பாக்கியவான்கள்—பகுதி 5 நீதியின்மேல் பசி தாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்

(English version: “The Beatitudes – Blessed Are Those Who Hunger And Thirst For Righteousness”)
இந்த பதிவானது மத்தேயு 5:3-12 ஆகிய வசனங்கள் வரை விரவியிருக்கும் பாக்கியங்களைப் பற்றிய தொகுப்புகளின் தொடரின் 3வது பதிவாகும். இந்த பகுதியில், ஆண்டவராகிய இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இருக்க வேண்டிய 8 அணுகுமுறைகளை விவரிக்கிறார். எனினும், இந்த பதிவில், மத்தேயு 5:4 ல் விவரிக்கப்பட்டுள்ள “நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்” என்ற நான்காவது அணுகுமுறையைப் பார்ப்போம்.
*******************
“நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்” என்பது உடல் நலத்தை பேணிக்காக்கும்போது அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான பழமொழியாகும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நாம் பராமரிக்க விரும்பினால், சரியான உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். பௌதிக உலகில் இது எவ்வளவு உண்மையாக இருக்கிறதோ அதுவே ஆவிக்குரிய உலகிலும் உண்மையாக இருக்கிறது!
4 வது பாக்கியத்தில், ஒரு முரண்பாடாக, நம் கர்த்தர் நமக்கு உணவுத் திட்டத்தைத் தருகிறார், அது நம் உடலுக்கான உணவல்ல, ஆனால் ஆத்துமாவிற்கான உணவாகும். நாம் என்ன “சாப்பிட வேண்டும்” என்பதையும், ஆனால் அதை ஆழ்ந்த வாஞ்சையுடன் சாப்பிட வேண்டும் என்பதையும் கூறுகிறார். அது நீதியாக இருக்கிறது. “பசி” மற்றும் “தாகம்” என்பது ஒரு வலுவான ஆசையைக் குறிக்கும் உருவகங்கள். மேலும் இந்த ஆசைகள் “நீதிக்கு”, அதாவது, சரியான வாழ்க்கைக்கானது. இப்படிப்பட்ட வாஞ்சையைக் காட்டுகிறவர்கள், தேவனின் ஆசீர்வாதத்தையும், அங்கீகாரத்தையும், தயவையும் பெறுகிறார்கள், அவர்கள் “பாக்கியவான்கள்” என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார். மேலும் “நீதியை” ஒரு வாழ்க்கைமுறையாக பின்பற்றுவதற்கான பலனாக “அவர்கள் திருப்தியடைவார்கள்” என்றும் அவர் கூறுகிறார். சாராம்சத்தில், இதுவே இந்த பாக்கியத்தின் செய்தியாகும்.
இந்த பாக்கியத்தில் விவரிக்கப்பட்டுள்ள நீதி என்பதென்ன?
இங்கே விவரிக்கப்பட்டுள்ள நீதியானது கிறிஸ்துவிலுள்ள நம்முடைய நிலைப்பாட்டைக் குறிக்கவில்லை, அதாவது, நாம் கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும்போது தேவனுடன் நாம் வைத்திருக்கும் நீதியான நிலைப்பாட்டைக் குறிக்கவில்லை [ரோமர் 3:22]. மலை பிரசங்கத்தில் கூறப்பட்டுள்ள பாக்கியங்களும், முழு வாழ்க்கைமுறையும் தேவனின் ராஜ்யத்தில் பிரவேசிப்பதற்கான தகுதிகள் அல்ல. மாறாக, அவை ஏற்கனவே அதில் பிரவேசித்தவர்களின் குணாதிசயங்களாக இருக்க வேண்டும். இவை இரட்சிப்பின் விளைவுகளெயொழிய அதற்கான காரணங்கள் அல்ல.
ஆனால், தேவனுடன் நாம் சரியான நிலைப்பாட்டை வைத்திருப்பதை எப்படி உண்மையாக அறிந்து கொள்வது? வேறுவிதமாகக் கூறினால், நாம் உண்மையாகவே இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை எப்படி உறுதியாகக் கூற முடியும்? நம்முடைய விசுவாசம் உண்மையானது என்பதை எப்படி அறிந்து கொள்வது? அதற்கு ஆதாரம் என்ன? இதற்கான பதில்: தேவனின் பார்வையில் நாம் உண்மையிலேயே நீதிமான்களா என்பதை அறிய நம் வாழ்க்கையை ஆராய்வதன் மூலம் கண்டறியலாம். இந்த நீதியே “நடைமுறை” நீதி என்று அழைக்கப்படுகிறது. இயேசுகிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தினால் வரும் நிலையான நீதி எப்போதும் நடைமுறை நீதிக்கு வழிவகுக்கும்! “ஒவ்வொரு நல்ல மரமும் நல்ல கனிகளைக் கொடுக்கும்” [மத்தேயு 7:17]!
