கோபமும், அது உருவாக்கும் பேரழிவும்–பகுதி 2 கோபம் என்றால் என்ன?

Posted byTamil Editor January 7, 2025 Comments:0

(English version: Sinful Anger – The Havoc It Creates (Part 2))

பாவ நோக்கிலான கோபம் என்ற தொடரின் இரண்டாவது வலைப்பதிவு இது.  பகுதி 1  பாவ நோக்கிலான கோபத்தைப் பற்றிய பொதுவான அறிமுகமாக இருந்தது. இந்த பதிவில், பாவ நோக்கிலான கோபம் என்றால் என்ன? என்ற முதல் கேள்வியைக் குறித்து பார்க்கப் போகிறோம்.

கோபம் என்றால் என்ன?

பாவ நோக்கிலான கோபத்தைக் குறித்து பார்ப்பதற்கு முன், கோபத்தின் பொதுவான செயல்பாட்டு வரையறையைக் குறித்து பார்ப்போம். இங்கே ஒரு எளிய வரையறை கொடுக்கப்பட்டுள்ளது:

கோபம் என்பது நாம் தார்மீக ரீதியில் தவறு என்று உணரும் செயலுக்கான எதிர்வினை.

நாம் அனைவரும் இது சரி, இது தவறு என்று உணரும் தரநிலைகளின்படி வாழ்கிறோம். அந்தத் தரநிலையின்படி தவறு நடந்தால், நம் உணர்ச்சிகளை வலுவாக வெளிப்படுத்துகிறோம். இதன் அடிப்படை கோபமாக இருந்தாலும் இது பாவம் அல்ல. இது எல்லா மனிதர்களுக்கும் தேவன் கொடுத்த உணர்வு. இருப்பினும், நீதியான கோபம் எது என்றும் பாவ நோக்கிலான கோபம் எது என்றும் வேதம் வேறுபடுத்துகிறது.

நீதியான கோபம்.

நீதியான கோபம் என்பது வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி தேவனின் தார்மீக சட்டம் [அதாவது எது சரி எது தவறு என்ற தேவனுடைய தரநிலை] உடைக்கப்படும்போது வெளிப்படுத்தப்படும் உணர்ச்சியாகும். இந்த கோபம் தேவனை அவமானப்படுத்தியதன் விளைவாக இருந்தாலும், நெறிப்படுத்தப்பட்ட ஒன்று.

பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகளும், புதிய ஏற்பாட்டின் அப்போஸ்தலர்களும் பல்வேறு சமயங்களில் நீதியான கோபத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர். இயேசுகிறிஸ்துவே இரண்டு சந்தர்ப்பங்களில் நீதியான கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் [தேவாலயத்தை சுத்தம் செய்தல்-யோவான் 2:13-17; மத்தேயு 21:12-13].

அதுபோல நாமும் நியாயமான கோபத்தை வெளிப்படுத்தலாம். நீதியான கோபத்தை நாம் வெளிப்படுத்தும் சில  சூழ்நிலைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன: தேவனுடைய வார்த்தையானது கள்ளப் போதனைகளால், பலவீனமான போதனைகளால் தாக்கப்படும்போதும், தீமை நடக்கும்போதும் [உதாரணம்: கருக்கலைப்பு, கற்பழிப்பு, கொலை] நாம் கோபத்தை வெளிப்படுத்தக்கூடும். ஆனாலும், அந்த சூழ்நிலைகளில், இது ஒரு நெறிப்படுத்தப்பட்ட உணர்ச்சியாக இருக்க வேண்டும்,  அவசரமாக செயல்படக்கூடாது. மாறாக, தேவனுடைய மக்கள் நீதியான கோபத்தை சரியான விதத்தில் வெளிக்காட்டுவதில்லை என்று சொல்லலாம்!

பாவ நோக்கிலான கோபம்.  

