இயேசுவின் மரணம் — 4 ஆச்சரியமான உண்மைகள்

(English Version: “Death of Jesus – 4 Amazing Truths”)
“ஏனெனில், கிறிஸ்துவும் நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.” [1 பேதுரு 3:18]
சார்லஸ் ஸ்பர்ஜன் என்ற ஒரு பெரும் பிரசங்கியார் ஒரு கதையைச் சொன்னார். அக்கதையானது மனிதர்களின் மீதான பாவத்தின் ஆதிக்கத்தை விளக்குகிறது.
ஒரு கொடூரமான அரசன் தன் குடிமக்களில் ஒருவனைத் தன் முன்னிலையில் அழைத்து அவனுடைய தொழில் என்னவென்று கேட்டான். அதற்கு அந்த மனிதன் நான் ஒரு கொல்லன் என்று பதிலளித்தான். அந்த அரசன் அவனிடம் ஒரு நீளமான சங்கிலியை உருவாக்கும்படி கட்டளையிட்டான். அந்த மனிதன் அதற்கு கீழ்ப்படிந்து அதை செய்து, பல மாதங்களுக்குப் பிறகு அரசனிடம் அதை காட்ட வந்தான்.
இருப்பினும், அவன் செய்த வேலைக்கான பாராட்டுகளைப் பெறுவதற்குப் பதிலாக, சங்கிலியை இரண்டு மடங்கு நீளமாக்க அறிவுறுத்தப்பட்டான். “அவன் அந்த பணியையும் செய்து முடித்த பின், அதை மன்னனிடம் ஒப்படைத்தான். ஆனால் ‘திரும்பிச் சென்று அதன் நீளத்தை இரட்டிப்பாக்கும்படி’ என்று அவனுக்கு மீண்டும் கட்டளையிடப்பட்டது, இந்த நடைமுறை பலமுறை மீண்டும் மீண்டும் நடந்தேறியது. கடைசியாக, அந்த பொல்லாத கொடுங்கோலன் அந்த மனிதனை அவன் செய்த அந்த சங்கிலியில் பிணைத்து, அக்கினிச் சூளையில் தள்ளினான்.”
ஸ்பர்ஜன் மேலும் இவ்வாறு கூறினார், “பிசாசு மனிதர்களிடம் இதைத்தான் செய்கிறான். அவன் அவர்களைத் தங்கள் சொந்தச் சங்கிலியால் பிணைக்கச் செய்கிறான், பின்னர் அவர்களுடைய கைகளையும் கால்களையும் பிணைத்து, புறம்பான இருளில் தள்ளுகிறான்.”
அந்தக் கொடூரமான மன்னனைப் போலவே, பாவமும் தன் வேலையாட்களிடமிருந்து பயங்கரமான விலையை கொடுக்கும்படிக்கு எதிர்பார்க்கிறது. “பாவத்தின் சம்பளம் மரணம்” [ரோமர் 6:23] என்று வேதம் சொல்கிறது. இருப்பினும், அதில் உள்ள ஒரு நற்செய்தி என்னவென்றால் அந்த வசனத்தின் கடைசிப் பகுதி: “தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்” என கூறுகிறது. மேலும் நமக்கு நித்திய ஜீவனை வழங்க, இயேசு கிறிஸ்து மரிக்க வேண்டியிருந்தது. 1 பேதுரு 3:18 ஆம் வசனமானது அவருடைய மரணத்தைப் பற்றிய 4 ஆச்சரியமான உண்மைகளை நமக்குத் தருகிறது, அது அவருடைய மரணம் எல்லா மரணங்களையும் விட ஏன் மகத்தானது என்பதை வெளிப்படுத்துகிறது.
1. அது தனித்துவமானதாக இருந்தது. “கிறிஸ்துவும் பாவங்களுக்காக ஒருமுறை துன்பப்பட்டார்.” கிறிஸ்து எந்த பாவமும் செய்யவில்லை [1 யோவான் 3:5]. ஆனாலும், தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்த அன்பினால், பாவங்களுக்காக மரித்தார். அதுவே அவருடைய மரணத்தை தனித்துவமாக்குகிறது—எந்தப் பாவமும் செய்யாதவர் உங்களையும் என்னையும் போன்ற பாவிகளுக்காக மரித்தார்.
2. அது பூரணமானதாக இருந்தது. “பாவங்களுக்காக ஒரே தரம் மரித்தார்.” “பாவங்களுக்காக ஒரே தரம்” என்ற சொற்றொடருக்கு “ஒரு முறைமட்டும் மரித்தால் போதும், மறுபடியும் மறுபடியுமாக மரிக்கக்கூடாது” என்ற பொருளைத் தருகிறது. பாவங்களுக்கு மிருக பலிகள் இனியும் தேவையில்லை, சிலுவையில் இயேசு, “முடிந்தது” என்று கூறின [யோவான் 19:30] வார்த்தையின் அர்த்தம் என்னவென்றால் பாவங்களுக்கான விலைக்கிரயம் 50% அல்ல, 99% அல்ல மாறாக முழுமையாக செலுத்தப்பட்டது என்பதாகும். இரட்சிப்பின் பணி சிலுவையில் முடிந்துவிட்டது, அவருடைய மரணம் பூரணமானது, அவர் நம் பாவங்களுக்காக ஒரே தரம் மரித்தார்.