நடைமுறை நீதியின் பண்புகள்.
பாருங்கள், நம் வாழ்க்கை பொய்யுரைக்காது. நாம் தேவனுடைய தராதரங்களுக்கு இசைவானதைச் செய்கிறோமா, அதாவது தேவனுடைய பார்வையில் அவை நீதியானதா என்று அவைகள் கூறிவிடும் எனவே, இந்த பாக்கியங்களில் இயேசுகிறிஸ்து எடுத்துரைக்கும் நீதியானது—நடைமுறை நீதியெனப்படுகிறது. உண்மையில், மலைப்பிரசங்கம் முழுவதிலும், தேவனுடைய பார்வையில் நீதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் காட்டுவதன் அர்த்தம் என்ன என்பதை இயேசுகிறிஸ்து விவரிக்கிறார். நாம் மத்தேயு 5-7 ஒரு சிறிய ஆய்வு செய்தால் மேற்கண்ட முடிவிற்கு தான் நாம் வர நேரிடும்.
ஒரு நீதியான வாழ்க்கையானது: ஒப்புரவாகுதல் [மத்தேயு 5:23-24], பாலியல் தூய்மை [மத்தேயு 5:28], திருமண வாழ்வில் உண்மை [மத்தேயு 5:32], பரிசுத்த பேச்சு [மத்தேயு 5:37], பழிவாங்காமல் இருப்பது [மத்தேயு 5:39], சத்துருக்கள் மீது அன்பு காட்டுவது [மத்தேயு 5:44], தேவனை மட்டும் பிரியப்படுத்த நீதியான செயல்களை கடைப்பிடிப்பது [மத்தேயு 6:1], ஜெபிக்கையில் சுய முன்னேற்றத்தை விட தேவனின் மகிமையை நாடுவது [மத்தேயு 6:9-15], பரலோகத்தில் பொக்கிஷங்களை சேமித்து வைப்பது [மத்தேயு 6:19-21], கவலைப்படுவதை விட தேவனை விசுவாசிப்பது [மத்தேயு 6:25-33], மற்றவர்களை இரக்கத்துடன் நியாயந்தீர்ப்பது [மத் 7:1-12], இறுதியாக, இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளின் மீது வாழ்க்கையை கட்டியெழுப்பவது [மத்தேயு 7:24-27], ஆகியவற்றின் மீது பசிதாகம் கொண்டிருக்கும்.
எனவே, நீதியான வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை இயேசு மலைப்பிரசங்கத்தில் நமக்கு விவரமாகச் சொல்கிறார். பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்கிறவர்களாகிய விசுவாசிகளுக்கு நீதியானதைச் செய்ய வேண்டும் என்ற புனிதப் பசியும் தாகமும் இருக்கும். நமது இயற்கையான உடல் ஒவ்வொரு நாளும் உணவையும் தண்ணீரையும் வாஞ்சிப்பது போலவே, ஆவிக்குரிய வாழ்வும் இந்த நீதியை—இந்த உரிமையை எல்லா நேரங்களிலும் வாஞ்சிக்கிறது. அது ஒருபோதும் திருப்தி அடையாது. அதனால்தான் இயேசுகிறிஸ்து இந்த பசி மற்றும் தாகத்தை நிகழ்காலத்தில் எப்போதும் பசி, எப்போதும் தேவனின் பார்வையில் நீதியானதைச் செய்ய தாகங்கொள்ளுதல் என விவரிக்கிறார். இது எப்போதும் இருக்கின்றதும், அதிகரித்து வருகின்றதுமான பசி. இது மதத்தின் வெளிப்புற நிகழ்ச்சி அல்ல, ஆனால் இருதயத்தின் ஆழத்திலிருந்து தேவனின் விருப்பத்திற்குக் கீழ்ப்படிவதற்கான இடைவிடாத ஏக்கம்.