பாவ நோக்கிலான கோபம் என்பது தேவனுடைய தார்மீக சட்டம் மீறப்பட்டதன் பிரச்சினை அல்ல.  மாறாக நாம் கீழ்காண்பவைகளை உணரும்போது எழும் கோபம்:

நம் தரநிலைகள் [அல்லது சட்டங்களின் தொகுப்பு] உடைக்கப்படும்போது;
நாம் வெட்கத்திற்குள்ளாக்கப்படும்போது;
நம் விருப்பப்படி காரியங்கள் நடக்காதபோது;
காரியங்கள் நம்முடைய வழிக்கு வராதபோது.

நம் சொந்த தேவைகள் அல்லது எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்று உணரும்போது எழும் விரக்தி இது. ஆனாலும், நம்முடைய பாவ நோக்கிலான கோபத்தை நீதியான கோபமாக நியாயப்படுத்தும் போக்கு உலகில் காணப்படுகிறது. இதற்கு வேதத்திலேயே இரண்டு எடுத்துக்காட்டுகள் உள்ளன.

முதல் உதாரணம் யாக்கோபின் மகன்களான சிமியோன் மற்றும் லேவியைப் பற்றியது. கானானுக்குத் திரும்பியதும், யாக்கோபு மற்றும் அவரது குடும்பத்தினர் சீகேமுக்கு அருகில் குடியேறினர் [ஆதியாகமம் 33:18-19]. எதிர்பாராதவிதமாக, யாக்கோபின் மகள் தீனாள் நகருக்குள் சென்றபோது, அந்த நகரத்தின் தலைவனுடைய மகனான சீகேமினால் கற்பழிக்கப்பட்டாள் [ஆதியாகமம் 34:1-2]. உண்மையிலேயே இது ஒரு சோகமான சம்பவம்!

இதற்கு பதிலாக, யாக்கோபின் மகன்கள் சீகேமின் ஆட்களை ஏமாற்றி, விருத்தசேதனம் செய்து தீனாளை திருமணம் செய்து கொள்ள செய்கிறார்கள் [ஆதியாகமம் 34:13-24]. இருப்பினும், மூன்று நாட்களுக்குப் பிறகு, சிமியோனும் லேவியும் நகரத்திற்குச் சென்று, சீகேம் மற்றும் அவனது தந்தை உட்பட அனைத்து ஆண் மக்களையும் கொன்று போட்டனர்.

அவர்கள் நகரம் முழுவதையும் கொள்ளையடித்து, விலங்குகள் உட்பட அனைத்து பொருட்களையும் கைப்பற்றினர் [ஆதியாகமம் 34:25-29]. பின்னர், அவர்கள் “அகங்காரத்தினாலே அரண்களை நிர்மூலமாக்கினார்” [ஆதியாகமம் 49:6] என்று வாசிக்கிறோம்! இந்த 2 கோபங்கொண்ட மனிதர்கள் விலங்குகள் உட்பட குற்றத்திற்குட்படாத அப்பாவியான மனிதர்களையும் காயப்படுத்தினர்.

யாக்கோபு அவர்களின் செயல்களை கண்டனம் செய்தபோது, அவர்கள்: எங்கள் சகோதரியை ஒரு வேசியைப்போல நடத்தலாமோ என்றார்கள்” [ஆதியாகமம் 34:31]. ஒரு தனிமனிதனின் பாவத்திற்கு பதிலடியாக அவர்கள் ஒரு முழு நகரத்தின் மனிதர்களை படுகொலை செய்ததை நியாயப்படுத்தினர்! அவர்களுடைய கோபம் பாவ நோக்கிலான கோபமாக இருந்தது, ஏனென்றால்  இந்த வார்த்தைகளால் அவர்களின் செயல்களை யாக்கோபு கடுமையாகக் கண்டிக்கிறார், உக்கிரமான அவர்கள் கோபமும் கொடுமையான அவர்கள் மூர்க்கமும் சபிக்கப்படக்கடவது; யாக்கோபிலே அவர்களைப் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும் பண்ணுவேன்” [ஆதியாகமம் 49:7]!

