கோபமும், அது உருவாக்கும் பேரழிவும்–பகுதி 5 பாவ நோக்கிலான கோபத்தை வெளிப்படுத்தும் பொதுவான விதங்கள் யாவை?

Posted byTamil Editor March 25, 2025 Comments:0

(English version: “Sinful Anger – The Havoc It Creates (Part 5)”)

பாவ நோக்கிலான கோபம் என்ற வலைப்பதிவில் இது 5 வது பகுதியாகும். பகுதி 1, பாவ நோக்கிலான கோபம் பற்றிய பொதுவான அறிமுகத்தையும், பகுதி 2, “கோபம் என்றால் என்ன?” என்ற முதல் கேள்வியையும், பகுதி 3, பாவ நோக்கிலான கோபத்தின் ஆதாரம் என்ன? என்ற இரண்டாம் கேள்வியையும், பகுதி 4, பாவ நோக்கிலான கோபத்தின் இலக்கு யார்?  என்ற மூன்றாம் கேள்வியையும், ஆய்வு செய்தது. 

இந்தப் பதிவில், பாவ நோக்கிலான கோபம் வெளிப்படுத்தப்படும் பொதுவான விதங்கள் யாவை?  என்ற நான்காம் கேள்வியைப் பார்க்கப்போகிறோம். 4வது கேள்விக்கு செல்வதற்கு முன் முதலில் 3 கேள்விகளை மதிப்பாய்வு செய்வது நலமாக இருக்கும்.

இரண்டாம் பகுதியில் “கோபம் என்றால் என்ன?” என்ற முதல் கேள்விக்கு, பின்வரும் எளிய வரையறையுடன் பதிலளிக்கப்பட்டிருந்தது: கோபம் என்பது தார்மீக ரீதியில் தவறு என்று நாம் உணரும் ஒரு செயலுக்கான எதிர்வினையாகும். எனவே, அதன் அடிப்படை அர்த்தத்தில், கோபம் ஒரு பாவம் அல்ல. இது எல்லா மனிதர்களுக்கும் தேவன் கொடுத்த உணர்வு. இருப்பினும், வேதமானது இதை நீதியான கோபமெனவும், பாவ நோக்கிலான கோபமெனவும் வேறு பிரிக்கிறது.

நீதியான கோபம் என்பது வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி தேவனின் தார்மீக சட்டம் [அதாவது எது சரி எது தவறு என்ற தேவனுடைய தரநிலை] உடைக்கப்படும்போது வெளிப்படுத்தப்படும் உணர்ச்சியாகும். இந்த கோபம் தேவனை அவமானப்படுத்தியதன் விளைவாக இருந்தாலும், நெறிப்படுத்தப்பட்ட ஒன்று. மறுபுறம் பாவ நோக்கிலான கோபம் என்பது தேவனுடைய தார்மீக சட்டம் மீறப்பட்டதன் பிரச்சினை அல்ல.  மாறாக நாம் கீழ்காண்பவைகளை உணரும்போது எழும் கோபம்: நம் தரநிலைகள் [அல்லது சட்டங்களின் தொகுப்பு] உடைக்கப்படும்போதும்; நாம் வெட்கத்திற்குள்ளாக்கப்படும்போதும்; நம் விருப்பப்படி காரியங்கள் நடக்காதபோதும்; காரியங்கள் நம்முடைய வழிக்கு வராதபோதும்; நம் சொந்த தேவைகள் அல்லது எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படவில்லை என உணரும்போது எழும் விரக்தி இது.

மூன்றாம் பகுதி பாவ நோக்கிலான கோபத்தின் மூலாதாரம் எது? என்ற கேள்வியை விவரித்தது. பிரச்சனைக்கான ஆழமான காரணம் கோபமல்ல. மாறாக, பாவம் நிறைந்த இருதயம் தான் என்பதை நாம் பார்த்தோம்!  எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாதசிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும்” [மாற்கு 7:21-23] என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார்.