இங்கே பார்க்க வேண்டியது என்னவென்றால், நீதியுள்ள இருதயத்தின் நிலையான அழுகையானது, ஒரு பழைய ஸ்காட்டிஷ் விசுவாசியின் கூக்குரலைப் போன்றது, “தேவனே,ஒரு மன்னிக்கப்பட்ட பாவி எவ்வளவு பரிசுத்தமாக இருக்க முடியுமோ அவ்வளவு பரிசுத்தமாக என்னை மாற்றுவீராக!” தேவனுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படியத் தவறினால், ஆத்துமாவிற்குள் ஆழ்ந்த வேதனை ஏற்படுகிறது. பாவத்தை அறிக்கையிடுவதற்காகவும், சுத்திகரிப்பதற்காகவும், அந்த பாதையில் திரும்புவதற்கான வல்லமைக்காகவும் தேவனிடம் மன்றாடுவதற்கு வழிவகுக்குக்கிற உண்மையான துக்கத்தைத் தவிர வேறு எந்த சாக்குப்போக்குகளும் கிடையாது.
நீதியின் வாழ்க்கை முறைக்கான பலன்.
நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் “அவர்கள் [அவர்கள் மட்டுமே] திருப்தியடைவார்கள்” என்று இயேசு வாக்குக் கொடுக்கிறார். இந்த திருப்தியடைதல் நமக்காக நாம் செய்யக்கூடிய ஒன்றல்ல என்பதை இந்த மொழிநடை குறிக்கிறது. இது தேவன் நம்மில் செய்யும் செயல். தேவன் நம்மை திருப்பதியாக்குகிறார். ஆனால் தேவன் எதைக் கொண்டு நம்மை திருப்தியாக்குகிறார்? இங்கே எதற்கு ஆசைப்பட வேண்டும்? அது நீதியாக இருக்கிறது! ஆகவே, நாம் பசியாகவும் தாகமாகவும் இருக்கும் அந்த நீதியால் தேவன் நம்மை திருப்தியாக்குகிறார்!
ஒரு விதத்தில், இயேசுவைப் பின்பற்றுபவர்களாகிய நாம் கிறிஸ்துவில் உள்ள நமது நிலைசார்ந்த நீதியிலிருந்து வரும் மகிழ்ச்சியை அனுபவிக்கிறோம். எனவே, நாம் அனுபவிப்பதில் ஒரு திருப்தி உள்ளது. ஆனால், தேவனின் பார்வையில் நீதியானதைச் செய்ய நாம் ஏங்கும்போது, அந்த ஆசையைச் செயல்படுத்த பரிசுத்த ஆவியானவர் உண்மையில் நமக்கு உதவுகிறார். அந்த அர்த்தத்தில், அந்த ஏக்கம் திருப்தி அளிக்கிறது. அதுதான் நடைமுறை நீதியின் மகிழ்ச்சி.
ஆனால் உள்ளுக்குள் இருக்கும் பாவத்தின் காரணமாக, இந்த ஏக்கம் தொடர்ந்து திருப்தி அடைவதில்லை. இருப்பினும், எதிர்காலத்தில், இயேசுகிறிஸ்து மீண்டும் வரும்போது, நாம் புதிய சரீரங்களைப் பெறுவோம். மேலும் புதிய சரீரம் இனி பாவம் செய்யாது, இதனால் நித்தியத்திற்கும், நாம் தொடர்ந்து தேவனுடைய கட்டளைகளுக்கு அடிபணிவோம். பின்னர், எப்போதும் இடைவிடாத கீழ்ப்படிதலால் வரும் மகிழ்ச்சியால் நாம் தொடர்ந்து திருப்தியடைவோம்.
கீழ்ப்படிதலின் முழுமையான வாழ்க்கையை, அதாவது எப்போதும் தேவனின் பார்வையில் நீதியானதைச் செய்வதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? தனிப்பட்ட விதத்தில் மட்டுமல்ல, உலகளாவிய விதத்திலும், நாம் நீதியின் அரசாட்சியைக் காணப்போகிறோம். இதை குறித்து பேதுரு இவ்வாறு கூறுகிறார், “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்” [2 பேதுரு 3:13]. இயேசுகிறிஸ்து தம்முடைய ராஜ்யத்தை ஸ்தாபிக்கும்போது, இப்போது வாஞ்சிக்கிறவர்கள், இறுதியில் அந்த வாஞ்சையை முழுமையாக திருப்திப்படுத்திக்கொள்வார்கள் என்பது அவருடைய வாக்குத்ததம்.
நீதியின் வாழ்க்கயை முறையை பின்பற்றுவதினால் கிடைக்கப்பெறும் மூன்று நன்மைகள்.
