கோபமும் அது உருவாக்கும் பேரழிவும்—பகுதி 1 முன்னுரை

Posted byTamil Editor December 24, 2024 Comments:0

(English version: “Sinful Anger – The Havoc It Creates (Part 1)”)

கோபம்-குறிப்பாக பாவநோக்கத்துடனான கோபம் என்ற தலைப்பில் புதிய வலைப்பதிவுகளைத் தொடங்குகிறோம். அநியாயமான கோபம் என்பது ஒரு பரவலான பாவம், விசுவாசிகளும் அதினால் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள். கட்டுப்பாடற்ற கோபத்தின் விளைவாக குடும்பத்திலும், சபையிலும் உள்ள உறவுகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

வேதத்தின் முதல் கொலைக்குப் பின்னால் கோபம் இருந்தது—காயீன் தன் சகோதரன் ஆபேலைக் கொன்றான்!  காயீனின் காணிக்கையை நிராகரித்து,  ஆபேலின் காணிக்கையை தேவன் ஏற்றுக்கொண்டதன் விளைவை வேதம் நமக்கு இப்படிச் சொல்கிறது: “காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது”[ஆதியாகமம் 4:5]. கோபத்தின் ஆபத்துக்களைப் பற்றி தேவன் அவனை எச்சரித்ததாகவும் வேதம் கூறுகிறது, “அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? 7 நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய்” [ஆதியாகமம் 4:6-7]. இப்படி தெளிவான எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தபோதிலும், தனது அடக்க முடியாத கோபத்தின் காரணமாக, காயீன் ஆபேலைக் கொலை செய்தான்! கோபம் எவ்வளவு அழிவுகரமானது!

எல்லாக் கோபமும் உண்மையாகவே கொலையில் முடிவதில்லை என்றாலும், மத்தேயு 5:22-ல் கூறப்பட்டுள்ள, “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளுகிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்.” என்ற இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகள், கோபத்தின் விஷயத்தை நாம் மிகுந்த சிரத்தையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது. எனவே, இந்த வலைப்பதிவுகளின் தொடர்  கோபத்தின் விஷயத்தை வேதத்தின் அடிப்படையில் அணுக உதவுகிறது.

பின்வரும் பதிவுகளில், கோபம் தொடர்பான 6 விஷயங்களைப் பார்ப்போம்:

1. கோபம் என்றால் என்ன?

2. பாவ ரீதியிலான கோபத்தின் மூல காரணம் எது?

3. பாவ ரீதியிலான கோபத்தின் இலக்கு யார்?

4. பாவ ரீதியிலான கோபம் வெளிப்படும் பொதுவான வழிமுறைகள் யாவை?

5. பாவ ரீதியிலான கோபத்தின் அழிவுகரமான விளைவுகள் எவை?

6. பாவ ரீதியிலான கோபத்திலிருந்து நாம் எவ்வாறு விடுபடுவது?

இந்த பதிவில், இந்த விஷயத்தை எளிமையாக அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில், அற்பத்தனமான விஷயங்களுக்காக கொடிய மோதல்களில் ஈடுபட்ட நபர்களைப் பற்றிய பல “விசித்திரமான உண்மை கதைகள்” கூறப்படுகின்றன.

  • 48 வயதான ஒரு மனிதர் தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் தன் மனைவியை கொன்று போட்டார்.
  • தனது காதலிக்கு பிடிக்காத காலை உணவை உணவகத்தில் இருந்து வீட்டிற்கு கொண்டு வந்ததால் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.
  • வெப்பச் சீர்காப்புக் கருவி [Thermostat] அமைப்பதில் ஏற்பட்ட சண்டையில் 37 வயது நபர் ஒருவர் அவரது அறை தோழியால் அடித்துக் கொல்லப்பட்டார்.
  • கார் ஸ்டீரியோவில் தனக்கு பிடிக்காத குறிப்பிட்ட வகை பாடலை இசைத்துக்கொண்டிருந்த ஒருவரை சுட்டுக் கொன்றதாக 15 வயது சிறுவன் குற்றம் சாட்டப்பட்டான்.
  • தனது மகளும் அவளுடைய தோழியும் ஒருவரோடொருவர் வாக்குவாதம் செய்ததற்கு ஒரு சிறிய தண்டனை கொடுத்த கூடைப்பந்து பயிற்சியாளரை, தந்தை கடுமையாக தாக்கி, அவர் மயக்கம் அடையும் வரை முகத்திலும் தலையிலும் பலமுறை குத்தினார். 