பாவ நோக்கிலான கோபம் உட்பட அனைத்து தீய செயல்களின் மூலாதாரத்தையும் இருதயத்தில் காணலாம். வேதத்தின்படி, இருதயம் என்பது நம் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும், விருப்பத்தையும் உள்ளடக்கிய ஒரு பகுதியாகும். இருதயம் தவறான ஆசைகளால் நிறைந்து, அந்த ஆசைகள் நிறைவேறாமல் போனால், பாவ நோக்கிலான கோபம்தான் அதற்கு எதிர்வினையாக இருக்கும். 

நான்காம் பகுதி பாவ நோக்கிலான கோபத்தின் இலக்கு யார்?  என்ற மூன்றாம் கேள்வியை ஆராய்ந்தது. கோபமானது தேவனுக்கும், தனக்குள்ளும் மற்றும் பிறருக்கும் எதிராக வெளிப்படுத்தப்படக்கூடும் என்று இந்தக் கேள்விக்கு பதிலளிக்கப்பட்டது.

தேவன் நமக்குச் செய்வார் என்று நாம் எதிர்பார்த்ததைச் செய்யத் தவறியதன் மூலமோ அல்லது நாம் எதிர்பார்க்காத ஒன்றைச் செய்து அவர் நம்மைத் தாழ்த்திவிட்டதாக உணருவதால் தேவனுக்கு எதிரான கோபம் விளைகிறது. உள்கோபம் என்பது சுயமாக ஏற்படுத்திக் கொண்ட தண்டனையாகும், இது நமது தோல்விகளின் விளைவாக நமக்கு எதிராக நாமே செலுத்திக்கொள்வது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நமது தோல்விகளுக்கு நம்மை நாமே தண்டித்துக்கொள்கிறோம். இறுதியாக, மற்றவர்களுக்கு எதிரான கோபம், நம் எல்லாருக்குள்ளும் பொதுவாக காணப்படுகிறது.  தார்மீக ரீதியாக நாம் தவறாகக் கருதும் ஒன்றை மக்கள் செய்ததாக அல்லது செய்யத் தவறிவிட்டதாக நாம் உணரும்போது விளைகிறது.

இந்த சுருக்கமான மதிப்பாய்வுடன், பாவ நோக்கிலான கோபத்தைப் பற்றிய நான்காவது கேள்வியை ஆராய்வோம்.

IV. பாவ நோக்கிலான கோபத்தை வெளிப்படுத்தும் பொதுவான விதங்கள் யாவை?

மக்கள் தங்கள் பாவ நோக்கிலான கோபத்தை வெளிப்படுத்தும் விதங்களில் வேறுபடுகிறார்கள். அதை பிரஷர் குக்கரின் மூன்று நிலைகளுடன் ஒப்பிடலாம்.

1. அமைதியாக வெளிப்படுத்துதல் 

பிரஷர் குக்கரின் முதல் கட்டத்தில், வெப்பம் உள்ளே அமைதியாக உருவாகிறது. அதேபோல், சிலர் வெளியில் மிகவும் அமைதியாகத் தோன்றினாலும் உள்ளுக்குள் கோபத்தை அடக்கிக் கொண்டு, ஆத்திரத்தால் பொங்குகிறார்கள்–ஆனால், வெளியில் சிரித்த முகத்தை வைத்துக் கொள்கிறார்கள். சில சமயங்களில் இது பல ஆண்டுகளாகக் கூட நீடிக்கும்! 

அவர்களைக் கவனிக்கும் மற்றவர்கள் அவர்களை மிகவும் கட்டுக்கோப்பானவர்கள் என்று நினைத்து ஏமாந்துப்போகிறார்கள். பாவ நோக்கிலான கோபத்தை வெளிப்படுத்தும் இந்த வகையைச் சேர்ந்தவர்கள் இயல்பாகவே அதிக உள்முக சிந்தனை உடையவர்களாகவும், கூச்ச சுபாவமுள்ளவர்களாகவும் இருப்பார்கள்–வெளியில் அதிகம் வெளிப்படுத்தமாட்டார்கள்.

