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும். அதிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு  கிறிஸ்துவிடம் மன்னிப்புக்காக ஓடுவதுதான் ஒரே வழி.

பிள்ளையின் சிட்சைக்குப் பிறகு தங்கள் கீழ்ப்படியாமைக்கு தேவனிடம் மன்னிப்பைக் கோரி பெற்றோர்கள் பிள்ளையுடன் ஜெபம் செய்ய வேண்டும், மேலும் அந்த கீழ்ப்படியாமைக்கு மன்னிப்புக் கோரி தேவனிடம் ஜெபிக்க பிள்ளையை ஊக்குவிக்க வேண்டும். “இயேசுவே என்னை மன்னியும் போன்ற சொற்றொடர்களைச் சொல்ல கற்றுக்கொடுப்பதன் மூலம் இளம் வயதிலேயே இதை ஊக்குவிக்கலாம். அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி, ​​​​மன்னிப்புத் தேடும்போது ஜெபிக்க அவர்களுக்கு அதிக வார்த்தைகள் கற்பிக்கப்பட வேண்டும்! அவர்கள் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளவில்லை என்றால் கவலைப்பட தேவையில்லை. சிறு வயதிலேயே பாவங்களை மன்னிக்க கர்த்தரிடம் செல்லும் நல்ல பழக்கத்தை உருவாக்கி விடுகிறோம்.

எனவே, பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிவதற்காக சிட்சிப்பது மட்டுமல்ல. மாறாக, மிகவும் முக்கியமானது என்னவென்றால், அவர்கள் வளரும்போது இரட்சிப்புக்காக கிறிஸ்துவிடம் ஓடுவதற்காகும்; அதுவே அனைத்து சிட்சைகளின்  நம்பிக்கையாக இருக்க வேண்டும். பிள்ளையின் நலனுக்காக. பெற்றோர், விசுவாசத்தோடு, இந்த நம்பிக்கையை கொண்டிருக்க வேண்டும். முரட்டாட்டமான பிள்ளைகளின் பின்னாலேயே தொடர்ந்து ஓடி அவர்களை தங்கள் கட்டுக்குள்ளேயே வைக்க முயற்சிக்கும் முறை சரியானதல்ல. அதனால்தான் சிட்சை என்பது சிறு வயதிலேயே தொடங்கப்பட வேண்டும். வேதாகமத்தில் உள்ள கட்டளையானது பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள் என்பதல்ல; “பிள்ளைகளே உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள்” என்பதாகும் [எபேசியர் 6:1

சொல்லப்போனால், சிட்சிக்க வேண்டும் என்ற கட்டளை  பெற்றோர்கள் இருவருக்குமே பொருந்தும்—தந்தையர்களுக்கு மட்டுமல்ல! பெற்றோர்கள் இருவரும் அவ்வாறு செய்யத் தவறினால் அது பாவம், அதன் விளைவு—பாவம் செய்யும் தங்கள் பிள்ளையைக் கண்டிக்கத் தவறியதற்காக அந்த பெற்றோரை [தேவன்] தண்டிப்பார்!

மேலும், எல்லா சிட்சிப்பும் இளம் வயதிலேயே உடல் ரீதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சில சமயங்களில், துக்கப்பட வைப்பது தண்டனையின் ஒரு வடிவமாக கொடுக்கப்படலாம். அதட்டுவதும், பிற மென்மையான தண்டனைகளும் ஒத்துவராக சூழுல்களில், பெற்றோர்கள் உடல் ரீதியான சிட்சையை கடைபிடிக்கலாம். ஆம், நாம் அவர்களை உடல்ரீதியாக நெறிப்படுத்த முடியாத ஒரு காலம் வரும், அப்போது பேசுவதுதான் சரியான சிட்சையாக தோன்றும். ஆனாலும் உடல் ரீதியான ஒழுக்கம் அவர்களை வளரச் செய்யும்.

எனவே, கற்பிப்பதுடன், தேவைக்கேற்ப அவர்களை சிட்சிக்கவும் வேண்டும். இது தகப்பன்மார்கள் செய்ய வேண்டிய இரண்டாவது கடமை.

3. அன்பானவர்

தகப்பன்மார்களே, உங்கள் பிள்ளைகள் அனைவரையும் சமமாக நேசியுங்கள்! அவர்களை உங்கள் வாழ்க்கையில் ஒரு இடைஞ்சலாக பார்க்காதீர்கள். அவர்களுடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் அன்பைக் காட்டுங்கள். அன்பான வார்த்தைகளைப் பேசுங்கள். அவர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது முடிந்தவரை அங்கேயே இருங்கள். ஒவ்வொரு நிகழ்வுக்கும் நீங்கள்  அவர்களுடன் இருக்க முடியாது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் முடிந்தவரை, உங்கள் அன்பைக் காட்டுங்கள். உங்கள் தொலைபேசி அல்லது டிவியைப் பார்த்து கவனத்தை சிதறடிக்காமல் அவர்களிடம் பேசுங்கள், கண்ணில் பார்த்து தொடர்பு கொள்ளுங்கள். நன்றாக செவிக்கொடுப்பவராக இருப்பதன் மூலம் அன்பைக் காட்டுங்கள். பெரும்பாலும், பிள்ளைகள் பரிசுகளை விட பெற்றோர் தங்களுடன் இருப்பதையே விரும்புகிறார்கள்.