3. அது அநீதியுள்ளவர்களுக்கு நீதியாகவும், பிராயசித்தமாகவும் இருந்தது. வேதத்தில் இதுவரை பதிவு செய்யப்படாத மிக முக்கியமான அறிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். இந்தச் செயல்முறை கணக்கிடப்படுதல் அல்லது மாற்றுப் பிராயச்சித்தம் என்று அழைக்கப்படுகிறது, அதாவது ஒருவர் மற்றொருவரின் செயல்களால் தாக்கம் பெறுவது [2 கொரிந்தியர் 5:21]. நம்முடைய பாவங்களை விட்டுத் திரும்பி, அவருடைய மரணத்தை நம்முடைய பாவங்களுக்கான கிரயமாக ஏற்றுக்கொண்டு, அவரை நம்முடைய கர்த்தராகவும் இரட்சகராகவும் அங்கீகரித்து, நம்முடைய பாவங்களுக்குத் தகுந்த தண்டனையிலிருந்து நாம் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதற்காக, நமக்கு பதிலாய் இயேசு, நம்முடைய தண்டனையை ஏற்றுக்கொண்டு, நமக்கு பதிலாக மரித்தார். [ரோமர் 1:17, ரோமர் 1:17, அப்போஸ்தலர் 3:19, 1 கொரிந்தியர் 15:1-3, ரோமர் 10:9, அப்போஸ்தலர் 4:12].
4. அது நம்மை தேவனிடம் கொண்டு வரும் நோக்கமுடையதாக இருந்தது. அவர் சரீரத்தில் கொல்லப்பட்டார், ஆனால் ஆவியில் உயிர்ப்பிக்கப்பட்டார். பாவிகளை “தேவனிடம்” மீண்டும் சேர்ப்பவர் இயேசு. அவர் “சரீரத்திலே கொல்லப்பட்டதால்” இது சாத்தியமாகிறது. இருப்பினும், மரணம் அவருக்கு முடிவாக அமையவில்லை. தேவன் அவருடைய பரிபூரண தியாகத்தை ஏற்றுக்கொண்டதால், “ஆவியில் உயிரோடு எழுப்பினார்” என்று சுட்டிக்காட்டப்பட்டபடி, அவர் பரிசுத்த ஆவியின் மூலம் இயேசுவை மரித்தோரிலிருந்து சரீர ரீதியாக எழுப்பினார். இயேசுவின் உயிர்த்தெழுதலானது, அவருடைய மரணம் ஒரு நோக்கமுடையது என்பதைக் காட்டுகிறது—அது நம்மை தேவனிடம் கொண்டு வந்து நித்திய ஜீவனைப் பெற நமக்கு உதவுகிறது.
எனவே, இயேசுவின் மரணத்தைப் பற்றிய 4 ஆச்சரியமான உண்மைகளை பார்த்தோம்: அது தனித்துவமானது, பூரணமானது, பிராயசித்தமாக கொடுக்கப்பட்டது மற்றும் ஒரு நோக்கம் கொண்டது. தம்மையே நமக்காகக் கொடுத்த இந்த அற்புதமான இயேசுவை நாம் எப்படி நேசிக்காமல், வணங்காமல் இருக்க முடியும்?
பாரசீகப் பேரரசை ஸ்தாபித்த பேரரசர் கோரேஸ், ஒருமுறை ஒரு நாட்டின் இளவரசர் ஒருவரையும் அவரது குடும்பத்தினரையும் சிறைப்படுத்தினார். அவர்கள் அவருக்கு முன்பாக வரப்பட்டப்போது, மன்னர் கைதியிடம், “நான் உன்னை விடுவித்தால் எனக்கு என்ன தருவாய்?” என்று கேட்டார். “என்னுடைய செல்வத்தில் பாதி” என்பது அவனது பதிலாக அமைந்தது. “நான் உன் குழந்தைகளை விடுவித்தால் என்ன தருவாய்?” என்று கோரேஸ் மறுபடியும் கேட்டதற்கு “என்னிடம் உள்ள அனைத்தும் தருகிறேன்.” என்று அவன் கூறினான் “நான் உங்கள் மனைவியை விடுவித்தால் என்ன தருவாய்?” என்று கோரேஸ் மறுபடியும் வினவ “அரசே, நான் என்னையே கொடுக்கிறேன்.” என்று அந்த இளவரசன் கூறினான்.
கோரேஸ் மன்னன் அவனுடைய பக்தியால் மிகவும் நெகிழ்ந்து அவர்கள் அனைவரையும் விடுவிப்பாதாக கூறினான். அவர்கள் வீடு திரும்பியதும், இளவரசர் தன் மனைவியிடம், “கோரேஸ் ஒரு அருமையான மனிதர் அல்லவா!” என்று கேட்டான். அவள் தன் கணவன் மீதான ஆழ்ந்த அன்பான பார்வையுடன், அவனிடம் சொன்னாள், “நான் அதை கவனிக்கவில்லை, எனக்காக உங்களையே கொடுக்க தயாராக இருந்த உங்கள் மீது மட்டுமே நான் என் கண்களை வைத்திருந்தேன்” என்றாள்.
நாம் பாவிகளாக இருக்கையில், நம்மில் அன்புகூர்ந்து நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரன் மீது நோக்கமாக இருப்போமாக! [கலாத்தியர் 2:20]
பாவங்களுக்காக மரித்த கிறிஸ்து இயேசுவிடம் நீங்கள் இதுவரை திரும்பவில்லை என்றால், உங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி, உங்கள் பாவங்களுக்கான கிரயமாகிய இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டு உங்கள் வாழ்க்கையின் ஆண்டவராகவும் இரட்சகராகவும் அரவணைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.