இருப்பினும், வெளியில் அமைதியாக இருப்பதால் உள்ளே கோபமில்லாமல் இருக்கிறார்கள் என்று பொருள்படாது. இருதயமானது கோபத்தின் தீர்க்கமான அணுகுமுறையுடன் கடினமாகி, காலப்போக்கில், இந்த கோபம் வார்த்தைகளாலும், செயல்களாலும் வெளிப்படுத்தப்படுகிறது.

2. நிலையாக வெளிப்படுத்துதல்

பிரஷர் குக்கரின் இரண்டாம் கட்டத்தில், வெப்பநிலை உயரும்போது மூடி மெதுவாகவும் சீராகவும் சிறிய அளவிலான நீராவியை வெளியேற்றும். பாவ நோக்கிலான கோபத்தை வெளிப்படுத்தும் இந்த வகை மக்கள், கிண்டலான கருத்துகள், புண்படுத்தும் செயல்கள் மூலம் தங்கள் கோபத்தை தொடர்ந்து சீராக வெளிப்படுத்துபவர்கள். சில சமயங்களில், சாதாரணமாக பார்க்கிறவர்கள் தெளிவாகக் கவனிக்காத விதத்தில் அவை மற்றவரை காயப்படுத்துகின்றன. எனினும் உள்ளிருக்கும் கோபமானது தொடர்ந்து வெளிப்படுத்தப்படுகிறது.

3. கோபத்தால் உடனே கொப்பளித்தல் 

பிரஷர் குக்கரின் மூன்றாவது கட்டத்தில், பலத்த சத்தத்துடன் முழு நீராவி வெளியேறுவதைக் காண்கிறோம். பாவ நேக்கிலான கோபத்தை வெளிப்படுத்தும் இவர்கள் கோபத்தால் கொப்பளிக்கும் வகை சார்ந்தவர்கள். இவர்களின் கோபம் பொதுவாக கத்துதல், கோபமான முடிவுகளை எடுத்தல் மற்றும் உடல் ரீதியிலான நடத்தை ஆகியவற்றால் குறிக்கப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, அப்பாவி குழந்தைகள் கூட இத்தகைய கோபமான பெற்றோரின் கைகளில் சிக்கிக்கொள்கிறார்கள், இதில்  சில சமயங்களில் உடல் ரீதியான துஷ்பிரயோகம் கூட இருக்கலாம்.

இப்படி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் நபர்கள், “நான் என் உணர்வுகளை மறைக்கவில்லை. வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறேன். எனக்கு பைத்தியம் பிடித்தால், அதையெல்லாம் வெளியே சொல்லிவிடுவேன். நான் எங்கு நிற்கிறேன் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துகிறேன்” என்று கூட சொல்லலாம். இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லி தங்கள் வெளிப்படைத் தன்மைக்காக புகழப்பட வேண்டும் என்று அவர்களின் திருக்குள்ள மனம் எதிர்பார்க்கிறது!

ஒட்டுமொத்தமாக, இந்தப் பதிவின் முக்கிய அம்சம் இதுதான்: கோபத்தின் அனைத்து வெளிப்பாடுகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இது வெளிப்படுத்தும் பாணியில் வேறுபடுகிறது. ஒரே நபர் தன் கோபத்தை காலப்போக்கில் அமைதியாகவும், எல்லா நேரங்களிலும் சீராகவும், அவ்வப்போது வெடிக்கும் விதமாகவும் வெளிப்படுத்த முடியும். கோபத்தை எப்படி வெளிப்படுத்தினாலும், பின்விளைவுகள் உள்ளன-சில நேரங்களில்   அவை மிகவும் அழிவுகரமானவை,  இதைக் குறித்து அடுத்த பதிவில் பார்ப்போம்.

Category
Subscribe
Notify of
guest
0 கருத்துக்கள்
Oldest
Newest
Inline Feedbacks
View all comments