பிலதெல்பியா பட்டணத்தை சேர்ந்த ஒரு முக்கிய கிறிஸ்தவ தொழிலதிபரின் மனைவி, தனது ஆறு வயது மகளுடன் போதுமான நேரத்தை செலவிடவில்லை என்று உணர்ந்தார். அந்த தோல்வியை ஒரே தவணை ஈடுகட்ட முடிவு செய்தார்.

அவர் தனது லிமோசின் கார் டிரைவருடன் பள்ளிக்கு அழைத்துச் சென்றார், அங்கு அவள் அழைத்துச் செல்லப்பட்டு பின் இருக்கையில் அவருக்கு அருகில்  அமர்த்தப்பட்டாள். அவர்கள் நியூயார்க் நகரத்திற்குப் புறப்பட்டனர், அவர் ஒரு விலையுயர்ந்த பிரெஞ்சு உணவகத்தில் இரவு உணவிற்கு முன்பதிவு செய்திந்திருந்தார் மற்றும் பெரும் திரையரங்கில் ஒரு நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

மாலையில் சோர்வுற்ற பிறகு, அவர்கள் வீட்டிற்கு சென்றனர். சிறுமியின் தாயார் மாலை எப்படி சென்றது என்பதைக் கேட்டறிய  இன்னமும் காத்திருக்க முடியாமல். “உனக்கு நேற்றைய பொழுது பிடித்திருந்ததா?” என்று காலை எழுந்தவுடன் கேட்டுவிட்டாள்.

சிறுமி ஒரு கணம் யோசித்தாள். “பரவாயில்லை, நான் உலகின் மிகப்பெரிய உணவகமாகிய மெக்டொனால்டில் சாப்பிட்டேன் என நினைக்கிறேன். மேலும் நான் கண்ட அந்த நிகழ்ச்சி எனக்குப் புரியவில்லையென்றாலும் அதில் சிறந்த விஷயம் என்னவென்றால், நாங்கள் அந்த பெரிய காரில் வீட்டிற்கு வரும் போது, ​​ அப்பாவின் மடியில் என் தலையை வைத்து தூங்கிவிட்டேன்.”

அன்பின் எளிய செயல்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். ஒருவர் தாங்கள் பெற்ற பிள்ளகளுடன் அருகிலிருக்காமல்  அன்பைக் காட்ட முடியாது!

எனவே, கற்பித்தல், சிட்சித்தல் ஆகியவற்றுடன், நாம் அவர்களை நேசிக்க வேண்டும். இது தகப்பன்மார்கள் செய்ய வேண்டிய மூன்றாவது கடமை.

4. ஒரு நல்ல உதாரணம்

கற்பித்தல் முக்கியமானது. ஆனால் நமது போதனைகளின்படி வாழ்வதும் மிகவும் முக்கியமானதாகும். தேவனின் சத்தியமானது ஒரு ஆணி போன்றது. நம் வாழ்க்கையே அந்த ஆணியை உள்ளே செலுத்தும் உதாரணமாகும்.

வேதத்தைப் படிக்கவும், தவறாமல் ஜெபிக்கவும் நம் பிள்ளைகளுக்குச் சொல்லிவிட்டு, அதை நாமே முன்மாதிரியாகக் கொள்ளவில்லை என்றால், நம் போதனை எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்? உண்மையைச் சொல்வதன் முக்கியத்துவத்தை நாம் அவர்களுக்குச் சொல்லி, பொய் சொல்வதற்காக தண்டிக்கிறோம், ஆனால் சிறிய விஷயங்களில் கூட நாம் அவர்கள் பொய் சொல்வதைப் பார்க்கிறார்கள், அது எப்படி நல்ல முன் உதாரணமாக இருக்க முடியும்? அல்லது, பணம், பொருள் போன்றவற்றைப் பற்றியே நாம் பேசிக்கொண்டிருப்பதை நம் பிள்ளைகள் தொடர்ந்து பார்த்தால், நம்மிடமிருந்து அவர்கள் எதை கற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்?

ஆனாலும், நாம் எல்லாவற்றிலும் தேவனை விசுவாசிப்பதையும், வேதத்தைப் படிப்பதையும், ஜெபிப்பதையும், மனத்தாழ்மையாக இருப்பதையும், நம் பேச்சில் உண்மையாக இருப்பதையும், தேவனுடைய ராஜ்ஜிய முன்னேத்திற்கு முயற்விப்பதையும், மன்னிக்கும் மனப்பான்மையைக் காட்டுவதையும் நம் பிள்ளைகள் பார்த்தால், அது எவ்வளவு நல்ல  என்ன உதாரணமாக இருக்கும்?