இரண்டாவது உதாரணம், தங்கள் பாவத்திலிருந்து மனந்திரும்பிய நினிவேவாசிகளுக்கு நியாயத்தீர்ப்புக்கு பதிலாக தேவன்  இரக்கம் காட்டியதற்கு யோனாவின் எதிர்வினைப் பற்றியது [யோனா 3:10]. “யோனாவுக்கு இது மிகவும் விசனமாயிருந்தது; அவன் கடுங்கோபமடைந்தான்” [யோனா 4:1]. “இப்போதும் கர்த்தாவே, என் பிராணனை என்னை விட்டு எடுத்துக்கொள்ளும்; நான் உயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும்” என்றான் [யோனா 4:3]

தேவன் பொறுமையாக இருந்தபோதிலும், “நீ எரிச்சலாக இருப்பது நல்லதோ?” என்று இருமுறை வினவினார் [யோனா 4:4, 9], அதற்கு யோனா நான் மரணபரியந்தமும் எரிச்சலாயிருக்கிறது நல்லதுதான்” என்று பிடிவாதமாக கூறினான் [யோனா4:9]! தன்னுடைய தரநிலையின்படி தேவன் செயல்படாததால் அவன் வாழ்வதை விட மரிப்பதை விரும்பினான். இது நீதியான கோபமல்ல, மாறாக பாவ நோக்கிலான கோபம் நீதியான கோபமாக நியாயப்படுத்தப்பட்டது!

சிமியோன், லேவி மற்றும் யோனாவைப் போலவே, நம்முடைய கோபத்தை நீதியான கோபம் என்று நியாயப்படுத்த நம் இருதயங்களும் எளிதில் வஞ்சிக்கப்படலாம். உண்மையில்,  இது பெருமை மற்றும் சுயநலத்தின் வெளிப்பாடாகும். பைத்தியக்காரத்தனமாக இருப்பது “சரி” என்று நாம் உணரும் வரை, நம் கோபத்தை பாவமாக ஒருபோதும் பார்க்க மாட்டோம், இது மிகவும் அழிவுகரமான இயல்பு.

ஆம், இயேசுகிறிஸ்துவே நீதியான கோபத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், அவர் பாவநோக்கிலான கோபத்தால் ஒருபோதும் கட்டுப்படுத்தப்படவில்லை. ஒரு எழுத்தாளரின் வார்த்தைகளை இங்கு குறிப்பிடுவது பயனுள்ளதாக இருக்கும்:

“இயேசுகிறிஸ்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தம்முடைய தனிப்பட்ட ஈகோ தன்மையால் கோபமடையவில்லை. இன்னும் சொல்லப்போனால், அவர் அநியாயமாக கைது செய்யப்பட்டபோதும், நியாயமற்ற முறையில் விசாரிக்கப்பட்டபோதும், சட்டவிரோதமாக அடிக்கப்பட்டபோதும், முகத்தில் துப்பப்பட்டபோதும், சிலுவையில் அறையப்பட்டபோதும், பரிகாசம் பண்ணப்பட்டபோதும், அவர் ஈகோ கொள்வதற்கான முகந்திரம் பல இருந்த போதும், பேதுரு கூறுவது போல், “அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்” (1 பேதுரு 2:23). அவரது வறண்ட உதடுகளிலிருந்து இந்த இரக்கமிக்க வார்த்தைகள் வெளிவந்தன,பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே (லூக்கா 23:34). நாம் பொதுவாக ஒப்புக்கொள்ள வேண்டியது என்னவென்றால் நாம் தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்தப்படும்போதும், புண்படுத்தப்படும்போதும் எளிதில் கோபப்படுகிறோம். ஆனால், பாவமும் அநீதியும் பெருகுவதை நாம் பார்க்கும்போது தாமதமாக கோபப்படுகிறோம்.”

நாம் பாவ நோக்கிலான கோபத்தை வெளிக்காட்டுவதிலிருந்தும், நீதியான கோபத்தை வெளிப்படுத்தத் தவறுவதிலிருந்தும் மனந்திரும்புவோமாக. நமது அடுத்த பதிவில் அடுத்த கேள்வியான “பாவநோக்கிலான கோபத்தின் மூலாதாரம் எது?” என்பதை பற்றி பார்ப்போம்.

Category
Subscribe
Notify of
guest
0 கருத்துக்கள்
Oldest
Newest
Inline Feedbacks
View all comments