இந்த பாக்கியம் அழைப்புவிடுக்கும் நீதியான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதனால் பல பலன்களை ஒருவர் பட்டியலிட முடியும் என்றாலும், நான் 3 குறிப்புகளை கருத்தில் கொள்ளும்படிக்கு பட்டியலிட்டுள்ளேன்.
பலன் # 1. இரட்சிப்பின் உண்மையான நிச்சயத்தை நாம் பெற முடியும் [ரோமர் 8:14-16].
குறைந்த அளவு கீழ்ப்படிதல் மூலம் அதிக அளவிலான உறுதியை அடைய முடியாது. யோசித்துப் பாருங்கள். நாம் பெரும்பாலும் பாவத்தில் வாழ்வதாலேயே நம்முடைய இரட்சிப்பை சந்தேகிக்கிறோம், ஒருவர், தங்களின் இரட்சிப்பை குறித்து ஏமாற்றிக்கொள்ளக்கூடும். ஆனால் பொதுவாக, கீழ்ப்படிதல் ஒரு வாழ்க்கைமுறையாக இருக்கும் பட்சத்தில் இரட்சிப்பின் உறுதியை உண்மையாக கொண்டுவருகிறது, இதன் விளைவாக, கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் மகிழ்ச்சியை அனுபவிப்போம்.
பலன் # 2. நாம் நம்முடைய ஜெபங்களுக்கான பதில்களை அனுபவிப்போம்— [சங்கீதம் 66:18, யாக்கோபு 5:16].
நம்முடைய ஜெபங்களுக்கு செவிக்கொடுக்காமல் பாவம் தேவனைத் தடுப்பது போல, நீதியானது அவர் செவிக்கொடுக்கவும் பதிலளிக்கவும் கதவைத் திறக்கிறது. பாவத்தை விட்டு மனந்திரும்ப விரும்பாமல் நாம் பாவத்திலேயே வாழ்ந்தால், தனிப்பட்ட ஜெபமும், விண்ணப்பமும் பயனற்றது. எவ்வாறாயினும், நீதிக்காக பசி மற்றும் தாகம் கொண்ட ஒரு ஆத்துமாவால் ஏறெடுக்கப்படும்போது இந்த ஜெபங்கள் வல்லமையுடையதாக இருக்கும்.
பலன் # 3. நாம் கிறிஸ்துவுக்கு திறம்பட சாட்சிகளாக இருக்க முடியும் [மத்தே 5:16; 1 பேதுரு 2:12].
ஒரு நீதியான வாழ்க்கை மறைந்திருக்க முடியாது. இது நற்செய்திக்கான சிறந்த விளம்பரமாக இருக்கிறது. மாற்றப்பட்ட வாழ்க்கையானது, வாழ்க்கையை மாற்றும் வல்லமை இயேசுகிறிஸ்துவுக்கு இருப்பதைக் காட்டுகிறது.
நீதிக்கான பசி தாகத்தை எவ்வாறு வளர்த்துக் கொள்வது?
இந்த பாக்கியத்தில் நாம் எப்படி வளர்வது? இந்த நீதிக்காக நாம் தொடர்ந்து பசியையும் தாகத்தையும் எவ்வாறு வளர்த்துக் கொள்வது? அதை நாம் 2 வழிகளில் காண்போம்.
1. நாம் தேவன் மீது ஒரு வாஞ்சையை ஆழமாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.
முதலாவதாக, நீதியானதைச் செய்வதற்கான பரிசுத்தமான வாஞ்சையானது நீதியுள்ளவராகிய தேவன் மீது ஆழமான வாஞ்சையிருக்கும்போது வருகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் நாம் நீதியான வாழ்க்கையைப் பின்பற்றுவது மட்டுமல்ல, நீதியின் தொகுப்பாகவும் ஆதாரமாகவும் இருக்கும் தேவனையே பின்தொடர வேண்டும். இதுவே கடந்த காலத்தில் தேவனுடைய மக்களின் மனப்பான்மையாக இருந்தது.
சங்கீதம் 42:1 “மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.”
சங்கீதம் 63:1 “தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.”
ஏசாயா 26:9 “என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.”
எனவே, நாம் தேவனுக்காக வாஞ்சைக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக கொடுப்பவரே நம் இருதயத்தின் விருப்பமாக இருக்க வேண்டும்.