எனவே, கற்பித்தல், சிட்சை, அன்பு ஆகியவற்றுடன் கூடுதலாக, நாம் அவர்களுக்கு முன் ஒரு வேதாகம முன்மாதிரியை வைக்க வேண்டும். அது தகப்பன்மார்கள் செய்ய வேண்டிய நான்காவது மற்றும் இறுதி கடமை.

பிதாக்களே, எதைச் செய்யக்கூடாது, எதை செய்ய வேண்டும் என்று பார்த்தோம். “கடமையை செய்யத் தவறிய தகப்பமன்மார்கள்” பிரிவின் கீழ் வருபவர்களாக இருக்க வேண்டாம். இந்த சத்தியங்களை இருதயத்தில் கொண்டவர்களாக , கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டதைச் செய்ய உதவுவார் என்று நம்புவோம்.

நீங்கள் ஒரு நல்ல தகப்பனாக இருந்திருந்தால், அதற்காக தேவனுக்கு நன்றி சொல்லுங்கள். அவருக்கு எல்லா மகிமையையும் செலுத்தி, அவர் மீது தொடர்ந்து சார்ந்து கொள்ளுங்கள். ஒரு தகப்பானாக உங்கள் கதாபாத்திரத்தில் நீங்கள் சிரமப்பட்டிருந்தால், அவரிடம் அழுங்கள். உங்கள் தோல்விகளையும், மன வேதனைகளையும் அவர் அறிவார். கடந்த கால தோல்விகளின் விளைவுகளை நீங்கள் அனுபவித்தாலும், தேவன் அவற்றிலிருந்து நன்மையைக் கொண்டு வர முடியும். அவர் சூழ்நிலைகளை மாற்றுபவர். நீங்கள் அவரிடம் கூக்குரலிடும்போது, ​​பக்தியுள்ள தகப்பனாக இருப்பதற்கு அவர் உங்களுக்கு உதவுவார்.

ஆவிக்குரியத் துணை இல்லாத ஒற்றை பெற்றோராக [தாய் அல்லது தந்தை] நீங்கள் இருந்தாலும் மனம் தளராதீர்கள். நல்ல போராட்டத்தை தொடருங்கள். உங்கள் மன வேதனைகளை கர்த்தர் அறிவார். அவர் மீது தொடர்ந்து நம்பிக்கை வையுங்கள். எல்லாப் போராட்டங்களிலும் அவர் உங்களைத் தாங்குவார்.

தகப்பன்மார்களே [மற்றும் தாய்மார்களே], எனது உண்மையான வேண்டுகோள் இதுதான்: மண்டியிட்டு பிள்ளை வளர்ப்பை கற்றுக்கொள்வோம். நம் குடும்பங்களுக்காக நாம் தொடர்ந்து பரிந்து பேச வேண்டும். பூமியில் வாழ்ந்த மிகப் பெரிய மனிதர், பாவம் செய்யாத தேவனுடைய குமாரனே தொடர்ந்து ஜெபித்தார் என்றால், நம்முடைய ஜெபங்களில் நாம் அலட்சியமாக இருக்க முடியுமா? நம் வார்த்தைகளினால் பிள்ளைகளை நமக்கு சாதகமாக மாற்ற வேண்டுமானால், அவர்களின் இருதயங்களை மாற்றக்கூடிய கர்த்தரிடம் நாம் தினமும் அதிக நேரம் செலவிட வேண்டும்! “என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” [யோவான் 15:5] என்று நம் ஆண்டவர் தெளிவாகக் கூறியிருக்கிறார்!

இறுதியாக, நல்ல தகப்பன்கள் இல்லாதப் பிள்ளைகள் உட்பட, நம் அனைவருக்கும், உண்மையான மற்றும் நம்பகமான  தகப்பனாகியத் தேவனை காண உங்களை ஊக்குவிக்கிறேன். கிறிஸ்துவின் மூலம் அவரை விசுவாசிக்கிறவர்கள் அவருடைய குடும்பத்தில் தத்தெடுக்கப்பட்டு தம்மை “அப்பா-பிதாவே” என்று அழைக்க வேண்டும் என்பதற்காக, பிதாவானவர் தம்முடைய குமாரனை நம்முடைய பாவங்களுக்கு பரிபூரண பலியாக அனுப்பினார். என்ன ஒரு பெரிய பாக்கியம்! கிறிஸ்துவின் மூலம், பிதாவாகிய தேவனில் நமக்குத் தேவையான அனைத்தையும் காணலாம். அவருடைய பிள்ளையாக நாம் அவருக்குள் இளைப்பாறலாம்.

Category
Subscribe
Notify of
guest
0 கருத்துக்கள்
Oldest
Newest
Inline Feedbacks
View all comments