திரும்பிப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள்  மனித உறவுகளை பாதிக்கும் ஆத்திரமூட்டும் சம்பவங்களை கேட்கக்கூடும். ஜே ஆடம்ஸ்  என்ற ஒரு பிரபல கிறிஸ்தவ ஆலோசகர், அனைத்து ஆலோசனை பிரச்சனைகளிலும் 90 சதவிகிதம் கோபம் சம்பந்தப்பட்டிருப்பதாக மதிப்பிட்டுள்ளார். இது உண்மை தான் போலிருக்கிறது! கோபம் உண்மையில் நம் வாழ்வில் அழிவை ஏற்படுத்துகிறது. திருப்பித் தாக்கும் சக்தி கொண்ட உணர்ச்சிகளில் இதுவும் ஒன்று:

  • திருமண பந்தத்தில் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டியவர்கள், ஒரே வீட்டில் ஒன்றாக ஏனோதானோ என்று வாழ்கிறார்கள்.
  • நல்ல நண்பர்கள் வெறுக்கப்பட்ட எதிரிகளாக மாறுகிறார்கள்.
  • ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தின் கூடுகை சண்டையில் முடிகிறது, அது தீர்க்கப்படுவது மிகவும் கடினம்.
  • அக்கறையும், கரிசனையுமுள்ள பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் முகத்தில் அடித்தாற்போல் ஒரே விஷயத்தைக் கொண்டு திரும்பத் திரும்பச் கத்துகிறார்கள்.
  • ஒரு அமைதியான ஊழியர், தன் நீண்டகாலப் பணியை விட்டு நீக்கப்பட்டதால் அலுவலகக் கட்டிடத்தில் தரை தளத்திற்கு சென்று ஒரு தானியங்கி ஆயுதத்தால் வெறி பிடித்தாற்போல் தோட்டாக்களால் அப்பாவி மக்களைக் கொல்கிறார்.

“சிறந்ததைப் பெற நீங்கள் கோபம் கொண்டால், அது உங்களில் உள்ள மோசமானதை வெளிப்படுத்தும்” என்ற கூற்று எவ்வளவு துல்லியமானது. கோபம் என்பது ஆண்களின் பிரச்சினை மட்டுமல்ல―பெண்களையும் பாதிக்கிறது. இது கிறிஸ்தவர்கள் உட்பட அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு உலகளாவிய பிரச்சனை!

ஆனாலும், கட்டுப்பாடற்ற கோபத்தின் காரணமாக, ஆனந்தமான இல்லத்தின் யதார்த்தம் குழப்பமாக மாறுகிறது. இந்த கோபத்தின் பிரச்சனையை தீர்ப்போம் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? ஆம்―கோபப் பிரச்சனையை வேதத்தில் காணப்படும் சரியான வழியில் சமாளிக்க நாம் தயாராக இருந்தால் மட்டுமே இந்த பிரச்சனையை தீர்க்க முடியும்!  இதற்கு வேதம் ஏன் அவசியம்? ஏனெனில் கோபம் ஒரு மருத்துவ பிரச்சனை அல்ல; இது ஒரு பாவப் பிரச்சனை, அது ஆவிக்குரிய பிரச்சனையாக இருக்கிறது. ஆவிக்குரிய பிரச்சனைகளை ஆவிக்குரிய சத்தியங்களால் மட்டுமே எதிர்க்கொள்ள முடியும்.

2 தீமோத்தேயு 3:16-17, “16 அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” கோபத்தையும், மற்ற எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்க வேதம் போதுமானது என்பதை இந்த வசனங்கள் தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்துகின்றன. அதனால்தான் பின்வரும் வலைப்பதிவுகள் நாம் கோபத்தை எவ்வாறு திறம்பட கையாள்வது என்பதை வேதத்திலிருந்து எடுத்து கூறுகிறது. கோபம் கொண்டு வரும் அழிவுகரமான குறுகிய அல்லது நீண்ட கால விளைவுகளுக்கு பலியாகாமல் தொடர்ந்து நம்மைக் காத்துக்கொள்வது இன்றியமையாதது. 

இந்தத் தொடரை படிக்கும் அனைவருக்கும் இது ஆசீர்வாதமாக இருக்கவும், தம்மை “சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்” என்று சித்தரித்த இயேசுகிறிஸ்துவைப் போல உருவாக்கப்படவும் பரிசுத்த ஆவியானவர் இதைப் பயன்படுத்த ஜெபியுங்கள் [மத்தேயு 11:29].

 

Category
Subscribe
Notify of
guest
0 கருத்துக்கள்
Oldest
Newest
Inline Feedbacks
View all comments