2. நாம் தேவனுடைய வார்த்தைக்கான வாஞ்சையை தீவிரமாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக, தேவனுக்கான நமது வாஞ்சையின் இந்த அதிகரிப்பு, அவருடைய வார்த்தைக்கான நம் வாஞ்சையையும் அதிகரிக்க வேண்டும். ஏன் அப்படி அதிகரிக்க வேண்டும்? இதை ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். நாம் ஒருவரை நேசிக்கும்போது, அவர்கள் விரும்புவது, விரும்பாதது போன்றவைகளை பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.
அதுபோலவே, நாம் தேவனை நேசித்து, அவருக்கு எது பிடிக்கும், எது அவருக்குப் பிடிக்காது என்பதை அறிய விரும்பினால், இந்த சத்தியங்களை நமக்கு வெளிப்படுத்தும் ஒரே ஆதாரமாகிய வேதத்திற்கு நாம் செல்ல வேண்டும். இந்த பாக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நீதியானது தேவனின் பார்வையில் நீதியானதைச் செய்வதைப் பற்றி பேசுவதால், தேவனின் பார்வையில் நீதியானதைக் காணக்கூடிய ஒரே இடம் அவருடைய பரிசுத்த வார்த்தையில் உள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீதியின் மீது பசி மற்றும் தாகம் கொண்டவர்களுக்கு தேவனுடைய வார்த்தை அன்றாட உணவாக இருக்க வேண்டும். அதனால்தான், தேவனுடைய மக்கள் தொடர்ந்து அவருடைய வார்த்தையை விரும்புவதையும், அதில் மகிழ்ச்சியடைவதையும் பற்றி வேதத்தில் அடிக்கடி வாசிக்கிறோம்.
சங்கீதம் 119:2 “உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எக்காலமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் தொய்ந்து போகிறது.”
யோபு 23:12 “அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்.”
எரேமியா 15:16 “உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது.”
மத்தேயு 4:4 “அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.”
1 பேதுரு 2:1-3 “இப்படியிருக்க, கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால்,சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.”
தேவனுடைய வார்த்தையின் மீது நாம் எவ்வளவு அதிகமாக பசியோடு இருக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் கீழ்ப்படிவோம். நாம் எவ்வளவு அதிகமாக கீழ்ப்படிகிறோமோ, அவ்வளவு அதிகமாக இந்த நீதியின் திருப்தியை அனுபவிப்போம். இதன் விளைவாக, நாம் தேவனுடைய வார்த்தைக்காக அதிக பசியும் தாகமும் அடைவோம். இந்த சுழற்சியானது தொடர்ந்துக்கொண்டேயிருக்கும்.
அவ்வாறே, நாம் எந்த அளவுக்கு கீழ்ப்படியாமையில் நடக்கிறோமோ, அந்தளவுக்கு தேவனுடைய வார்த்தைக்கான பசியும் தாகமும் குறையும். மேலும் தேவனுடைய வார்த்தைக்கான பசி மற்றும் தாகம் குறைவாக இருந்தால், கீழ்ப்படிதல் குறைவாக இருக்கும். எதிர்மறையான அர்த்தத்தில்இந்த விஷயத்தில், ஒருவர் மற்றவருக்கு உணவளிக்கிறார்.
எனவே, தேவனுக்கான வாஞ்சை அவருடைய வார்த்தைக்கான வாஞ்சைக்கு வழிவகுக்கிறது – இவையே நமது நீதிக்கான பசி மற்றும் தாகத்தில் வளரும் 2 வழிகள். உங்களுக்கு அப்படி ஒரு வாஞ்சை இருக்கிறதா? நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் எதை சாப்பிடுகிறீர்கள். உங்கள் இருதயத்தின் விருப்பம் என்ன? ஆசைகள் பொய் சொல்லாது!
இந்த நீதிக்குப் பிறகு பசி மற்றும் தாகத்திற்கு ஒரு வேண்டுகோள்.
இந்தியாவில் ஒருவர் மரித்தால், ஒரு குறிப்பிட்ட மதத்தினர் செய்யும் ஒரு வழக்கம் உள்ளது. என் தந்தை மரித்தபோது சிறுவயதில் [நான் இன்னும் இரட்சிக்கப்படாதபோது] அதைச் செய்ததை நினைவுகூர்கிறேன். ஒருவர் ஒரு பிடி அரிசியை எடுத்து மரித்தவரின் வாயில் போடுவார். பின்னர் அந்த உடல் புதைகுழிக்கு கொண்டு செல்லப்படும், அந்த அரிசியும் உண்ணப்படாமல் இருக்கும். எதற்கு அப்படி? ஏனென்றால், மரித்த உடலுக்கு பசியோ தாகமோ ஏற்படாது!
அதேபோல், ஆவிக்குரிய ரீதியில் மரித்தவர்களுக்கு நீதியின் மீது பசி மற்றும் தாகம் இருக்காது. எனவே, நீங்கள் ஒரு விசுவாசி என்று சொல்லிக் கொண்டாலும், தேவனின் பார்வையில் நீதியானதைச் செய்ய ஆசைப்படாவிட்டால், இந்த முக்கியமான கேள்வியை உங்களை பார்த்து நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்: நான் ஆவிகுரிய ரீதியில் உயிருடன் இருக்கிறேனா?
தம்மைப் பின்பற்றுபவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் வாழ்க்கையானது, அவருடைய போதனையோடு பொருந்துகிறதா என்பதைப் பார்க்க, மலைப் பிரசங்கமானது இயேசுகிறிஸ்து நம் முன்னால் வைத்திருக்கும் ஒரு கண்ணாடி என்பதை நினைவில் கொள்ளுங்கள். மலைப்பிரசங்கத்தின் முடிவில் அவருடைய வார்த்தைகள் இதைத் தெளிவுபடுத்துகின்றன, “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை” [மத்தேயு 7:21]. பிதாவின் விருப்பம் என்னவென்றால், அவருடைய பார்வையில் நீதியானதைச் செய்வதற்காக நமக்கு நீதிக்கான ஒரு பரிசுத்த பசியும் பரிசுத்த தாகமும் இருக்க வேண்டும்—நமக்கு அந்தப் பசி இல்லை என்றால், நாம் அவருடைய பிள்ளைகள் என்று சட்டப்பூர்வமாகக் கூற முடியாது.
நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளக் கூடாது. நம்முடைய வாழ்க்கை முறை நீதியை அடையாளப்படுத்தவில்லை என்றால், நாம் தாமதிக்காமல், மனந்திரும்பி, நம்முடைய பாவங்களுக்காக மனம்நொருங்கி கிறிஸ்துவிடம் உண்மையாக வந்து, விசுவாசத்தால், அவர் அளிக்கும் மன்னிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படித்தான் நாம் தேவனுடைய நீதியைப் பெற முடியும். அன்றிலிருந்து, நாம் வாழும் வரை நமது அன்றாட வாழ்வில் மேலும் மேலும் இந்த நீதிக்காக வாஞ்சிக்கும்படி பரிசுத்த ஆவியானவரால் தூண்டப்படுவோம், அப்போது அவர் நம்மை திருப்தியாக்குவார். கிறிஸ்து மீண்டும் வரும்போது, நாம் நித்தியமாய் தேவனைப் பிரியப்படுத்துவோம், அந்த முழுமையான திருப்தியை நித்தியமாய் அனுபவிப்போம்.
ஒரு எச்சரிக்கை வார்த்தை.
இந்த வாழ்க்கை முறையில், நீதிக்கான இந்த பசி தாகத்தை நிராகரிப்பவர்கள் எதிர்காலத்தில் பசி தாகத்தை அனுபவிப்பார்கள். இருப்பினும், அது நரக வேதனையின் விளைவாக ஏற்படும். அது துன்பத்திலிருந்து நிவாரணத்திற்கான பசி தாகமாக இருக்கும் [லூக்கா 16:24]. அந்த பசியும் தாகமும் ஒருபோதும், என்றென்றும் திருப்தியடையாது. என்ன ஒரு பயங்கரமான வாழ்க்கை!
நாம் என்ன சாப்பிடுகிறோம். பாவம் நம் உணவாக இருந்தால், அதன்இறுதி விளைவு நரகத்தில் பயங்கர துன்பமாக இருக்கும். மறுபுறம், நீதியே நமது உணவாக இருந்தால், இறுதி முடிவு பரலோகத்தில் மிகப்பெரிய பேரின்பம். அந்த இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருக்கிறது. நாம் எதைத் தேர்ந்தெடுக்கப்போகிறோம்? பயங்கரமான துன்பமா அல்லது மகத்தான மகிழ்ச்சியா? இயேசுகிறிஸ்து நம்மை அழைப்பதை பின்தொடர்வதன் மூலம் மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுக்க தேவன் நமக்கு உதவுவாராக. நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் திருப்தியடைவார்கள்.